Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

"ரிங்கா ரிங்கா ரோஸஸ்" ரைம்ஸ் அல்ல...ஒரு வரலாற்று சோகம்!


" ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." என சின்ன வயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்கும், சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எலும்புக் கூடுகளுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? அந்தத் தொடர்பை தெரிந்து கொள்வதற்கு முன்னர்... மனித இனத்தின் ஒரு பேரழிவு நிகழ்வினை, வரலாற்றுத் துயரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது...

1300 களின் காலகட்டம்... சீனாவின் பல பகுதிகளிலும் மக்கள் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாய்  உயிரிழந்தனர் . அது "பிளேக்" நோய் என்று அவர்கள் கண்டுபிடித்து முடிப்பதற்குள், அது வட இந்தியா வரை பரவி விட்டிருந்தது. எலிகளிடமிருந்து, ஃப்ளீ (Flea) என்ற பூச்சியினம் இந்த நோயை மனிதர்களுக்கு கடத்தியது . சீனா மற்றும் வட இந்தியக்  கடற் பகுதிகளில் வர்த்தகங்களை முடித்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு கப்பல்களில் கிளம்பினர் ஐரோப்பியர்கள். அவர்களின் கப்பல்களில் பிளேக்கால் பாதிக்கப்பட்ட எலிகள் இருந்ததை  அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு பெரிய மங்கோலியப் படையும் ஐரோப்பாவை நோக்கி கப்பல்களில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் இவர்கள் சென்றடைந்த இடம், இத்தாலிய கடற் பகுதியில் இருக்கும் கஃப்ஃபா (Kaffa) நகரம் . மங்கோலிய படையிலிருந்த பலரும் அந்தப் பயணத்திலேயே பிளேக்கால் பாதிக்கப்பட்டனர். தரையிறங்கிய அந்தப் படை... பாதிக்கப்பட்ட நோயாளிகளை கலன்களில் கட்டி, கோட்டைச் சுவற்றைத் தாண்டி, கஃப்ஃபா நகரத்துக்குள் தூக்கியெறிந்தனர். என்ன ஏதென்று தெரியாமல் பக்கம் வந்த மக்களுக்கும் நோய் தொற்றியது . கஃப்ஃபா நகர மக்கள் பயந்து போய் ஊரை காலி செய்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு குடி பெயரத் தொடங்கினர். போகுமிடமெல்லாம் நோய் பரவத் தொடங்கியது. அதே சமயம் ஆசியாவில் இருந்து  ஐரோப்பாவின் பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்த வர்த்தக கப்பல்களில் இருந்த எலிகளும் நோய் பரவ முக்கிய காரணமாக இருந்தன.
ரிங்கா ரிங்கா ரோஸஸ்

இந்த இழப்புகள் இதுவரை மனித  இனம் சந்தித்திராத அளவுக்கு இருந்தது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60% வரை இந்த நோயால் உயிரிழந்தனர். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 20 கோடி பேர் உயிரிழந்தனர். இந்தப் பேரழிவை ஆங்கிலத்தில் "பிளாக் டெத்" (Black Death) என்று குறிப்பிடுகிறார்கள். நோய் தாக்குதலுக்கு முன்னிருந்த உலக மக்கள் தொகையை மீண்டும் எட்டுவதற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆனது. இந்த பெரும் சோக நிகழ்வை உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும், பல தடயங்களைக் கொண்டு ஆராய்ந்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் லிங்கன்ஷைர் பகுதியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 48 எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர். அதில் 27 எலும்புக் கூடுகள் குழந்தைகளுடையது.

எலும்புக் கூடுகளில் இருந்த பற்களை கனடாவிலிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் "பிளேக்" நோயால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற பிணக் குழிகளை கண்டு பிடித்திருந்தாலும், ஒரே குழியில் இத்தனை எலும்புக் கூடுகளை இப்போது தான் கண்டுள்ளனர். மேலும், இந்த எலும்புக் கூடுகள் குவியலாய் இல்லாமல் சீராக, பக்கம் பக்கமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவர்கள் நோய் தொற்று ஆரம்பித்த காலத்தில் இறந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் ஆரம்பக் கட்டத்தில் இறந்தவர்களை, மக்கள் மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை செய்து புதைத்தனர். பின்பு, பலி எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பிணங்களை குழியில் குவியலாய் கொட்ட ஆரம்பித்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு, இவர்கள் இறந்த காரணங்களைக் கண்டறிவது எளிது. ஆனால், இறப்பதற்கு முன்னரான இவர்களின் வாழ்க்கையைத் தேடுவதே மிக முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்கள் இங்கிலந்து ஆராய்ச்சியாளர்கள். அது நடந்தால் மனித இனத்தின் மிக முக்கிய வரலாற்றுப் பக்கங்கள் காணக் கிடைக்கும்... சரி இந்தக் கதைக்கும் "ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம் ???
ரிங்கா ரிங்கா ரோஸஸ்

பிளேக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடலில் வட்ட வட்டமாக கொப்புளங்கள் வரும். அதற்கு அவர்கள் "Posies"" என்ற ஒரு நாட்டு மருந்தை உண்பார்கள். அது கைகொடுக்காத நிலையில் டிஷூம், டிஷூம் என்று தொடர் தும்மலால் பாதிக்கப்பட்டு, இறுதியில் இறந்து போவார்கள். இப்படி இறப்பவர்களுக்கான ஒப்பாரி பாடல் தான்..

" Ring of Ring of Rashes,
  Pocket full of Posies,
  Ai - tishoo, Ai - tishoo,
  All for down..." அழுது கொண்டே அவர்கள் பாடிய அந்த ஒப்பாரிப் பாடல் தான், கால மாற்றத்தில் குழந்தைகள் சிரித்து விளையாடும் ரைம்ஸ் பாடலாக மாறிப் போனது என்பது ஒரு சாராரின் கருத்து. இல்லை...ஆனால், பிளேக் நோயில் தும்மல் ஏற்படாது; அதனால் இது குழந்தைகளின் விளையாட்டுப் பாடல்தான் என்று வாதாடுபவர்களும் உண்டு !!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.