Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

ஹேய் நீ மகா புத்திசாலி!-குட்டீஸ் கதை


கரூர் என்ற கிராமத்தில் விருத்தம்மாள் என்ற பாட்டி இருந்தாள். அந்த பாட்டி சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடந்தி வந்தாள். அந்தக் கடையில் வடைகளை சுட்டு வியாபாரம் செய்து வந்தாள்.
ஒருநாள்-
அந்தப் பக்கமாக காகம் ஒன்று பறந்து வந்தது. அந்தக் காகம் பாட்டி கடையில் இருக்கிற வடைகளைப் பார்த்தது. அந்த வடைகளில் ஒன்றை எப்படியாவது சாப்பிட்டு விட வேண்டும் என்று துடியாய் துடித்தது காகம்.
பாட்டி திரும்பியபடி பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த நேரத்தில், வேகமாக வந்து வடையை எடுத்துச் செல்ல முயற்சித்தது காகம்.
அதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த புறா, "லபக்' என்று வடைக் குவியலில் இருந்து ஒரு வடையைத் தூக்கிச் சென்றது. உடனே, காகம் வடையைத் தூக்கச் சந்தர்ப்பம் கிடைக்காததால் புறாவின் பின்னாலேயே பறந்து சென்றது. புறாவும், காகமும் ஓர் ஆலமரத்தை வந்தடைந்தன.
"புறாவே, நான் வடையைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் நீ முந்திக் கொண்டாயே,'' என்றது காகம்.
நான் வடையைத் தூக்கிச் சென்றால் என்ன? நீயும் மற்றொரு வடையை தூக்கிச் செல்ல வேண்டியதுதானே, எதற்கு என் பின்னால் பறந்து வந்தாய்? இந்த வடையில் பங்கு கேட்க வந்துள்ளாயா?'' என்று கேட்டது புறா.
"புறாவே, நான் வேறு எதற்காக வந்துள்ளேன் என்று நினைத்தாய்? நீ எனக்கு சிறு துண்டு வடையைக் கொடுத்தாயானால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இல்லையென்றால், உன் பின்னாடியே நான் அலைந்து கொண்டிருப்பேன்,'' என்றது காகம்.
"காகமே, இப்படி என்னிடம் பிடிவாதம் காட்டுகிறாயே, சரி... சரி... நீ கேட்டுக் கொண்டபடியே நான் உனக்குச் சிறு துண்டு வடையினை தருகிறேன். உனக்குத் திறமையிருந்தால், நீ அந்தப் பாட்டியின் கடையில் இருந்து பெரிய வடையினை எடுத்துக் கொள். இனிமேல், என் பின்னால் அலைகிற வேலையினை வைத்துக் கொள்ளாதே,'' என்றது புறா.
புறா கொடுக்கின்ற வடையினை காகமும் வாங்கிக் கொண்டது. அந்த வடையினை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது காகம்.
மறுநாள் பாட்டி கடையை திறக்கும் முன்னரே, எப்போது வடை போட்டு வைப்பாள் என்று காவல் இருந்தது காகம். சிறிது நேரத்தில் பாட்டி வந்து கடையைத் திறந்து வடை போட ஆரம்பித்தாள்.
வடை கமகமவென்று மணம் வீசியது. சற்றுத் தொலைவில் இருந்து வடையைப் பார்த்த காகம், எப்படியாவது வடையை எடுத்திட வேண்டுமென்று முடிவு செய்தது.
அந்த நேரத்தில் வடை சுட்டுக் கொண்டிருந்த பாட்டியோ சற்று தூரத்திலுள்ள காகத்தை கவனித்து விட்டார்.
"இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் காகமானது கடைக்குள் புகுந்து வடையை எடுக்க வரும். நாம் அந்த காகத்தை, சும்மா விடக் கூடாது. எப்படியாவது பிடித்துவிட வேண்டும்' என்று முடிவு செய்தாள்.
வடையை சுட்டபடியே கடையில் இருந்த கோணிப்பையைத் தன்வசம் எடுத்து வைத்துக் கொண்டாள் பாட்டி. காகமோ அதனைக் கவனிக்கவில்லை. அது வடையின் மீதே மிகவும் குறியாக இருந்தது.
திடீரென மின்னல் வேகத்தில் கடையின் உள்ளேயிருக்கிற வடையை எடுக்க வந்தது காகம். தாமதிக்காத பாட்டி தன் கைவசம் இருந்த கோணிப் பையைக் காகத்தின் மீது போட்டு அமுக்கிப் பிடித்தாள். கோணிப்பையில் வசமாகச் சிக்கிக் கொண்டது காகம்.
உடனே பாட்டி அந்த கோணிப் பையில் சிக்கிய காகத்தை ஒரு கூண்டில் அடைத்து விட்டாள். சிறிது நேரத்தில் அங்கே ஒரு புறா வந்தது. அந்தப் புறாவானது வழக்கம்போல் பாட்டியின் கடையில் வடையை எடுக்க என முடிவு செய்தது.
இன்னும் சிறிது நேரத்தில் புறாவும் வடையைத் தூக்க வரலாம். நாம் அந்தப் புறாவையும் பிடித்துவிட வேண்டும் என முடிவு செய்த பாட்டி, கோணிப்பையை எடுத்து தன் கைவசம் வைத்துக் கொண்டாள்.
புறா மின்னல் வேகத்தில் கடையின் உள்ளே நுழைந்தது. புறாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்த பாட்டியும், உடனடியாகத் தன் கையில் இருந்த கோணிப் பையினைப் புறாவின் மீது போட்டாள்.
புறா கோணிப்பையின் உள்ளே அகப்பட்டுக் கொண்டது. உடனே, புறாவை அமுக்கிப்பிடித்து கூண்டில் அடைத்து விட்டாள் பாட்டி. காகமும், புறாவும் ஒரே கூண்டில் இருந்தன.
"காகமே, நீ இங்கே இருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீ இங்கே இருப்பது எனக்கு ஆச்சரியத்தை எற்படுத்துகிறது,'' என்றது புறா.
"புறாவே, இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது? நாம் இருவருமே பாட்டியின் கடையில் இருந்து வடையைத் திருட முயற்சித்தோம். பாட்டியோ தந்திரமாக நம்மைப் பிடித்து, கூண்டினுள் அடைத்துவிட்டாள். நாம் இருவருமே வடைக்காக வேண்டி கூண்டினுள் அடைப்பட்டுக் கிடக்கிறோம். பாட்டி மனது வைத்தால்தான் நம்மை வெளியே விட முடியும். அதுவரையிலும் கூண்டின் உள்ளே அடைப்பட்டுக் கிடக்க வேண்டியதுதான்,'' என்றது காகம்.
"காகமே, நான் உனக்கு வடை கொடுத்த நேரம் பாட்டியின் கூண்டில் அகப்பட்டுக் கொண்டேன், நீ ராசியில்லாதவன்,'' என்றது புறா.
"உனக்கு என்ன திமிர். என்னை நீ ராசியில்லாதவன் என்றா கூறினாய்? இதோ இப்போதே நான் யாரென்பதை உனக்கு நிரூபிக்கிறேன்,'' என்று கூறியபடி புறாவின் மீது பாய்ந்து கொத்தத் தொடங்கியது காகம்.
புறாவும், காகமும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள் பாட்டி. இந்தக் காகமும், புறாவும் சண்டையிட்டு கூண்டுக் குள்ளேயே இறந்து விடக்கூடாது என்று நினைத்த பாட்டி உடனடியாக அந்தக் கூண்டைத் திறந்து விட முடிவு செய்தாள். தான் வடை சுடுவதை நிறுத்திவிட்டு, கூண்டைத் திறந்தாள் பாட்டி.
"அப்பாடா, பாட்டி கூண்டைத் திறந்து விட்டாள். நாம் உயிர் பிழைத்தால் போது மென்று பறந்து சென்றது புறா.
காகமோ அமைதியுடன் கூண்டை விட்டு வெளியே வந்தது. அப்படியே "லபக்' என்று ஒரு வடையைத் தூக்கியபடியே கூண்டை விட்டுப் பறந்து சென்றது.
இதை எதிர்பாராத பாட்டியோ, "ஐயோ, நாம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொண்டோம். ஆனாலும் இந்தப் பொல்லாத காகமானது வடையைத் தூக்கிச் சென்று விட்டதே...' என்று புலம்பினாள் பாட்டி.
காகம் வடையைத் தூக்கியபடி ஓர் மரத்தின் மீது வந்து அமர்ந்தது. அந்த இடத்தில் புறாவும் வந்தது.
"காகமே, நீ என்னோடு சண்டைக்கு வந்தாய். கூண்டிலிருந்து நீ வெளியே கிளம்புகின்ற நேரத்தில் வடையையும் தூக்கி வந்துவிட்டாய்!
"கூண்டுக்குள் நான் இருந்தபடியால் உன்னோடு சரியாக சண்டையிட முடியவில்லை. இப்போது நான் உன்னோடு சண்டையிட்டு வெற்றி பெற்று, உன்னிடம் இருக்கிற வடையைக் கைப்பற்றப் போகிறேன்,'' என்றது.
"முட்டாள் புறாவே, நாம் இருவரும் கூண்டில் இருந்து தப்பிக்க வேண்டியே உன்னோடு சண்டையிடுவது போன்று நான் நடித்தேன். அதனைப் புரிந்து கொள்ளாத நீ, நான் உன்னோடு உண்மையிலே சண்டையிடுகிறேன் என்று நினைத்துக் கொண்டாய். நாம் கடைக்குள் வடையை எடுக்க வேண்டியே நுழைந்தோம். அந்த லட்சியத்தை நிறைவேற்றாமல் திரும்பலாமா? அதனால் அந்த லட்சியத்தை நிறைவேற்ற வேண்டி, கூண்டை விட்டு வெளியே பறந்து செல்கின்ற நேரத்தில் வடையைத் தூக்கி வந்து விட்டேன். நாம் எப்போதும் நம்முடைய லட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த வடையில் உனக்கும் பாதி தருகிறேன்,'' என்றது காகம்.
காகத்தின் செயலைப் பார்த்து ஆச்சரியமடைந்தது புறா.
"காகமே, உன்னை நான் விரோதியாக நினைத்தேன். ஆனால், நீ மகா புத்திசாலியாக இருக்கிறாய்?'' என்று காகத்தைப் பாராட்டியது புறா.
குட்டீஸ்... இந்த காகமே தன் லட்சியத்தில் உறுதியாய் இருக்கும் போது நீங்கள் எப்படி?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.