Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2017

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம்பெண் பலி


நெல்லையில், ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம் பெண் இறந்தார். கணவர், மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன். இவர் நெல்லையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி(வயது 35). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். சுப்பிரமணியத்தின் உறவினருக்கு நேற்று நாகர்கோவிலில் திருமணம் நடந்தது.

இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் இருந்து ரெயிலில் செல்ல முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து நேற்று காலை சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் மகனுடன் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்தார்.

சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பலி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரெயிலில் செல்ல டிக்கெட்டு எடுத்து இருந்தார். காலை 6.30 மணிக்கே இவர்கள் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டதால் அவர்கள் அப்போது அங்கு புறப்பட தயாராக இருந்த செங்கோட்டை பயணிகள் ரெயிலை நாகர்கோவில் ரெயில் என்று தவறுதலாக நினைத்து அதில் ஏறி விட்டனர்.

அப்போது அந்த ரெயிலில் இருந்தவர்கள் இது செங்கோட்டை செல்லும் ரெயில் என்று சுப்பிரமணியத்திடம் கூறினார்கள். உடனே சுப்பிரமணியம் குடும்பத்தினர் வேக, வேகமாக ரெயிலில் இருந்து பதறியபடி இறங்கினார்கள். இவர்கள் இறங்கிகொண்டு இருக்கும்போது ரெயில் புறப்பட்டு குறைந்த வேகத்தில் சென்றது. சுப்பிரமணியனும், அவருடைய மகனும் அடுத்தடுத்து இறங்கினர். கடைசியாக சீதாலட்சுமி இறங்கினார். அப்போது அவர் கீழே தவறி விழுந்து ரெயில் சக்கரத்திற்குள் சிக்கினார். இதில் அவருடைய தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

கணவர், மகன் கதறல்
இதைப்பார்த்த அவருடைய கணவர், மகன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தை பார்த்த பயணிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தனர். சற்று நேரத்திற்கு முன்பு வரையில் தன்னுடன் இருந்த தனது மனைவி ரெயில் சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்ததை பார்த்த சுப்பிரமணியன் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

இதேபோல் தனது தாயை பறி கொடுத்த மகனும் கதறி அழுதான். அப்போது ரெயில் நிலையத்தில் சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் சக்கரத்தில் சிக்கி பெண் தலை துண்டாகி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.