Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

எலிவால் கூந்தலுக்கு எளிய சிகிச்சை


கூந்தல் உதிர்வு என்பது ஒருவருக்கு எத்தனை கவலைக்குரிய விஷயமோ, அதைவிட அதிக கவலை தரக்கூடியது கூந்தல் மெலிவு. அடர்த்தியான கூந்தல்தான் அழகு. எலிவால் போன்ற மெலிந்த கூந்தல் ஒருவரது தோற்ற அழகையே பாதிக்கக் கூடியது.

கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால் தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். ஒரு மாதத்தில் அரை இஞ்ச் அளவுக்குக் கூந்தல் வளர்வது இயல்பான கூந்தல் வளர்ச்சி சுழற்சி. வயதாக ஆக இது குறையும். கூந்தலுக்கு வயதாக ஆக, ஒரு கட்டத்தில் அது ஓய்வெடுக்கிற நிலைக்கு வந்து விடும். ரெஸ்ட்டிங் ஸ்டேஜ் எனப்படுகிற இதில், கூந்தலானது வளராமல் அப்படியே இருக்கும். இதன் விளைவாக கூந்தல் சீக்கிரமே உதிரும். மறுபடி வளராது. கூந்தல் மெலிவின் தீவிரத்தைப் பொறுத்தே கூந்தல் உதிர்வின் தன்மையைக் கணிக்க முடியும். வயதாகிற காரணத்தால் மட்டுமின்றி, கர்ப்ப காலம், ஊட்டமில்லாத உணவு, மண்டைப் பகுதியில் ஏற்படுகிற தொற்று, மருத்துவக் காரணங்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாறுதல்கள், பரம்பரைத் தன்மை மற்றும் சில வகை மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்வும் மெலிவும் ஏற்படலாம்.

ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் (Female pattern  hair loss) Di hydro testosterone (DHT) என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை பாரம்பரியமாகத் தொடரக்கூடியது. ஃபாலிக்கிள் என சொல்லப்படுகிற கூந்தலின் நுண்ணறைப் பகுதி வரை ஊடுருவி, கூந்தலை மெலியச் செய்து, புதிதாக வளர்வதையும் தடுக்கக்கூடியது. சில பெண்களுக்கு இது மிக மிக மெதுவாக நடைபெறும். வேறு சிலரோ மிக வேகமாக மாற்றத்தை உணர்வார்கள். 35 வயதுக்கு மேலான 40 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.
கூந்தல் மெலிவுக்கான வேறு சில காரணங்கள்..

Telogen Effluvium...  மன அழுத்தம், மருத்துவ சிகிச்சை, பூப்படைதல் அல்லது கர்ப்பம் போன்ற நிகழ்வுகளால் உண்டாகிற ஹார்மோன் மாற்றம் என எல்லாம் இதில் அடக்கம். Diffuse Hair loss... இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான பிரச்னைகள், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுவது. டெலோஜன் எஃப்லுவியம் (Telogen Effluvium) என்பது பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைக்கான மிகப் பரவலான காரணம். இதில் மண்டைப் பகுதியில் பரவலாக முடி உதிர்வு தென்படும். தீவிர மன அழுத்தம்   அல்லது ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவு பலருக்கும் இந்த அறிகுறியைக் காட்டும். எந்த வயதிலும் ஏற்படலாம்.

திடீரென ஆரம்பிக்கிற இந்தப் பிரச்னை சிலருக்கு ஆறு மாதங்களில் தானாகச் சரியாகலாம்   அல்லது சிலருக்கு மிக மோசமான நிலைக்கும் மாறலாம். பெரும்பாலும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு சொட்டை, வழுக்கை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கு பதில் கூந்தல் மெலிவே அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் அதிக மனப்பதற்றம் கொண்டவர்களாகவோ, நரம்புக் கோளாறுகள் உள்ளவர்களாகவோ இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னைக்கும் கூந்தல் வளர்ச்சி சுழற்சி நிலைகளுக்கும் தொடர்புண்டு. கூந்தலின் வளர்ச்சி நிலையை ‘அனாஜன்’ என்கிறோம். இது 3 வருடங்களுக்கு நீடிக்கும். கூந்தல் வளராமல் அப்படியே இருக்கும் நிலையை ‘டெலோஜன்’ என்கிறோம்.

இது 3 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த டெலோஜன் ஸ்டேஜில் கூந்தலானது அதன் ஃபாலிக்கிளில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். புதிதாக அந்த இடத்தில் இன்னொரு கூந்தல் முளைத்து, பழைய கூந்தலை வெளியே தள்ளினால்தான் உதிரும். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் 15 சதவிகித முடியானது டெலோஜன் ஸ்டேஜில் இருக்கும். அளவுக்கதிகமான மன அழுத்தமானது, இந்த 15 சதவிகிதத்துக்கும் அதிகமான முடியை டெலோஜன் ஸ்டேஜுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விடும். மூன்றே மாதங்களில் இப்படி டெலோஜன் நிலைக்கு வந்த அத்தனை முடியும் கொட்டிப் போகும். புதிய முடி வளரத் தொடங்கினால் மெலிந்த கூந்தலானது மறுபடி அடர்த்தியாக மாறும். மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னையை நிச்சயம் எப்போதாவது கடந்திருப்பார்கள்.

ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா (Androgenetic alopecia) என்பது 40 வயதுக்கு மேலான 50 சதவிகிதப் பெண்களை பாதிக்கக் கூடியது. மெனோபாஸ் காலத்துக்கு முன்பு 13 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்குக் காரணம் Di Hydro Testosterone (DHT) எனப்படுகிற ஒருவித ரசாயனம். இது ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜனில் இருந்து தயாராவது. 5 ஆல்ஃபா ரெடக்டேஸ் எனப்படுகிற ஒருவித என்சைமின் செயல்பாட்டினால் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமே இது உற்பத்தியாகும். இந்த என்சைம் அதிகமுள்ளவர்களுக்கு ஞிபிஜி ரசாயனமும் அதிகம் உருவாகும். இது அதிகமானால் கூந்தல் மெலிவுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு ஏற்படுகிற கூந்தல் உதிர்வானது, ஆண்களுக்கு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.   ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழக்கலாம். கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். கூந்தலில் புரதம், கொழுப்பு, நீர் மற்றும் கார்போஹைட்ரேட் எல்லாம் உண்டு.  ஓட்ஸ், வெல்லம், ஈரல் மற்றும் முழு தானியங்கள்   போன்றவை கூந்தல் உதிர்வைத் தடுக்கும் உணவுகள். வயதின் காரணமாக கூந்தல் உதிர்வும், மெலிவும் சகஜம் என்றாலும், சரியான ஊட்டம் நிறைந்த உணவுகள் கூந்தல் உதிர்வு மெலிவு மற்றும் வழுக்கைப் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

காரணமே தெரியாமல் முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்னைகளை உணர்பவர்கள் உடனடியாக ஒரு ட்ரைகாலஜிஸ்டை அணுகிக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மினாக்சிடில் என்கிற ஒரு தயாரிப்பின் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.