Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 1,000 தலைமையாசிரியர் பணியிடம் காலியாகிறது: 2 ஆண்டாக பதவி உயர்வு நிறுத்தி வைப்பு


தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 2 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சுமார் 1000 பணியிடங்கள் காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 4,996 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு, பணிஓய்வு போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் சராசரியாக 400 தலைமை ஆசிரியர்கள் வரை பதவியில் இருந்து விலகுகின்றனர். இதனால், அப்பணியிடம் காலியிடமாக அறிவிக்கப்படுகிறது.  மாநிலத்தில் உள்ள காலி பணியிங்கள் அடிப்படையிலும், ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இதற்காக பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.  இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் அப்பணியிடம் காலியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முறையாக வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே பட்டதாரி ஆசிரியர்களை போல தங்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக கடந்த 2015ம் ஆண்டில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதில் இதுநாள்வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தேதி அறிவித்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டு, வரும் மே 23ம் தேதி இதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் முதல் வாரத்தில் தான் நடக்கிறது. இதனால், நடப்பாண்டும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பில்லை. அவ்வாறு பதவி உயர்வு அளிக்கப்படாவிட்டால், நடப்பாண்டு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கும்.

ஒரு பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை ஆசிரியர் தான் பொறுப்பாகிறார். அப்பணியிடம் காலியாக இருந்தால், பள்ளி ஆசிரியர்களுக்கு தான் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்கள் பற்றிய விவரங்கள் அளித்தல், கல்வித்துறை சம்பந்தமான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் என ஒவ்வொரு பணிக்கும் ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தீர்ப்பு வரும் வரையில் பழைய நடைமுறையை பின்பற்றி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.