Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

இந்திய- சீன ராணுவத்திற்கு மத்தியில் ‘இயற்கை அன்னை’


-லடாக்!

இயற்கையின் இணையற்ற கொடை. நீலநிற வானமும், நீல நிற நதியும் தொட்டு விளையாடும் சொர்க்க பூமி. அதனால் இதன் சிறப்பை உலகமே பேசுகிறது.

லடாக்கில் அமைந்திருக்கும் ‘லே’ எனும் பகுதி மிக முக்கியமான சுற்றுலா தலம். இது இந்தியா-சீனாவிற்கு போக்குவரத்து வழித்தடமாகவும் இருக்கிறது. இதை உள்ளடங்கிய 480 சதுர கி.மீ. பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்குகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைத்து தங்குவது அவ்வப்போது நடக்கிறது. சர்ச்சை நீடித்தாலும் சுற்றுலா பயணிகள் வரவு குறையவில்லை.

மலைப்பிரதேசங்களில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் இடம், லே. அதனால் உச்சிக்கு செல்லச்செல்ல மூச்சுவிட சற்று சிரமமாக இருக்கும். சுவாச பிரச்சினை இருப்பவர் களுக்கு மூச்சுச் திணறல் மட்டுமின்றி தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்து செல்வது நல்லது. அங்கேயும் மருத்துவ ஆலோசனை குழுக்கள் உள்ளன. அங்கு ஓரிரு நாட்கள் தங்கி விட்டால் இந்த பிரச்சினையெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அங்குள்ள சூழலுக்கு பழகிவிடலாம்.

லடாக் பகுதி உணவு வகைகள் ஏறக்குறைய திபெத் நாட்டின் உணவுப்பழக்கத்தை ஒத்திருக்கும். துக்பா என்ற உணவு அங்கு பிரசித்தி பெற்றது. அது நூடூல்ஸ் சூப் போல் இருக்கும். அது தவிர பார்லியால் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் வித்தியாசமாக சமைத்து, விசேஷ ருசியில் தருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கண்கவர் வண்ண திருவிழாக்கள் அங்கு நடக்கின்றன. அதை பார்ப்பது கண்கொள்ளகாட்சியாக இருக்கும். அவர்களின் பாரம்பரிய இசையும், நடனமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

ஜூன் மாத விழாக்கள் மக்களின் சிந்தனைக்கு விருந்தளிக்கும். அந்த மாதம்தான் ‘ஹேமிஸ் உற்சவம்’ மற்றும் ‘சிந்து தர்ஷன்’ ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். அங்குள்ள மக்கள் சிந்து நதியை தங்கள் தாயாக வணங்குகிறார்கள். தங்களை வாழ வைக்கும் சிந்து நதிக்கு அப்போது பூஜை செய்து வணங்கி வழிபடுவார்கள்.

செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை லடாக் திருவிழா நடைபெறும். அதில் பிரபலமான கலைஞர்கள் பங்குபெற்று விதவிதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் விழாக்கள் நடைபெறுகின்றன.

லடாக் பகுதியில் உள்ள கட்டிடங்களும் கலை அழகுமிக்கவை. அவை திபெத், இந்தியா, பவுத்த கட்டிட கலையை ஒருங்கிணைத்து பிரதிபலிக்கும். அவற்றுள் குறிப்பிடத்தக்கது ‘திக்ஸே மோனேஸ்டரி’ என்ற மடம். மிக நேர்த்தியாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஏராளமான புத்த பிக்குகள் வசிக்கிறார்கள். அவர்கள் கருஞ்சிவப்பு நிறத்திலான நீண்ட உடைகளை அணிந்திருப்பார்கள். பவுத்த சிறுவர்கள் அந்த உடையில் பார்க்க மிக அழகாக இருப்பார்கள். அழகு மட்டுல்ல, அங்கு நிலவும் குளிருக்கும் அது ஏற்ற உடை.

இந்த மடம் சிறு சிறு கோவில்களால் சூழப்பட்டுள்ளது. நடுவில் பெரிய கோவில் அமைந்திருக்கிறது. கோவிலை நாலாபுறமும் பெரிய மதில் சுவர்கள் கம்பீரமாக சூழ்ந்திருக்கிறது. அதனுள் பெரிய முற்றம் ஒன்று இருக்கிறது. அது மைதானம் போல் காணப்படுகிறது. அங்குதான் எல்லோரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்கிறார்கள். உள்ளே இரண்டு மாடி உயரத்திற்கு பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. மேலிருந்து பார்த்தால் புத்தர் தலை மட்டும்தான் தெரியும். பால்கனியில் நின்று பார்த்தால்தான் சிலையின் மற்ற பகுதிகள் தெரியும்.

லடாக்கில் முக்கியமாக காணவேண்டியது, லே பேலஸ். இது ஒன்பது அடுக்குகளை கொண்ட பிரமாண்டமான அரண்மனை. இது நாம்க்யால் என்ற உயரமான பாறையின் மீது அமைந்திருக் கிறது. இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரண்மனை சிந்து நதிக்கரையில் வீற்றிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த அரண்மனையில் அரச குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது அருங்காட்சியகமாக திகழ்கிறது. அங்கு அரசர்கள் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், கவசம், கிரீடம், உடைவாள், சிம்மாசனம், அரசியின் அபூர்வ அணிகலன்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. 450 வருடங்களுக்கு முந்தைய ஓவியங்களும் அங்குள்ளன.

லடாக்குக்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்கள்!

ஹேமஸ் குகை: அமைதியாக தியானம் செய்ய ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அழகிய மடம் இது. இதை 1672-ம் ஆண்டு க்யாலவா எனும் மன்னர் நிர்மாணித்தார். இங்கு ஜூலை மாதம் வண்ணமயமான விழாக்கள் நடைபெறும். இந்த மடத்திற்கு அருகில் தேசிய உயிரின பூங்கா உள்ளது.



சாந்தி ஸ்தூபி: இது இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட அமைதியான இடம். அங்கு அமைந்திருக்கும் தூண் அனைவரையும் கவரக்கூடியது. தூணின் மேல் பகுதியில் இருந்து, லேயின் முழு அழகையும் தரிசிக்கலாம். தூண் பகுதிக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஏறி செல்ல முடியாதவர் கள் சாலை மார்க்கமாகவும் பயணிக்க லாம்.

காந்தமலை: ‘மேக்னட்டிக் ஹில்’ எனப்படும் இது விசித்திரமான மலை. இங்கு வாகன பயணம் மேற்கொள்வது திரில்லிங்கானது. கவனமில்லாமல் சென்றால் ஆபத்தானது.

ஸ்டைங்கோங் இஸோ: இது அழகிய நதி. நீர் கண்ணாடி போன்று பிரதிபலிக்கும். மேலிருந்து பார்த்தால் தரைமட்டம் வரை துல்லியமாக தெரியும். வண்ண, வண்ண மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரில் உலாவதை பார்க்கும்போது மீன் தொட்டி நினைவுக்கு வரும். நதிக்கரையோரம் ஆங்காங்கே ராணுவ படையும், அவர்கள் தங்கும் கூடாரமும் தெரியும். இந்த நதி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஓடுகிறது.

ஹால் ஆப் பேம்: கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவிடம் இது. இதன் ஒரு பகுதியில் ராணுவ வீரர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் அணியும் சீருடை, பனி பிரதேசத்தில் நடக்கும் பிரத்திகேய காலணி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு உணவு வகைகள், அவைகளை சமைக்கும் முறை, கடும் குளிரில் ரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கப்படும் மருந்து வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

ஹோரோவர் போர்ட்: சரித்திரத்தை அறியும் ஆர்வம் உடையவர்களை கவரும் கோட்டை இது. சரித்திர புகழ்வாய்ந்த இந்த கோட்டை ஜெனரல் ஜோராவர் சிங் நினைவாக கட்டப்பட்டது. இவர் இந்திய-சீன சண்டையில் ஹீரோவாக விளங்கியவர்.

இதை தவிரவும் அங்கு ரசித்து பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. லடாக் பகுதிக்கு சென்று வருவது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.