Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2017

‘‘அமைச்சரின் அக்கா மகள் நான்’’ பல கோடி ரூபாய் அபேஸ் செய்த கில்லாடி பெண்!


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கா மகள் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த வழக்கில் காவல்துறையினர் மெத்தனப்போக்கில் இருந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இந்த மோசடி குறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது, "எனக்கு அக்காவே கிடையாது. எப்படி எனக்கு அக்கா பொண்ணு இருக்க முடியும்" என்று அதிர்ந்து போனார்.

ஜெயங்கொண்டம் அருகே கோவிந்தபுத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சக்தி. ஒரு ஆண்டுக்கு முன்பு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் தவறுதலாக போனில் மிஸ்ட் கால் கொடுத்துள்ளார் சக்திக்கு. அந்த நம்பருக்கு சக்தி போன் செய்துள்ளார். அப்போது, இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இந்த பேச்சு இவருக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த பேச்சு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. செளமியா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய மாமா என்றும், இவர் எனது காதலை பிரித்துவிடுவார் என்று கூறி சக்தியை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஊர் மக்களுக்கு, செந்தில் பாலாஜியின் உறவினர்கள் என்று இவர்கள் நம்ப வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.

பணத்தை கொடுத்து ஏமாந்த முகமது அலியிடம் பேசினோம். "கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலையில்லாமல் வீட்டில் சும்மா இருந்தேன். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக எங்க ஊர்காரர்கள் சொன்னார்கள். அதன்பேரில் செந்தில் பாலாஜியின் அக்கா மகள் வேலைக்கு உத்தரவாதம் இருக்கும் என்பதால் திருச்சியிலுள்ள டி.என்.பில்.எல் பேப்பர் மில் கம்பெனியில் வேலை கேட்டு செளமியா-சக்தியிடம் பயோடேட்டாவை கொடுத்தேன். ஐந்து லட்சம் கேட்டார்கள். அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்சம் கொடுத்தேன். நான் மட்டுமில்லாமல் தா.பழூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் என்பவர் கால்நடைத்துறையில் வேலை கேட்டு பத்து லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுத்துள்ளார். அடுத்ததாக கோவிந்தபுத்தூரை சேர்ந்த சசி என்பவர் ஆசிரியர் பணிக்காக 9 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். தத்தனூர், வளவெட்டிக்குப்பம், தா.பழூர், கோவிந்தபுத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆசிரியர், கால்நடைத்துறை, காவல்துறையில் பதவி உயர்வு, பலதுறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி கோடி கணக்கில் வசூல் செய்தார்கள். கணவன், மனைவி இருவரும் நகைகளை அணிந்துகொண்டு ஆடம்பரமாக வலம்வந்துள்ளார்கள். பணத்தை கொடுத்தவர்கள் சந்தேகப்பட்டு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களுடைய பணத்தை திருப்பிக்கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கொஞ்ச நாளில் ரெடியாகிடும்" என்றார்கள்.


அடுத்தடுத்து எல்லோரும் கேட்கத்தொடங்கியதும் சௌமியா வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் உள்ள டி.எஸ்.மஹாலில் நடைபெற உள்ளது. அங்கு எங்க மாமா செந்தில் பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் அங்கு வர உள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் அங்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கித் தருகிறேன் என்றார்கள். நாங்கள் நம்பவில்லை. அதற்கு அவர் இதோ பாருங்கள், அமைச்சர்கள் படத்தைப்போட்டு பத்திரிகையை அடித்துள்ளோம். அவர்களும் வருகிறார்கள் என்று எங்களிடம் காட்டினார்கள். அதைப்பார்த்து நாங்களும் உண்மை என்று நினைத்துக்கொண்டு போனோம். அடுத்தநாளே வீட்டில் சில பொருள்களை வாகனத்தில் ஏற்றினார்கள். தெருவில் உள்ள மக்கள் கேட்டதற்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கும்பகோணம் எடுத்து செல்கிறோம் என்றார்கள். அடுத்த நாள் டி.எஸ்.மஹாலில் போய்ப் பார்த்தபோது வேறொரு திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் தெரிந்தது நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று. பின்பு எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தோம். அவர் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிக்கோ திவ்யனிடம் புகார் கொடுக்கச் சொன்னார். அவரிடம் நடந்ததைச் சொல்லி புகார் கொடுத்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே பத்திரிகைகளுக்கு தகவல் சொன்னால் குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். யாரிடமும் சொல்லாதீர்கள். குற்றவாளிகளை பிடித்துவிடலாம் என்றார். நாங்கள் அவரிடம் பலமுறை போனில் பேசினோம். அதற்கு அவர் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் பிடித்துவிடுவோம் என்றார், டி.எஸ்.பி இனிகோ திவ்யன். அவர்சொல்லி நான்கு மாதம் ஆகிவிட்டது. அவரும் டிரான்ஸ்பராகிவிட்டார். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம். எங்களுக்கு டி.எஸ்.பி மீது சந்தேகமாக உள்ளது. வட்டிக்கு வாங்கின பணம். அதற்கு வட்டி கட்டமுடியவில்லை. தினம்தினம் சாகிறோம். குற்றவாளியை தப்பிக்கவிட்ட காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போகிறோம். மீண்டும் எங்கள் பணம் வரவில்லை என்றால் சாகும் போராட்டமும் நடத்தப் போகிறோம்" என்று எச்சரித்தார்கள்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பேசினோம். "முற்றிலும் தவறான செய்தி. எனக்கு அக்காவே கிடையாது. எப்படி எனக்கு அக்கா பொண்ணு இருக்க முடியும். எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அந்த செயல்களில் இதுவும் ஒன்று. இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று முடித்துகொண்டார்.

ஜெயங்கொண்டம் முன்னாள் டி.எஸ்.பி இனிகோ திவ்யனிடம் பலமுறை போனில் தொடர்பு கொண்டோம். பதிலளிக்க மறுத்துவிட்டார். ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடியிடம் பேசினோம். "இப்போதுதான் இங்கு வந்துள்ளேன். இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைப் பற்றி விசாரிக்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.