Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2017

இந்த திருநெல்வேலி அருவியில் ஆண்டுமுழுவதும் குளிக்கலாம்!


அருவியில் குளிப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவம். மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் அந்த அனுபவத்துக்காக அருவிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகரித்து வருகிறது. ஆனால், அருவிகளில் தண்ணீர் கொட்ட வேண்டும் என்றால் உரிய சீசன் இருக்க வேண்டுமே? ஆனால், அது மாதிரியான கவலை எதுவுமே இல்லாமல் அருவிக் குளியலுக்கு செல்ல வேண்டுமானால் மறு சிந்தனையே இல்லாமல் மணிமுத்தாறு அருவிக்கு செல்லலாம். இப்போது மழை சீசனா? அருவியில் தண்ணீர் விழுமா என்கிற கவலையே உங்களுக்கு தேவையில்லை. வருடம் முழுவதுமே இந்த அருவியில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். மழைக் காலத்தில் தண்ணீர் அதிகம் விழுந்தால் வனத்துறை அதிகாரிகள் குளிப்பதற்கு தடை விதித்து விடுவார்கள். அதைத் தவிர, எப்போதும் நம்பிச் செல்லக் கூடிய அருவி மணிமுத்தாறு.



நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியானது திருநெல்வேலியில் இருந்து 48 கி.மீ தொலைவில் இருக்கிறது. பேருந்து வசதியும் உண்டு. வாகனத்தில் செல்வதாக இருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் வழியில் இந்த அருவி இருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி இருக்கிறது. அதில் அனுமதிச் சீட்டு பெற வேண்டும். வாகனத்துக்கு 50 ரூபாயும் நபருக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். கேமரா கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு தனியாக 50 ரூபாய் வசூலிக்கிறார்கள். மலையில் காடுகளைக் கடந்து சென்று இந்த அருவியை அடைய வேண்டும்.



தூரத்தில் இருந்து அருவியைப் பார்த்தால் ‘இது ஒன்றும் பிரமாண்டமாக இல்லையே?’ என்கிற எண்ணம் ஏற்படக் கூடும். ஆனால், அருவியில் தலையை காட்டியதும் தான் அந்த தண்ணீரின் அருமையை புரிந்து கொள்ள முடியும். நீண்ட தொலைவில் உள்ள உயர்ந்த மலைகளில் இருந்து அரிய மூலிகைகளின் ஊடாக ஓடி வரும் இந்த தண்ணீர் உடலில் பட்டதுமே மெய்சிலிர்க்க வைக்கும். தலையில் சில்லிட வைக்கும் இந்த அருவியில் நனைந்தவர்கள் வெளியே வரவே மனமில்லாமல் குளித்துக் கொண்டிருப்பார்கள். கொட்டும் அருவியை  இரண்டாகப் பிரிக்கும் மலைப்பகுதியில் ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு இடத்தில் பெண்களும் குளிக்கிறார்கள். எப்போதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் குளிக்க வருபவர்கள் தங்கள் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், குரங்குகள்!



கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருக்கும் பொருளை சட்டென பிடுங்கிக் கொண்டு மரத்தின் உச்சிக் கொண்டு சென்றுவிடும் என்பதால் கவனம் அவசியம். அத்துடன், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு தகவல் இருக்கிறது. அதாவது, அருவியில் குளிக்கும் உற்சாகத்தில் இருக்கும் சிலர், தங்களுக்குத் தான் நன்றாக நீச்சல் தெரியுமே என்கிற எண்ணத்தில் அருவியின் அருகில் இருக்கும் தடாகத்தில் குதித்து குளிப்பார்கள், அதில் இருக்கும் ஆபத்தை அறியாமல். அதனால் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

மனதை கொள்ளை கொள்ளும் அருவியையும் அதன் புத்துணர்வையும் அனுபவிக்க நினைப்பவர்கள் எந்த சீசனுக்காகவும் காத்திருக்காமல் எப்போதும் தாராளமாக செல்லலாம். அதனால், உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் அங்கு செல்ல இப்போதே டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.