Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

கேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக் பேனா டூர்!


இப்பொதெல்லாம் பள்ளிப் பிள்ளைகளை 5 ஆம் வகுப்பிலிருந்தே ஜெல் பேனாக்களை கொண்டு எழுத அனுமதித்து விடுகிறார்கள். எங்களது பள்ளி நாட்களில் 6 ஆம் வகுப்புக்கு மேல் தான் இங்க் பேனா கொண்டு எழுத அனுமதிப்பார்கள். நட்ராஜ் பென்சிலில் இருந்து இங்க் பேனாவுக்கு மாறும் வைபவம் இருக்கிறதே... அட, அட, அடடா! அப்பாவுடன் பேனா வாங்க கடைக்குப் போவதே என்னவோ சென்னையின் மையப்பகுதியில் சொந்தமாக ஒரு ஃபிளாட் வாங்கப் போகும் முஸ்தீபுக்கு சற்றும் குறையாமல் இருக்கும். இங்க் பேனாவில் எழுதுவதை என்னவோ தலையில் கிரீடம் வைக்காத குறையாக பெருமையாக உணர வைத்த நாட்கள் அவை.

6 ஆம் வகுப்பில் முதன் முதலாக கேமலின் பேனா வாங்கித் தந்தார்கள். பேனாவின் கழுத்தைத் திருகிக் கழட்டி நேரடியாக இங்க்கை அதன் வயிற்றுக்குள் நிரப்பி எழுதும் பேனா வகை இது. மேக்கிங் நன்றாக அமைந்து, கன்னா, பின்னாவெனக் கையாளாமல் பதவிசாகப் பயன்படுத்தினால் ஓரிரு வருடங்களுக்கு நன்றாகவே உழைக்கக் கூடும். சிலர் வார இறுதி விடுமுறை நாட்களில் பேனாவை பார்ட், பார்ட் ஆகக் கழற்றி தண்ணீரி ஊற்றிக் கழுவிக் காய வைத்து துடைத்து எடுத்து மை ஊற்றி என அந்தப் பேனாவை ஒரு குழந்தை போலக் கூட சீராட்டி பெருமையாக வைத்துக் கொண்டது உண்டு. சிலருக்கோ வாரம் ஒரு கேமலின் பேனா வாங்க வேண்டிய லட்சணத்தில் யோகமிருக்கும். கேமலினோடு சரி சமமாய் அன்று போட்டியில் இருந்த மற்றொரு சாதாரணப் பேனா வகை எனில் அது வின்ஸ்டர். இதையும் கூட கேமலின் போலவே கையாளலாம். இதெல்லாம் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் வரை தான்.

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த காலோடு பெரும்பாலானோர் ஸ்ரீஇராமரின் கோதண்டம் போலப் பாவித்துக் கொண்டு கையில் ஹீரோ பேனாவை ஏந்திக் கொண்டு திரிவார்கள். அதிலொரு சுகம். இந்த ஹீரோ பேனா இருக்கிறதே அதற்கு நடுத்தர வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளோடு ஒரு ஆத்மார்த்த பந்தம் இருக்கிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றால் உடனே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து எப்படியாவது ஒரு ஹீரோ பேனா நமக்கு பரிசாகக் கிடைக்கும் எனும் உத்தரவாதம் இருந்த காலம் அது. வழக்கமாக ஹீரோ பேனா மூன்றே மூன்று வண்ணங்களில் தான் அப்போது கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். அடிப்பகுதி மட்டுமே கருப்பு, சிவப்பு, பச்சை என வண்ணம் மாறும், ஆனால் எல்லாப் பேனாக்களுக்கும் ஒரே விதமான தங்க நிற மூடி தான் ஸ்பெஷல் அடையாளம். மாணவர்கள் மட்டுமல்ல அப்போது ஆசிரியர்களும் ஹீரோ பேனாக்கள் தான் பயன்படுத்தினர். நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பச்சை இங்குக்கு பச்சை நிற ஹீரோ பேனாவும், சிவப்பு இங்க்குக்கு சிவப்பு ஹீரோ பேனாவும் பயன்படுத்தினார். அந்தக் காலத்தில் அது ஒரு ஸ்டைல் என நினைத்துக் கொள்வோம் நாங்கள்.

என்னிடம் கருப்பு நிற அடிப்பாகமும் தங்க நிற மூடியும் கொண்ட ஒரு ஹீரோ பேனா இருந்தது. பரீட்சைகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவேன். பத்தாம் வகுப்பு என்பதால் பரீட்சைகளுக்குத் தான் பஞ்சமே இருக்காதே! தனியார் பள்ளி என்பதால் வருடம் முழுக்க பரீட்சைகள் தான். அந்தோ பரிதாபம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா? பொதுப் பரீட்சை அன்று காலையில் எனது ஹீரோ பேனா காணாமல் போனது. எப்படிக் காணாமல் போனது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போயும், போயும் பரீட்சை அன்று தானா என் பேனா தொலைந்து போக வேண்டும்? அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய அதிர்ஷ்டப் பேனாவைக் காணோமென்றால் எப்படி இருக்கும் மனநிலை? இப்போதிருக்கும் குழந்தைகளைப் போலவா அன்று நாங்கள் வளர்க்கப்பட்டோம்? ஓவர் செல்லம் கொஞ்சலுக்கும், முரண்டு பிடித்து பொருட்களை வாங்குவதும் அன்றெல்லாம் இயலாத காரியம். பேனாவைக் காணோமென்றால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் தான் முதலில் வந்தது. அப்பாவைக் கூட சமாளித்து விடலாம். கூடப் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஹீரோ பேனாவில் பரீட்சை எழுதுவார்கள். நான் மட்டும் ஏப்பை, சாப்பையாக ஏதோவொரு கேமலினிலோ, வின்ஸ்டரிலோ பரீட்சை எழுதுவதா? அதுவும் என் எதிர்கால வாழ்வைத் தீர்மாணிக்கப் போகும் உயர்கல்வி (+2) பிரிவை தேர்ந்தெடுக்க உதவும் மதிப்பெண்களை அள்ளி வழங்கப் போகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சாதாரணப் பேனாவில் எழுதி தேர்வின் மரியாதையையே கெடுத்து விடுவதா? என்று சகட்டு மேனிக்கு கழிவிரக்கம் பின்னி எடுக்க பரீட்சைக்கு முதல் நாள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் ஓவென்று அழுது கொண்டு நின்றேன்.

அவரவர்க்கு அவரவர் பிரச்னை. அம்மா ஆசிரியர் என்பதால் அவருக்கும் பள்ளிக்கு கிளம்பும் காலை நேர அவசரம் இருந்தது. அப்படியே வேறு பேனா வாங்கித் தருவதாக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் ஹீரோ பேனா வாங்கித் தர மாட்டார்கள். கேமலினோ, வின்ஸ்டரோ தான் கிடைக்கும். அது எனக்குத் தேவையே இல்லை. அப்பா வேறு வீட்டில் இல்லை. இப்போது உடனே பள்ளிக்குச் சென்றாக வேண்டும். பரீட்சை ஹாலுக்குள் நுழையும் முன் தேர்வைப் பற்றி பிரத்யேக குறிப்புகள் வேறு வழங்கித் தொலைவார்கள். எங்கள் பள்ளி ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எனக்கோ என்னை நினைத்து சுய ஆதூரம் தாங்கவில்லை. அம்மாவிடம் சொல்லி விசும்பி அழுது கொண்டிருந்தேன். நிம்மதியாக அழக்கூட விடாமல் யாரோ அந்நேரத்தில் சரியாக காலிங் பெல் அடித்தார்கள். நாம் அழும் போது பிறர் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இன்றைய நாகரீகப் பிள்ளைகளைப் போல இல்லை அன்றெலாம்... யாரோ வந்து விட்டுப் போகட்டும், எனக்கென்ன? எனக்கு இப்போது என் ஹீரோ பேனா வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அதென்னவோ கிடைக்கப் போவதில்லை. அதில்லாமல் எப்படி நான் பரீட்சை எழுத முடியும்? என்று என் போக்கில் வந்தவர்களைக் கவனிக்காமல் என் பாட்டில் நான் அழுது கொண்டிருந்தேன். அம்மா என்னை சமாதானப் படுத்திக் கொண்டே கதவைத் திறந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.