Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

பள்ளியில் கழிவறை இருந்திருந்தால்..! இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதை


'
தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 'கழிப்பறையோடு வீட்டை அமைப்போம்' என்று உறுதிபூண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், பிரதமர் மோடி. ஆனால் கல்வி கற்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாததால், கழிவறைக்குச் சென்ற இரண்டு குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தில்தான் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்கே அஞ்சுகிறார்கள் பெற்றோர்கள்.
இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் சங்கீதாவிடம் பேசினோம். "எனது பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளிவைப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குக் கொள்ளிவைக்கும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" என்று கண்ணீர் மல்கப் பேசத்தொடங்கினார். இது குக்கிராமம். விடுமுறை நாள்கள் என்றால்கூட பள்ளிக்குத்தான் குழந்தைகள் விளையாடச் செல்வார்கள். மே மாதம் 18ஆம் தேதி, எனது மகன் சஞ்ஜை, மகள் செந்தமிழ்செல்வி இருவரும் பள்ளிக்கு விளையாடச் சென்றார்கள். விளையாடிக்கொண்டிருக்கும்போது, எனது மகள் செந்தமிழ்செல்வி கழிவறைக்குப் போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். பள்ளியில் கழிவறை இல்லாததால், பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள பெரிய ஏரி ஓரம் மலம் கழிக்கச் சென்றுள்ளாள். பிறகு, கால் அலம்ப குளத்தில் இறங்கியபோது, குளத்துச் சகதியில் கால்கள் சிக்கி, 20 நிமிஷம் கத்திப் பரிதவித்திருக்கிறாள்.


தங்கச்சியைக் காணாததால், என் மகனும் போய் பார்த்திருக்கிறான். தண்ணீரில் தத்தளித்து மூழ்கிக்கொண்டிருந்த தங்கையைக் காப்பாற்றுவதற்காக சஞ்ஜையும் குளத்தில் குதித்துள்ளான். அவனும் சேற்றில் சிக்கி, வெளியே வரமுடியால் தத்தளித்துள்ளான். இருவரும் பலமணிநேரம் போராடியிருக்கிறார்கள். ஆனால் எந்த உதவியும் இல்லாமல், குளத்திலிருந்து தப்ப முடியாமல் பிணமானார்கள். எனக்கு இரண்டு குழந்தைகள்தான். இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிணமாகக் கிடந்தைப் பார்த்த துர்பார்க்கியவதி நான். இரு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்ததால எனக்கு சந்ததியே இல்லாம போயிருச்சு. நாங்கள் மிகவும் சிரமப்படும் குடும்பம். கழிவறை கட்டகூட வழியில்லை. எங்கள் ஏழ்மையே எங்கள் சந்ததியை அழித்துவிட்டது" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார், குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்.
இது சம்பந்தமாக பா.ஜ.க மாவட்டசெயலாளர் சுப்ரமணியிடம் பேசினோம். "இரண்டு குழந்தைகள் பலியானதற்குக் காரணமே பள்ளியில் கழிவறைகள் இல்லாததுதான். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இயற்கை உபாதைகளுக்கு இந்தக் குளத்தைத்தான் பயன்படுத்திவருகிறார்கள். இந்தப் பள்ளியில் 146 குழந்தைகள் படிக்கிறார்கள். பள்ளியில் கழிவறைகள் இல்லாததால், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட குழந்தைகள் பள்ளியின் பின்புறத்தில் உள்ள குளத்துக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கென்றும் தனி இடம் கிடையாது. ரோட்டின் அருகாமையில் பள்ளி அமைந்துள்ளது. வாகனங்கள் அடிக்கடி செல்வதால், இந்தப் பள்ளியே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.




எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், பள்ளியில் கழிவறை அமைத்து அதற்கான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். குளத்தைச் சுற்றி இரும்புவேலி அமைக்கப்பட வேண்டும். பள்ளியின் வாசல் பகுதியை மாற்ற வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். எல்லா மாவட்டத்திலும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வருகிறார்கள். ஆனால், இங்கு அரசுப் பள்ளியென்றாலே அச்சப்படுகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று புகார் கொடுக்க இருக்கிறோம். மாற்றம் செய்யவில்லை என்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போகிறோம்" என்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரி ஒலியிடம் பேசினோம். "இந்தத் தகவலே இப்போதுதான் வந்துள்ளது. உடனே அந்தப் பள்ளியை ஆய்வுசெய்ய குழுவை அமைக்கிறேன். அந்தப் பள்ளியில் உள்ள குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்துக்கொண்டார்.
தகவலைச் சொல்லி, கலெக்டர் (பொறுப்பு) டி.ஆர்.ஒ தனசேகரனிடம் பேசினோம். "இந்தத் தகவல், நீங்கள் சொல்லிய பிறகுதான் எங்களுக்குத் தெரியவருகிறது. அவர்கள் கேட்கும் கோரிக்கைகள் நியாயமானது. உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.