Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; படகுகள் மூலம் மீட்பு பணி


பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கொட்டித்தீர்த்த கனமழை பெங்களூரு நகரை புரட்டிப்போட்டது. நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிவயர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

38 மில்லி மீட்டர் மழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் பெங்களூருவில் கடந்த வாரம் வரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நகரில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

நேற்று காலை வரை இடைவிடாமல் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் கோடிசிக்கனஹள்ளி, விஜயா வங்கி காலனி உள்பட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. ஒரேநாள் இரவில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகரிகள் தெரிவித்தனர்.

மழை நீருடன் கழிவு நீரும்...
மடிவாளா ஏரி நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளில் 3 முதல் 4 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது. இதனால் அதில் குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில வீடுகளுக்கு அழையா விருந்தாளியாக பாம்புகளும் வந்தன. மேலும் மடிவாளா ஏரி தண்ணீர் ஓசூர் சாலையிலும் நுழைந்தது. அந்த சாலையில் தண்ணீர் முழங்கால் உயரத்திற்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் தட்டு தடுமாறி சென்றன. ரோடு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர்.

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள கோடிசிக்கனஹள்ளி பகுததியில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து வெளியேறிய உபரி நீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. அந்த பகுதியில் சுமார் 5 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை. அங்குள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கின.

கர்ப்பிணி பெண்ணை மீட்டனர்
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தீயணைப்பு படையினர் படகில் சென்று மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதே பகுதியில் சிக்கி தவித்த நூற்றுக்கணக்கான மக்களை படகு மூலம் மீட்பு படையினர் மீட்டனர். அந்த பகுதிய மக்கள் வீட்டில் இருந்து தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் படகில் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மழை வெள்ளம் சூழ்ந்ததால் அந்தப் பகுதியே தீவாக மாறியது.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் படகில் உணவு பொருட்களை எடுத்து சென்று அங்குள்ள மக்களுக்கு கொடுத்தனர். குடிதண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் மற்றும் உணவு பொட்டலங்களை மீட்பு குழுவினர் படகில் சென்று வழங்கினர். அதேபோல் பி.டி.எம். லே–அவுட் 34–வது மெயினில் இருந்து 39–வது மெயின் வரைக்கும் 3 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நின்றது. எலெக்ட்ரானிக் சிட்டி, தொட்டனேகுந்தி, காரேபாளையா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேயர் மஞ்சுநாத்ரெட்டி
ஏரிகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கரைபுரண்டு வந்த தண்ணீரில் மீன்களும் மிதந்து வந்தன. சிலர் அந்த மீன்களை ஆர்வமாக பிடித்தனர். மாரத்தஹள்ளி மற்றும் எச்.ஏ.எல். பகுதிகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் உள்பட 5–க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. நேற்று பகல் முழுவதும் மழை தூறல் விழுந்தபடியே இருந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேயர் மஞ்சுநாத்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியது, சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது, சாலையில் அரிப்பு போன்ற காரணங்களால் பெங்களூரு நகர் முழுவதும் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் சாலைகளில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழை நீடிக்கும்
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பெங்களூருவை புரட்டிப்போட்ட இந்த கனமழை, சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்துவதாக இருந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர். பெங்களூருவில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை அதிகாரி வரதராஜூ கூறுகையில், “மழை அதிகமாக பெய்ததால் மடிவாளா ஏரியில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் மழை வராமல் இருந்தால் இன்னும் சில மணி நேரங்களில் தண்ணீர் வடிந்துவிடும். ஒருவேளை மீண்டும் மழை அதிகமாக வந்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்னும் தண்ணீர் அதிகமாக வரும் நிலை ஏற்படும். 6 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் எங்காவது தண்ணீர் அதிகமாக தேங்கி பாதிக்கப்பட்டால் அதுபற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்“ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.