Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

“டிரம்புக்கு அவகாசம் தாருங்கள்; மோசமானவர் என முடிவுக்கு வராதீர்கள்” உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள்


லிமா,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு அவகாசம் தாருங்கள், இப்போதே அவர் மோசமானவர் என முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்று உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



டிரம்ப் தகுதியற்றவர் என கூறிய ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக ஜனாதிபதி ஒபாமா நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் தகுதியானவர் அல்ல என்று ஆவேசத்துடன் கூறி வந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் ஓட்டுகளை ஹிலாரி கூடுதலாக பெற்றபோதும், ‘எலெக்டோரல் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்றதால், டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உலக நாடுகள் அச்சம்

தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப், மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும்; அமெரிக்காவில் நுழைய ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு தடை விதிக்கப்படும்; சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனால், டிரம்ப் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளில் நிலவி வருகிறது.

வேண்டுகோள்

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடந்த ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அனைவரும் டிரம்போடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இப்போது அவர் லத்தீன் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நேற்று முன்தினம் இளைய தலைமுறையினர் மத்தியில் ஒபாமா பேசினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் உங்களுக்கு விடுக்கக்கூடிய முக்கிய செய்தி, நான் ஏற்கனவே ஐரோப்பிய தலைவர்கள் உச்சிமாநாட்டில் விடுத்ததுதான். இப்போதே புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் (டிரம்ப்) மோசமானவர் என முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்பதுதான். புதிய நிர்வாகம் பதவி ஏற்கட்டும். அவர்கள் தங்களது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதுவரை அவர்களுக்கு அவகாசம் தாருங்கள். அதன்பிறகு அது, சர்வதேச சமூகத்தினர் அமைதியுடனும், வளத்துடனும் வாழ்வதற்கு பொருத்தமானதாக இருக்கிறது அல்லது இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள்.

உலக நாடுகளுக்கும் பொருந்தும்...

இது உங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொருந்தும். அனைவருமே உடனடி தீர்ப்புக்கு வராதீர்கள். புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், தனது அணியினருடன் பதவி ஏற்கட்டும். அவர்கள் பிரச்சினைகளை ஆராயட்டும். அவர்கள் தங்களது கொள்கைகளை நிர்ணயம் செய்யட்டும்.

ஏனென்றால், பிரசாரத்தின் போது கூறுவதும், ஆட்சிப்பொறுப்பின்போது கூறுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.

லத்தீன் அமெரிக்காவை பொறுத்தமட்டில், அமெரிக்காவின் கொள்கைகளில் புதிய நிர்வாகத்திடம் இருந்து நான் பெரிதான மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.