Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2017

இஸ்ரோ மூலமாக இந்தியாவுக்கு கோடி கணக்கில் வருமானம்.. இதற்கு எல்லாம் யார் காரணம்..?


 இந்தியா தனது முதல் ராக்கெட்டினை விண்ணில் ஏவிய பிறகு உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க துவங்கியது. ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் துவங்கப்பட்ட நேரத்தில் ராகேட் உதிரிப் பாகங்களைச் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதை வளர்ந்த நாடுகளின் ஊட்டங்கள் கிண்டல் செய்தன.

இது அத்தனையும் பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் செயற்கைக்கோள்களையும் இந்தியாவில் இருந்து ஏவும் அளவிற்கு இஸ்ரோ வளர்ந்துள்ளது. இஸ்ரோவின் இந்த வளர்ச்சியினால் பிற நாட்டின் செயற்கைகோள்களை விண்ணிற்குக் கொண்டு செல்வதன் மூலமாகப் பல லட்சம் கோடிகளை ஒவ்வொரு ராக்கெட்டினை விண்ணில் செலுத்தும் போது விண்வெளி நிறுவனம் பெற்று வருகின்றது.

2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளிக்கு ராக்கெட்டினை செலுத்தும் போது விண்வெளி நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துக்கோண்டே வருகின்றது. உலகளவில் அதிகச் செயற்கை கோள்களை விண்ணுக்குச் செலுத்தும் நாடாகவும் இந்திய வளர்ந்து வருவதால் உலகின் பிற நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இஸ்ரோவை நாடி வந்து பல கோடிகள் செலவழித்துத் தங்களது செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகின்றனர், இதனால் இந்தியா அரசுக்கு வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாபட்டா
1975 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் நாள் இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆர்யாபட்டாவை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த நிகழ்வைத் தொடர்ந்து சூரிய இயற்பியல், விண்ணியல், எக்ஸ் ரே வானவியல் உள்ளிட்ட துறைகளில் மதிப்பு மிக்க ஆய்வுகளைச் செய்து வந்தது.

ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் படிப்படியாகப் பலம் பெற்று வளர்ந்து இன்று ஒரே நாளில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை இப்போது சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாகிட காரணகத்தா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சில அறிவியல் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகிட முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர் டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாய் ஆவார். அவரது ஓய்வில்லாத உழைப்பு இன்று அவரை இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையாகத் திகழச் செய்கிறது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிந்தைய போராட்டக் காலங்களிலிருந்து இன்றைய வானவியல் அறிவியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதற்கு முழுமுதற் காரணம் அவரது வாழ்நாள் உழைப்பே என்றால் மிகையாகாது.

திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கமூட்டியவர்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கமூட்டி நாட்டின் சிறந்த மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகிய டாக்டர் சாராபாய் பற்றிய வியப்பூட்டும் சில அரிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

  சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்திலே பிறந்தவர்
ஜவுளித் தொழிலின் முன்னோடி தொழிலதிபரும், தீவிர காந்திய பற்றாளருமான சேத் அம்பாலால் சாராபாய்க்கு, எட்டாவது குழந்தையாக 1919ல் டாக்டர் சாராபாய்ப் பிறந்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அம்பாலால், சபர்மதி ஆசிரமம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த போது கணிசமான பொருளுதவி செய்தார். மேலும், அவரது சகோதரியான மிருதுளா சாராபாய் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மதிப்புமிக்க ஆலோசகர் டாக்டர் சி வி ராமன்
ஒரு அசாதாரண இளைஞனான டாக்டர் சாராபாய் குஜராத்தின் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை முடித்த பின்னர் மேற்படிப்புக்காகக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்றார். இருப்பினும், இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது அவர் நாடு திரும்பினார். அவரது புலமைக்கான ஆலோசகர் யார் தெரியுமா? எல்லாக் காலங்களிலும் கொண்டாடப்படுபவரும், நோபெல் பரிசு வெற்றியாளருமான டாக்டர் சி வி ராமன்தான் அவர். 1947 ல் தனது ஆராய்ச்சிப் படிப்பினை முடித்தார். வெப்பமண்டல பிரதேசங்களில் விண்வெளி கதிர்வீச்சு குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

 இந்திய விண்வெளி திட்டத்திற்கு அச்சாரம்
ஷாஹிபாக் அம்தாவதில் இருந்த ஆவலைத் தூண்டுகிற ஓய்வு இல்லத்தின் ஒரு சிறிய அறை அவரது அலுவலக அறையானது. புத்திசாலி இளைஞனான சாராபாய் அந்த அறையில்தான் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை உருவாக்கித் தொடங்கினார்.


இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடம்
இந்தியா சுதந்திரம் பெற்றபோது தனது ஓய்வற்ற உழைப்பினைக் கொண்டு டாக்டர் சாராபாய் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை 1947 ல் அமைத்தார். இன்று விண்வெளி மற்றும் அதனைச் சார்ந்த அறிவியல் கல்வி நிறுவனங்களில் முதலிடத்திலும், மிக முன்னேற்றமான இடத்திலும் அது உள்ளது.
1952 ல் அவரது நண்பரும் ஆலோசகருமான டாக்டர் சி வி ராமன் புதிய இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய அரசை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துவக்க சம்மதிக்க வைத்தபோது அவருக்கு வயது 28. நம்மில் பலர் 20 வயதுகளில் சுயமாக முடிவெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் டாக்டர் சாராபாய் தனது 28 வயதில் மிகச் சாதுரியமாக வாதாடி விண்வெளி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்கினார். ரஷ்யா ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவியபோது வளரும் நாடான இந்தியாவும் நிலவுக்குச் செல்ல முடியும் என்று கூறி அரசாங்கத்தைச் சம்மதிக்க வைத்தார். இப்படித்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ராக்கெட்
இந்தியா டாக்டர் சாராபாய் போன்ற ஆதாரமான விஞ்ஞானியை இது வரை கண்டதில்லை. 1963 ம் ஆண்டு 21 ம் நாள் அவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது விஞ்ஞானிகள் குழுவும் இணைந்து ஒரு சிறிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவினர். திருவனந்தபுரத்தின் ஒரு தேவாலயத்தின் பாதிரியாரைச் சம்மதிக்க வைத்து தும்பா என்ற சிறிய கிராமத்தில் இந்தச் சாதனையைச் செய்தனர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனம் என்று அழைக்கப்படுகிற தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் படிப்படியாக மேம்படுத்தினர். இந்த வெற்றிகரமான செயற்கைக்கோள் ஏவியதற்குப் பிறகு வீட்டிற்குச் சாதாரணமான தந்தி ஒன்றை அனுப்பினார். குறிப்பிடத்தக்க ராக்கெட் காட்சி - என அதில் கூறப்பட்டிருந்தது.

 
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை பணியமர்த்தினார்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு நேர்முகத்தேர்வு செய்தது மட்டுமல்லாமல் டாக்டர் கலாமின் ஆரம்பக் காலச் செயல்பாடுகளின்போது அவருக்கு முக்கிய ஆலோசகராகவும் இருந்து செயல்பட்டார்.

தான் இத்துறைக்குப் புதியவராக இருந்தபோதும் டாக்டர் சாராபாய் தன்மீது சிறப்புக் கவனம் செலுத்தி தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக டாக்டர் கலாம் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை கலாம் இவ்வாறு கூறினார். என்னை விக்ரம் சாராபாய்தான் கண்டுபிடித்தார். அவர் என்னை இளம் விஞ்ஞானியாகக் கண்டெடுத்தபோது நான் அதிகமாக எந்தத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் கடினமாக உழைப்பேன், அந்த நேரத்தில் அதற்குரிய அறிவையும் பெற்றிருந்தேன். அவர் எனக்குச் சுயமாக வளரக்கூடிய பொறுப்பினை கொடுத்திருந்தார். அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் என்னுடைய வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து என்னுடைய வெற்றிகளிலும் தோல்விகளிலும் என்னுடனேயே இருந்தார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா செலுத்துவதில் முக்கியப் பங்கு
துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய 52 வது வயதில் 1971 ல் இறப்பதற்கு முன்பே இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் கட்டமைப்பினைத் தொடங்கியிருந்தார். வான்வெளி கதிர்வீச்சுகள், விண்ணின் மேலடுக்கு சூழ்நிலை குறித்த அவரது பணிகள் அறிவியல் உலகின் மைல் கற்களாகும்.

இந்தியாவிற்குக் கேபிள் டிவி கொண்டு வந்தவர்
நீங்கள் கேபிள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பவராக இருந்தால் நீங்கள் டாக்டர் விக்ரம் சாராபாய்க்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். 1975 ல் நாசாவின் ஒத்துழைப்போடு செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி பரிசோதனையை மேற்கொண்டார். இதுவே கேபிள் டிவி யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உருவாக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிறுவனங்களை அமைத்திட காரணமாயிருந்ததைப்போலவே அகமதாபாத்தில் இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார்.இன்று அந்த நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய தொழில் முயற்சிகளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.