Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

80 வருடங்களில் 8 ஆயிரம் மரங்கள்...உலகின் செல்வாக்குமிக்க மனிதருக்கு வயது 105


கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் குப்பி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சாலுமரடா திம்மக்கா. வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை. பத்து வயதில் இருந்து ஆடுமாடுகளை மேய்த்தார். பின்னர் கூலித் தொழில் பார்த்தார். இவரது கணவர் பெயர் சிக்கையா. கணவனும் மனைவியும் கூலி வேலை பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக குழந்தையும் பிறக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தையாக பாவித்துக் கொண்டனர்.

ஆனாலும் குழந்தை இல்லாதது தம்பதியரை மனதளவில் பெரியதாக பாதித்திருந்தது. 'குழந்தை இல்லையென்றால் என்ன?. மரங்களை உனது குழந்தையாக பாவித்துக் கொள்... ஊரெங்கும் சென்று மரங்களை நட்டு அதனை பத்திரமாக வளர்க்கலாமே  'என்று திம்மக்காவின் கணவர் மனைவிக்கு ஊக்கம் அளித்தார். கணவரின் வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த திம்மக்கா, மரக்கன்றுகளை குழந்தையாக பாவிக்கத் தொடங்கினார்.

காலையில் கணவரும் மனைவியும் சாப்பாட்டுக்காக உழைப்பார்கள். மாலையில் மரக்கன்றுகளை நடுவார்கள். முதன் முதலில் கல்லீகல் கிராமத்தில் இருந்து கூடூர் கிராமம் வரை,சாலையோரத்தில் 400 ஆலமர கன்றுகளை திம்மக்கா நட்டார். நட்டதோடு வேலை முடிந்து விட்டது என்று திம்மக்கா இருந்து விடவில்மலை. மரக்கன்றுகளைச் சுற்றிலும் வேலி ஏற்படுத்துவார். ஆடுமாடுகள் தின்று விடாமல் பார்த்துக் கொள்வார். மாலைவேளையில், நீரிட்டுப் பராமரிப்பார். மரங்கள் தானாக வளரும் வரை திம்மக்காவின் கண்காணிப்பு தொடரும். திம்மக்காவின் தீவிர கண்காணிப்பால் நடப்பட்ட 400 ஆலமரக்கன்றுகளில் ஒன்று கூட வீணாகிப் போகவில்லை. அத்தனையும் வளர்ந்து  விருட்சமாக மாறி இப்போது நிற்கின்றன. வெட்ட வெளியாக காணப்பட்ட அந்த சாலை இப்போது 400 ஆலமரங்களுடன் பசுமையாக காணப்படுகிறது.

மரக்கன்றுகளுடன் ஒரு குழந்தையையும் தத்தெடுத்து உமேஷ் என பெயரிட்டு வளர்த்தார். மரக்கன்றுகளுடன் சேர்ந்து அந்த குழந்தையும் வளர்ந்தது. சில வருடங்களுக்கு முன் கணவர் சிக்கையா தவறி விட. இப்போது மகன் நிழலில் தனது பணியை மேற்கொள்கிறார் திம்மக்கா. மகன் உமேசும் தாயுடன்சேர்ந்து கிராமம் கிராமமாக சென்று மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். 'மரங்களை எனது குழந்தையாக பாவித்தேன். அடுத்த தலைமுறைக்கு செய்யும் சேவையாகவும் நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் கருதினேன் ''என கடந்த 2013-ம் ஆண்டு அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் திம்மக்கா.



திம்மக்காவுக்கு தற்போது 105 வயதாகிறது. இப்போதும் மரம் நடும் பணியை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த 80 வருடங்களாக மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். இந்த 80 வருடங்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் மரக்கன்றுகளைத் திம்மக்கா நட்டு வளர்த்திருக்கிறார். கர்நாடக அரசு முதியோருக்கான பென்ஷன் ரூ.500 தருகிறது. ஆனால், திம்மக்கா நட்டு வளர்த்த மரங்களின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொன்னால் அதிர்ந்து போவீர்கள். அந்த மரங்களின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடியை நெருங்குகிறது. அதே வேளையில் அவற்றால்  சுற்றுச்சூழலுக்கு விளையும் நன்மைகளுக்கு விலை போட முடியாது.

தற்போது 'பூமியை காப்போம் ' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி திம்மக்கா நடத்தி வருகிறார். அதன் மூலம் நர்சரி ஒன்றைத் தொடங்கி மரக்கன்றுகளையும் விநியோகிக்கிறார். இதுவரைக்கும் 5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளார். தள்ளாத வயதில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கெஸ்ட் லெக்சர் எடுக்கிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை திம்மக்கா சந்தித்திருக்கிறார். திம்மக்காவை உதாரணமாகக் கொண்டு இப்போது லட்சக்கணக்கானோர் உலகமெங்கும் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திம்மக்காவின் செயலை கவுரவித்து சிபிஎஸ்ஈ பாடத்தில் அவரைப் பற்றிய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது. கர்நாடக அரசு பள்ளிப் பாடங்களில் திம்மக்காவின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம் பெற்றுள்ளது.  திம்மக்காவின் சேவையைப் பாராட்டி இந்தியாவின் 'சிறந்த குடிமகள் விருது' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு காட்ஃபிரே பிலிஃப்ஸ் விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது பிபிசி நிறுவனமும் திம்மக்காவின் சேவையை பாராட்டி உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில்  சேர்த்துள்ளது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள திம்மக்கா, விருது மூலம் கிடைக்கும் நிதியை வைதது என்ன செய்து வருகிறார் தெரியுமா?. சொந்த கிராமமான குப்பியில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனைக் கட்ட முயற்சித்து வருகிறார்.

தன்னலமற்று சேவை புரிபவர்களுக்கு பணத்தை வைத்து வேறு என்ன செய்யத் தெரியும்?.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.