Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2017

ஒரு பறவை, ஒரு பிராணி .. ஒரு காமடி பீசு இரு சர்ச்சைகள்!


ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி தனது பணிக்காலத்தின் கடைசி நாளில் கூறிய இரு கருத்துகள் நாட்டில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டன. ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த அவர், "பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிங்கோனியா என்ற இடத்தில் அரசே நடத்தி வரும் பசுப்பாதுகாப்பு மையங்களில் பல பசுக்கள் மர்மமாக இறந்ததது குறித்த வழக்கு 2011ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, "மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பசுவைத் தேசிய விலங்காக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கவேண்டும்" என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர்..
அதையடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். வழக்கு விசாரணைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், "இவ்வாறு கூறியது எனது யோசனையே தவிர, உத்தரவல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக நீதிபதிகள் நீதிமன்றத்தில் கூறுவது உத்தரவு, தீர்ப்பு, ஆணை என்றுதான் எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் தனிப்பட்ட முறையில் பேட்டியிலோ, செய்தியாளர் கூட்டத்திலோ, பொதுக் கூட்டத்திலோ கூறுவது வேண்டுமானால் யோசனை என்று கருதலாம். எனினும், நீதிமன்றத்தில் கூறியது தொடர்பாக நீதிபதி சர்மா பின்னர் விளக்கியிருப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் தவிர்க்கும் முயற்சி என்றுதான் கருத வேண்டும்.

பசுவின் பிரச்சினை
"இதை அரசியலாகப் பார்க்காதீர்கள். பசுவின் பிரச்சினையாகப் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார். பசுவின் பிரச்சினையாகப் பார்ப்பதாக இருந்தால், நாட்டில் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பால் வளம் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக்கள் சுற்றுச் சூழலாலும் நோய்த் தொற்றினாலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கலாம்.

மயிலை காக்க வேண்டும்
ஒரு வேளை சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலும் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க இயலுமா என்பது கேள்விக் குறியே. காரணம், இந்தியாவின் அழிந்து வரும் இனமாகவும் வன உயிரினம் என்பதாலும் இருப்பதால்தான் புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலும் அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அரசின் அடிப்படை நோக்கம். அதனால், அவற்றை தேசிய உயிரினங்களாக அறிவித்தனர்.
பசுக்கள் அப்படியில்லை. கால்நடைகளின் பெருக்கம், எண்ணிக்கை நாடு முழுவதும் பரவலாகவே இருக்கிறது. தவிர, பசு வன உயிரினம் அல்ல. வீட்டு விலங்கு. அதனால், அதைக் காப்பதில் இயல்பாகவே மக்களுக்கு அக்கறை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அதை தேசிய விலங்காக அறிவிப்பது பயனற்றது.

இந்தியாவின் பண்பாடு
பன்றியைக் கொன்று இறைச்சி உண்பதை சில மதத்தினர் ஏற்பதில்லை. அதற்காக பன்றியைத் தேசிய விலங்கு என அறிவிக்க வேண்டும் என்றா கோருகிறார்கள். பசுவதையைப் பிரசாரம் செய்வது மதவாத அரசியலுக்குத் தூண்டுகோலாகிவிடுவது கவலை தருகிறது.
காரணம், எந்த மதத்தினராக இருந்தாலும், இந்தியாவின் பண்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் இந்த மண்ணின் மைந்தர்களாக வசிக்கிறார்கள். பசு இறைச்சி உண்ணாத முஸ்லிம்களும் பலர் உண்டு. பசு இறைச்சி உண்கிற இந்துக்களும் உண்டு. எனவே, இப்போதைய நிலை நீடித்தாலே போதும்.

 மயில்கள் கர்ப்பம்
நீதிபதி சர்மா கூறிய இன்னொரு கருத்து நகைப்புக்குரியதாக ஆகிவிட்டது. நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு விசாரணையில் மயில்கள் உடலுறவு கொள்வதில்லை என்று கூறியிருப்பதாக தீர்ப்பின் நகலை அளித்திருக்கிறார்.
அதில், கேஷ்புரா என்ற கிராமத்தில் 17 வயது இளைஞன் 12 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற வழக்கில் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரம்மச்சாரி மயில்கள்
"மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் அது உடலுறவு கொள்ளாத உயிரினம். ஆண் மயில் விடும் கண்ணீரைப் பருகும் பெண் மயில் கருவுறும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான அறிவியல் ஆதாரத்தை நிருபர்கள் கேட்டதற்கு, "அறிவியல் நோக்கத்துடன் பார்க்காதீர்கள். பாகவத புராணத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

உடல் கழிவுகள்
உயிரியல் விஞ்ஞானத்தின்படி பறவைகள் உடலுறவு கொள்ளாமல் கருவுற இயலாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கண்ணீரில் விந்தணுக்கள் இருப்பதாக எந்த விஞ்ஞானமும் கூறவில்லை. கண்ணீர், வியர்வை, சிறுநீர் ஆகிய மூன்றும் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் என்று அறிவியல் நிரூபித்துள்ளது. அப்படியே விந்தணுவைப் பருகுவதால் எந்தப் பெண்ணினமும் கருவுறவும் சாத்தியமேயில்லை.

விஞ்ஞானம் சொல்வதென்ன
ஆண் உயிரின் விந்தில் உள்ள கருமுட்டை பெண் உயிரின் கருமுட்டையுடன் இணையும்போதுதான் கருவுருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எந்தத் திரவத்தை அருந்தினாலும், உடலுக்கு ஊறு இல்லாத நிலையில், அதன் நீர்ச்சத்து உடலால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர, கருப்பைக்கே செல்லாது என விஞ்ஞானம் தெளிவுபடுத்துகிறது.

சர்ச்சை கருத்துக்கள்
சமூகத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பது தவறில்லை. ஆனால், பொதுவாக இப்படிக் கூறுவது நகைப்புக்குரியதாகவோ சர்ச்சைக்குரியதாகவோ அமையும்.

புராண கதைகள்
சில சித்த மருத்துவர்கள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் பசுவின் கோமியம், பசுவின் சாணம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதே சமயம் அது குறித்து விஞ்ஞான முறையிலான ஆய்வுகள் கூடாது என்று அவர்கள் மறுக்கவில்லை.
இந்து மதத்தில் மட்டுமின்றி, கிரேக்கர்களின் புராணங்களில் பறக்கும் குதிரை, சீனப் புராணங்களில் வரும் நெருப்பைக் கக்கும் டிராகன் போல புனைகதைகள் உண்டு.

அரசியல் வேண்டாம்
இதுபோன்றவற்றைப் படித்து ரசிக்கலாம். நிலாவில் பாட்டி வடை சுட்டதைப் பல காலமாகக் கதை கேட்ட சிறுவர்கள் நிலாவில் ஆர்ம்ஸ்டிராங் கால் பதித்ததையும் கேட்கிறார்கள். கற்பனையை ரசிக்கிறார்கள். விஞ்ஞானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். மதம் தொடர்பான விஷயங்களை அரசியலுக்குள் இணைப்பது ஆபத்தை விளைவிக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.