Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

கட்டிட சிலாப் இடிந்ததால் 13–வது மாடியில் இருந்து விழுந்தனர் 9 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி புனேயில் துயர சம்பவம்


புனேயில், கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் 13–வது மாடியின் ‘சிலாப்’ இடிந்து விழுந்து 9 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

கட்டிட சிலாப் இடிந்தது
மராட்டிய மாநிலம் புனே பிம்ப்ரி–சிஞ்ச்வாட்டில் உள்ள பாலேவாடி பகுதியில் ‘பார்க் எக்ஸ்பிரஸ்’ என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 12 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது 13–வது மாடி கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது.

நேற்று அந்த மாடியில் வழக்கம்போல் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. மாடியில் உள்ள பெரிய சிலாப்பில் மேற்பூச்சு செய்யும் பணியில் 11 கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காலை 11 மணியளவில் தொழிலாளர்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்த அந்த சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இடிபாடுகள் அவர்கள் மீது விழுந்து அமுக்கியது.

உயிரோடு சமாதி
இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரோடு சமாதியாகினர். அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்தன. மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதற்கிடையே ஆம்புலன்சுகளும் அங்கு வந்து சேர்ந்தன.

மீட்கப்பட்ட 3 பேரும் ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு புனே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேயர் விரைந்தார்
மற்ற 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொடர்ந்து, இடிபாடுகளை அகற்றும் பணி துரிதமாக நடந்தது. மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா? என்பதை கண்டறிய தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த கட்டிட விபத்து பற்றி அறிந்ததும் புனே மேயர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை
சிலாப் இடிந்து 9 பேரை பலி கொண்ட கட்டிடம் 11 மாடிகள் மட்டுமே கட்டுவதற்கு மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கட்டிடத்தை கட்டி வரும் கட்டுமான அதிபர் விதிமுறைகளை மீறி கட்டிடத்தை 13–வது மாடி வரையிலும் உயர்த்தி கட்டி இருக்கிறார்.

இந்த விபத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு புனே மாநகராட்சி அதிரடியாக தடை விதித்தது. மேலும் இந்த கட்டிட விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் புனே மாநகராட்சி கமிஷனர் குணால் குமார் தெரிவித்தார்.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இன்றி தொழிலாளர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்தியதே இந்த விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழக்க முக்கிய காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.