Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2017

கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை தின்று ஏப்பம் விட்ட யானை


சிரிப்பதா, திகைப்பதா என்று தெரியாத அளவுக்கு அசாமில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, பசிகொண்ட யானை தின்று ஏப்பம் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள தரஜூலா டி எஸ்டேட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மென்று தின்ற யானை, சிறிது நேரத்தில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் வாந்தி எடுத்துவிட்டுச் சென்றது.

காடுகளை அழித்து அப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள், உணவுக்காக தேடி அலைந்த யானை ஒன்று நுழைந்துள்ளது. அங்கே, தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில், மளிகை சாமான் முதல் ஹார்ட்வேர் சாமான்கள் வரை விற்பனையாகும் அந்த ஊரின் 'காய்' என்று அழைக்கப்படும் நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டு ஒன்று யானையின் கண்ணில் பட்டது.

அங்கே, கடையின் உரிமையாளர் ராஜேந்திர துகர், மறுநாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூபாய் நோட்டுகளை கட்டுகளாகக் கட்டி வைத்திருந்தார்.

தனது உணவுத் தேடலில் ஒரு நல்ல உணவைக் கண்டுபிடித்ததாக நினைத்த யானை, பணக் கட்டுகள் வைத்திருந்த பகுதிக்குச் சென்றது. அங்கு 26 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

அங்கிருந்து யானையை விரட்ட அப்பகுதி மக்கள் செய்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கடையின் உள்ளே சென்ற யானை சிறிது நேரம் கழித்து திரும்பிச் சென்றது.

அப்போது கடைக்குள் சென்ற ஊழியர்கள், யானை ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளை வாந்தி எடுத்திருந்ததைப் பார்த்தனர். அங்கிருந்த ரூ.26 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காணவில்லை. கடைக்குள் இருந்த அரிசியையும் யானை எடுத்துச் சாப்பிட்டு சென்றதையும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானைகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும், மக்களால் அபகரிக்கப்பட்டுவிட்டதன் எதிரொலிதான் இந்த சம்பவங்கள். யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் அபகரித்துக் கொண்டு, தங்களது வாழ்விடங்களுக்கு யானைகள் வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் என்று அம்மாநில வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை, பசிகொண்டதால் பணத்தின் ருசிகண்டது. ஆனால், 10 ரூபாய் நோட்டு மட்டும் அதற்குப் பிடிக்கவில்லை போலும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.