Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 25, 2016

பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்...!


பள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல அது நம் நினைவுகளில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது.


தமிழகத்தில் உள்ள  3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாக பள்ளிக்கரணை இருக்கிறது. 4 மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், 8 மாதங்கள் காய்ந்த நிலையிலும் இருக்கும். பள்ளிக்கரணை  சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகளும் வருகின்றன. பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு இப்போது இந்த நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மழையை தாங்கும் இயற்கை சூழல்

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தாங்கி, தேக்கி வைத்து கடலுக்கு அனுப்பும் இயற்கைச் சூழலை தன்னகத்தே கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்த அளவில் இருந்த இந்த சதுப்பு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு திட்டங்களுக்காக எடுக்கப்பட்டும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்தது. இதன் விளைவாக இன்றைக்கு இதன் பரப்பளவு பத்தில் ஒரு பகுதியாக 600 ஹெக்டேர் அளவுக்கு சுருங்கி விட்டது.


சதுப்பு நிலத்தின் இயற்கை சூழல் அழிந்து விட்டதால்தான் சிறிய அளவு மழை பெய்தால் கூட சென்னை நகரும், புறநகர் பகுதிகளும் மிதக்கின்றன. அரசு முதல் தனியார் வரை சகட்டு மேனிக்கு ஆக்கிரமிப்பு செய்த தற்கு எதிராக பசுமை ஆர்வலர்கள் கொதித்தெழுந்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி வருகிறார்கள்.
இதன் விளைவாக,  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் உள்ள நிலத்தைப் பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என பத்திரபதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்று விசாரித்தோம்.

துண்டு துண்டாக இருக்கிறது

சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசினோம். "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி உள்ள 250 ச.கி.மீ பரப்பளவில்  பெய்யும் மழை நீரை உள்வாங்கி, பின்னர் அதனை கடலுக்கு அனுப்பும் இயற்கையான பணியை பள்ளிக்கரணை செய்து கொண்டிருந்தது.  கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால், இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 600 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருக்கிறது என்று அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 250 முதல் 300 ஹெக்டேர் வரைதான் இருக்கிறது. அதுவும் முழுமையாக இல்லை. துண்டு, துண்டாகத் தனித்தனித் தீவாகத்தான் இருக்கின்றன. சதுப்பு நிலத்தில் மழை காலங்களில்  4 மாதம் தண்ணீர் நிரம்பி இருக்கும். பின்னர் அது நிலப்பரப்பு போல தோற்றம் அளிக்கும். காய்ந்து இருந்தபோதுதான் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. எல்லாம் முடிவடைந்த பின்னர்தான் வனத்துறை வசம் கொடுத்தனர். எல்லா அரசு துறைகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன. இப்போது நுரையீரலை மட்டும் காப்பற்ற நினைக்கின்றனர்" என்றார்.

3 ஆண்டுகளில் முழுமையாக ஆக்கிரமிப்பு

கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஶ்ரீ வெங்கட்ராமனிடம் பேசினோம்."சென்னையில் கடந்த ஆண்டு பெய்த வெள்ளத்துக்குப் பின்னர், சென்னையின் ஈரத்தன்மை எப்படி இருக்கிறது என்று நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதன்படி 1990-ம் ஆண்டு வரை 85 சதவிகித சென்னையின் பரபரப்பு எவ்வளவு மழை பெய்தாலும் உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டதாக இருந்தது. ஒரு நீர் நிலைக்கும் இன்னொரு நீர் நிலைக்கும் இடையே தொடர்ச்சி இருந்தது. 1990-ல் இருந்து மக்கள் வாழ்வதற்காக நீர் நிலைகளின் இயற்கைத் தன்மையோடு சமரசம் செய்து கொண்டோம். இப்போது சென்னையில் 15 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மழை நீரை உள்வாங்கும் நிலம் உள்ளது.  2000-ம் ஆண்டு வரை அவ்வப்போது ஆக்கிரமிக்கப்பட்டு வந்த பள்ளிக்கரணை நிலம் 2002-ம் ஆண்டில் இருந்து 2005 வரை 3 ஆண்டு கால கட்டத்தில் மிக அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதியோடும், அரசின் அனுமதி இல்லாமலும் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. பள்ளிக்கரணையில் சில பகுதிகள் பட்டாவாகக் கொடுக்கப்பட்டன. சில பகுதிகள்  பட்டா நிலமாக மாற்றப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சாலை அமைத்தது உட்பட அரசின் ஆக்கிரமிப்புகளும் அதிகம் நடந்திருக்கிறது" என்றார்.

சதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம்

சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைப்பதற்காக  அக்கரை கிராமத்தில் உள்ள சதுப்பு நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமித்திருக்கிறது. இதற்கு எதிராக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர் ஹரி கிருஷ்ணசேகர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம். " அக்கரைக் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 61 ஏக்கர்  சதுப்பு நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் 9 ஏக்கர் நிலத்தில் ஆர்.டி. ஓ அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவந்தது. சிறிய வயதில் இருந்து அந்தப் பகுதியில் இருக்கின்றேன். அது ஒரு சதுப்பு நிலம். அங்கு மண்ணைக் கொட்டி மேடாக்கி கட்டடம் அமைத்தால், மழை பெய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு எதிராகப் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தேன். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால், இதன் பேரில் நீண்ட நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்களாக பதில் அளிக்காததற்கு காஞ்சிபுரம் கலெக்டருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் தாக்கல் செய்த மனுவில், அது சதுப்பு நிலம்தான் என்றும்,  20 அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி கட்டடம் கட்ட உள்ளதாக கூறி இருந்தனர். இந்த சதுப்பு நிலம்  வருவாய்துறை வசம்தான் இருக்கிறது. அதை அப்படியே விட்டு விட வேண்டும். எந்த வித ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது. வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இது தவிர இதே இடத்தில்  இசைக்கல்லூரிக்கும் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்கு எதிராகவும் வழக்குத் தொடுக்க உள்ளேன்" என்றார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.