Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

தொழிற்சாலைப் பாதுகாப்புக்கான பட்டயப்படிப்புகள்!


இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் (Ministry of Labour & Employment) செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கான ஆலோசனைச் சேவை மற்றும் தொழிலாளர் கல்வி நிறுவனங்களுக்கான பொது இயக்குநரகம் (Directorate General Factory Advice Service & Labour Institutes) தொழிலாளர் கல்வி நிறுவனங்களை (Labour Institutes) நடத்திவருகிறது. இங்குத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கான, தொழிற்சாலைப் பாதுகாப்புக்கான பட்டயப் படிப்புகளில் (Industrial Safety Diploma Courses) சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிலாளர் கல்வி நிறுவனங்கள்: மத்தியத் தொழிலாளர் கல்வி நிறுவனம் (Central Labour Institute) மும்பையிலும், மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனங்கள் (Regional Labour Institutes) சென்னை, பரிதாபாத், கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், டையூ & டாமன் மற்றும் தாத்ரா & நகர்ஹவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மும்பையில் மத்தியத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குச் சென்னையில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், சண்டிகர் மற்றும் டெல்லி ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பரிதாபாத்தில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராஞ்சல், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்குக் கான்பூரில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கொல்கத்தாவில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பட்டயப்படிப்புகள்: இக்கல்வி நிறுவனங்களில் ஒரு ஆண்டுக் கால அளவிலான, தொழிற்சாலைப் பாதுகாப்பு மேம்பட்ட பட்டயப்படிப்பு (Advanced Diploma in Industrial Safety - ADIS), தொழிற்சாலைப் பாதுகாப்புப் பட்டயப்படிப்பு (Diploma in Industrial Safety - DIS), தொழிற்சாலைப் பாதுகாப்பு முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Diploma in Industrial Safety - PDIS) எனும் மூன்று விதமான தொழிற்சாலைப் பட்டயப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்: மேற்காணும் பட்டயப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்குப் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் ஏதாவதொரு இளநிலைப் பட்டம் (BE / B.Tech) அல்லது பட்டயம் (Dilpoma in Engineering/ Technology) பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தொழிற்சாலைகளில் உற்பத்தி (Manufacturing), பராமரிப்பு (Maintenance) அல்லது பாதுகாப்பு (Safety) துறைகளில் பணியாற்றுபவர்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு குறித்த ஆய்வு, பயிற்சி, கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அல்லது தொழிற்சாலைப் பாதுகாப்பு தொடர்பான அரசு நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் இருப்பவர்கள், துறைமுகப் பணிகளில் ஏதாவதொன்றில் பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பிக்க விரும்புவோர் தொழிலாளர் கல்வி நிறுவனத்திற்கான http://www.dgfasli.nic.in/welcome.html எனும் இணையதளத்தில் இப்படிப்புகளுக்கான தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பத்தினைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் உறையின் மேல் “Application for ADIS / DIS / PDIS 2017-2018” என்று குறிப்பிட்டு, ”The Chairman, Central Committee for ADIS/DIS/PDIS Course, Central Labour Institute Building, Sion, Mumbai - 400 022” எனும் முகவரிக்கும், அதன் ஒரு பிரதியினைத் தொடர்புடைய மாநிலத்திற்கான மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவன முகவரிக்கும் அனுப்பி வைத்திட வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கு “The Regional Labour Institute, No.1,Sardar Patel Road, Adayar, Chennai-600113” எனும் முகவரிக்கும் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் அலுவலத்திற்குச் சென்றடைய வேண்டிய கடைசிநாள்: 26.5.2017.

தேர்வு முறை: கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு மேற்காணும் இணையதளத்தில் ஜூன்’ 2017 மாதத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர், அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்குப் பின்பு, தொடர்புடைய மாநில இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குப் படிப்புக்கான சேர்க்கை அளிக்கப்படும்.

பயிற்சிக் கட்டணம்: தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தொடர்புடைய மண்டலக் கல்வி நிறுவனத்தின் பெயருக்கு (Regional Labour Institute), அந்நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகப் பயிற்சிக் கட்டணம் ரூ.10,000க்கான வங்கி வரைவோலையினைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் காப்புக் கட்டணமாக (Caution Deposit) ரூ.2000க்கான வங்கி வரைவோலையும் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். விடுதிக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் தேர்வுக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும். இப்படிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியிலிருப்பவர்கள் “The Regional Labour Institute, No.1, Sardar Patel Road, Adayar, Chennai 600113” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 044-22350737, 22351569  எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறமுடியும்.

உ.தாமரைச்செல்வி

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.