Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக வாதத்தை மறுத்ததற்கு இதுதான் காரணம்!


முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்,  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை,  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
9வது நாளான நேற்றைய விசாரணையில் ஏற்கனவே நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க கட்டிடங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகள் பதிவாளரின் ஒத்துழைப்புடன் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்ட விதம் பற்றியும் அது தொடர்பான விவரங்களையும் விரிவாக முன்வைத்தார். மேலும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி தன்னுடைய வாதங்களை நிறைவு செய்தார் பி.வி.ஆச்சார்யா. 

இதைத் தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தனது சுருக்கமான வாதத்தில் ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட சில தீர்ப்புகளில் உள்ள முக்கியமான பகுதிகளை படித்துக் காட்டினார். மேலும், "உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள் பற்றி பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதங்களில் உள்ள கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன். ஏற்கனவே இந்த வழக்கில் எனது வாதங்களில் உள்ள முக்கியமான அம்சங்களை தனியாக எழுத்து வடிவில் கோர்ட்டுக்கு தாக்கல் செய்திருக்கிறேன். அனைத்தையும் பரிசீலனை செய்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வகை செய்ய வேண்டும்" என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது, அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், உங்கள் தரப்பு வாதத்தில் புதிதாக எதுவுமில்லை. போதுமான அளவுக்கு கர்நாடகா அரசு தனது வாதங்களை எடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களை கருத்தில் கொள்கிறோம் என்று கூறி அன்பழகன் தரப்பு வாதத்தை  கேட்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ், தனது வாதங்களை தொடங்குவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.