Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

தொட்டுவிடும் தூரம் தான்!-சிறுகதை


கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைக் காண சகிக்காமல், 'ஓ'வென அலறினாள் சஞ்சனா. பூரிப்பாய் இருந்த இடம், தட்டையாய், பூரான் கால்களாய், ஓடிய தழும்புடன் இருந்ததைப் பார்த்ததும், 'அய்யோ...' என அலறி, கண்களை இறுக மூடினாள்.

உடலில் புதிய மாற்றங்கள் உருவாகி, பல வகை உணர்வுகளை பூக்க வைக்கும் பருவம் அல்லவா இது! மனதில் ரகசியமாக ஏற்பட்ட சின்ன கர்வம், பெருமிதம், தன்னம்பிக்கை, சின்னதாய் ஒரு மமதை!

இவை அனைத்தும் இன்று இல்லாமல் போய், அந்த வெற்றிடம், அவளைத் தூக்கிப் போட்டு மிதித்தது.

'இதை இழந்து எப்படி மூளியாய், வெறுமையாய் வாழ்வது...' என்று மனம் பதறியவளின் வலது கை, மிகுந்திருக்கும் அடுத்த பாகத்தை இறுக பற்றியது. எங்கே இதுவும் தன்னைவிட்டு நழுவி விடுமோ என்ற பயம் எழுந்து, மயக்கம் வருவது போலிருந்தது.

அதையும் மீறி, வெறுப்பின் உச்சத்தில், அடி வயிற்றிலிருந்து அழுகை பீறிட, 'ஓ'வென அழுதாள் சஞ்சனா. சத்தம் கேட்டு ஓடி வந்தனர், அக்கா சரிதாவும், அம்மாவும்!

இரண்டே எட்டில், சஞ்சனாவை, தன்னோடு அணைத்துக் கொண்டாள் சரிதா.
''என்னை ஏன் காப்பாத்துனே... என்னால இப்படி மூளியலங்காரியா வாழ முடியாது; நான் சாகப் போறேன்...'' என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் சஞ்சனா.

அவள் வாயைப் பொத்தி, ''சஞ்சும்மா... அழாதே...'' என்று தேற்றினாள் சரிதா.
''என்னால இந்த நிலையில வாழ முடியாதுக்கா,'' திமிறினாள் சஞ்சனா.

''அப்படி சொல்லாத கண்ணம்மா... வாழ்க்கைங்கிறது இது மாத்திரம் இல்ல...''
''புரியாம பேசாதே; இந்த அசிங்கத்தோட என்னால வாழ முடியாது. அய்யோ... எல்லாரும் என்னை கேலியா பாப்பாங்களே... நான் எப்படி அவங்கள எல்லாம் ஏறிட்டு பாப்பேன். என்னை விடுங்க; நான் சாகப் போறேன்...'' என பைத்தியம் பிடித்தவள் போல அரற்றியவளை, ஒருகணம் உற்றுப் பார்த்த சரிதா, அவள் தோளை பிடித்து நிறுத்தி, கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

ஸ்விட்ச்' போட்டாற் போல அழுகையும், கூச்சலும் நின்றது; அம்மா கூட, திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்தாள்.

''சாகப் போறீயா... போடீ போ... அந்த சாவு கூட நீ நெனச்சா வராது. ஜனனம் எப்படி நம்ம கையில இல்லயோ, அதைப் போல தான் மரணமும்! சாகிற நேரம் வந்தா தான் சாக முடியும்; இல்லேன்னா, நீ செய்யுற முயற்சியால, வேற விபரீத விளைவுகளை உண்டாக்கிட்டு, தூர நின்னு சிரிக்கும். ஆஸ்பத்திரிக்கு வந்து பாரு... உயிருக்காக எத்தனை பேரு போராடிக்கிட்டு இருக்காங்க, மரண அவஸ்தையாலே எவ்வளவு பேரு, தினம் தினம் செத்துப் பிழைக்கிறாங்கன்னு!

''உனக்கு அழகு அவ்வளவு முக்கியமாப் போச்சா... உடம்புல ஒரு உறுப்பை, நோய் பரவாம இருக்க வெட்டி எறிஞ்சுட்டா, நீ செத்துப் போவியா... நீ சாகாம இருக்கத் தானடீ இத்தனை பாடும்... இதப் புரிஞ்சுக்காம பேசுறயே... எல்லாத்துக்கும் சாவு தான் தீர்வா...''

அனிச்சையாய் கண்ணீர் வழிய, பரிதாபமாய் சகோதரியைப் பார்த்தவாறு, சுவரோரமாய் மடங்கி உட்கார்ந்தாள் சஞ்சனா.

''சஞ்சு... நிதர்சனத்தை சந்திச்சுத் தான் ஆகணும் புரிஞ்சுக்கோ... கஷ்டந்தான்! கடைசி முயற்சியா, உயிரை காப்பாத்தற ஒரே நோக்கத்துக்காகத் தான், உறுப்பை வெட்டி எடுத்துடறோம். இத புரிஞ்சுக்காம... சாகப் போறாளாம் சாக... சரி சரி அழாதே... அம்மா... இவள பத்திரமா பாத்துக்குங்க. உங்க கண் பார்வையிலேயே வச்சிட்டிருங்க. எனக்கு ஆஸ்பிடலுக்கு நேரமாச்சு, கிளம்புறேன்,'' என்று கூறி கண்களைத் துடைத்தாள், டாக்டர் சரிதா.

'இருபது வயது சின்னப் பெண்ணுக்கு இது பெரிய இடிதான். சிட்டுக்குருவி போல, கவலையில்லாமல் சிறகடித்துப் பறந்தவளை, இப்படி ஓர் நோய் வந்தா, சிறகைப் பிய்த்துப் போடும்!

'நெகுநெகுவென்ற உயரமும், தகதகத்த பருவமும், அப்பருவம் தந்த எழிலும், அதில் மதர்த்து, செறிந்த முன்னழகும், சின்ன இடையும், வாய்கொள்ளாச் சிரிப்பும், அவளை, கர்வ பங்கம் செய்தாற்போல இப்படி அழகைச் சிதைத்து விட்டதே... உயிரை விட அழகு முக்கியம் என நினைக்கும் இந்த வயதில், எந்த இளம் பெண்ணால் இதை தாங்க முடியும்... இதிலிருந்து இவள் மீண்டு வர வேண்டுமே... தெய்வமே... அவளுக்கு மனோபலத்தைக் கொடு...' என மனதில் வேண்டியபடி வெளியேறினாள் சரிதா.

இச்சம்பவம் நடந்து மாதங்கள் ஐந்தைக் கடந்து விட்டன. ஆனாலும், சஞ்சனாவிடம் பெரிதாய் மாற்றமில்லை. அழுகையோ, பேச்சுக்களோ இல்லை. எப்போதும் மவுனமாக, தன் அறைக்குள் அடைந்தே கிடந்தாள்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை இழுத்து வைத்து பேசுவாள் சரிதா.
'வாழ்க்கையில... இழப்புன்னு ஒண்ணு வந்தப்பறம் சாதிச்சவங்க தாண்டீ அதிகம். நடிகை சுதா சந்திரனைப் பாரு... காலையே பாதி வெட்டி எடுத்த பின்பும், அவங்க வாழ்க்கைய ஜெயிக்கலயா... யுவராஜ் சிங் மன உறுதியோட மீண்டு வரலயா... வெளியே வா சஞ்சு... இப்போ இருக்கிற நவீன வசதிகளை வெச்சு, இதை வெளிப்பார்வைக்கு, வித்தியாசம் தெரியாதபடி சரி செய்ய முடியும். இதையே நினச்சு குமையாதே... நீ சாதிக்கப் பிறந்தவ... எப்பவும் மூடிக் கிடக்கிற கதவையே வெறிச்சு, ஏக்கமா பாத்துட்டு இருந்தா, திறந்திருக்கிற கதவு கண்ணுல படாமலே போயிடும்...' என்று பலவாறு நம்பிக்கை ஊட்டுவாள் சரிதா.

ஆனால், காது அவற்றைக் கேட்டாலும், அவள் மனம், சுயபச்சாதாபத்தில், எரிமலையாய் வெடித்துச் சிதறுவதற்கு நேரம் பார்த்தது.
நிராசையும், விரக்தியும் போட்டி போட்டு அவளைப் படுத்தி எடுத்தன. 'மற்றவர்களுக்கு கேலி பொருளாகி விட்டோமே...' என்ற உளைச்சலில், தவித்தது மனம். 'வாழத் தகுதியற்றவளாகி விட்டோமே...' என்ற எண்ணமே பிரதானமாக உழன்றது. 'குரூபியாகிவிட்ட நாம் வாழவே கூடாது; செத்துப் போயிடணும்...' என்ற எண்ணமே, அவளை ஒரு விஷவாயு போல சுற்றிச் சுற்றி வந்து, சரியான நேரத்துக்கு வேட்டை நாய் போலக் காத்து கிடந்தது.
பிரதோஷம் என்பதால், கோவிலுக்குப் சென்றிருந்தாள் அம்மா. 'வர லேட்டாகும்...' என்று தகவல் தெரிவித்திருந்தாள் சரிதா. இதுதான் சரியான நேரம் என முடிவெடுத்து, சமையல் அறையில் நுழைந்து, கத்தியை தேடி எடுத்தாள் சஞ்சனா. சோபாவில் அமர்ந்து, இடது கையை வாகாக நீட்டி, வலது கையை உயர்த்தி, கண்களை மூடி, வெறியுடன் இறக்க...

காலிங்பெல் கர்ணகடூரமாய் ஒலித்தது.

'ச்சே...' என்று கத்தியை தூர எறிந்து, கதவைத் திறந்தாள் சலிப்புடன்!
அம்மா இல்லை... யாரோ வயதான பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.
''யாரு நீங்க... என்ன வேணும்?''

''டாக்டர் சரிதா வீடு இது தானுங்களே...''

''ஆமா... அவங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க; அங்க போங்க,'' என்று கூறி கதவை சாத்த முனைந்தாள் சஞ்சனா.

''அம்மாடி... டாக்டரம்மாவோட தங்கச்சிய பாக்கணும்...'' என்றாள் முதியவள்.
''நான் தான்... நீங்க யாரு?''

''நீதானாம்மா அது... தாயி... நீ தான், என் பேத்திய காப்பாத்தணும்...''
''பாட்டி... எங்கக்கா தான் டாக்டர்; நானில்ல...''

சாகப் போற வேளையில் இது என்ன தொல்லை என நினைத்து, எரிச்சலில் சுள் என்று பேசினாள். வந்தவள் அதைக் கண்டு கொள்ளாமல், ''என் பேத்திக்கும், உன் வயசு தான்; பாவி மகளுக்கு, மாருல புத்துகட்டி. அதுக்காக ஒரு பக்கத்தை எடுத்துடணும்ன்னு டாக்டர் சொன்னதும், விஷத்தைக் குடிச்சிட்டா என் பேத்தி. எப்படியோ காப்பாத்திட்டோம். நீ வந்து கொஞ்சம் எடுத்துச் சொல்லும்மா.''
''நானா... நான் வந்து...''

''உசிரை விட, உறுப்பு முக்கியமில்லன்னு அந்த வெத்து ஜென்மத்துக்கு, புரிய வை தாயீ... கல்யாணமாகாத சின்னப் பொண்ணான நீயே, மன உறுதியோட இதை ஏத்துகிட்டு நிக்கலயா... அந்த மனோ தைரியத்தை குடுத்து, அவளுக்கு பேசி புரிய வை. பொம்பளைக்கு எடுப்பான மார்பகம் அழகு, பெருமை தான். குழந்தைக்கு உசிர் ஊட்டுற அன்னப்பால் இருக்கிற இடம். ஆனா, அதுவே விஷமாப் போயிட்டா, என்ன செய்ய முடியும்... அதுக்காக உசிரையா விட நினைப்பாங்க... இந்த சின்ன வயசுலே இதுல இருந்து நீ மீண்டு வரலே... நீ தாம்மா எடுத்துச் சொல்லி புரிய வைக்கோணும்,'' என்றாள்.

''நானா...'' நிமிர்ந்து நின்றாள் சஞ்சனா. அதுவரை பேயாட்டம் ஆடிய அவள் மனம், 'சட்'டென நின்றது.

''ஆட்டோவுல தாம்மா வந்தேன். ஓரெட்டு வந்து பாத்துட்டு வந்திடு. நீ வந்து பேசுனா, என் பேத்தி தெளிஞ்சுடுவா. காய்ஞ்சு போன சருகான நானே போராடிட்டு இருக்கேன். என் பொண்ணு வயித்துப் பேத்திம்மா அவ. ஆத்தாளையும், அப்பனையும் விபத்துல வாரிக் குடுத்துட்டா. பச்சை மண்ண வளத்து, ஒருத்தன் கையிலே புடிச்சு குடுத்தேன். அந்த படுபாவி... இவ வயித்துல ஒரு புள்ளைய குடுத்துட்டு, எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான்.

''இந்த வயசுக்கு மேல, இவளுக்காகவும், இவ பெத்ததுக்காகவும் உசிர புடிச்சுகிட்டு நிக்கறேன். இவ என்னடான்னா சாகப் போறாளாம்... கையளவு மாமிசம் போனாத் தான் என்ன... உதறிட்டு, நிமிர்ந்து நிக்க வேணாமா, பெத்த புள்ளை மூஞ்சை பாக்க வேணாமா... இன்னா நியாயம்மா இது... நம்மை படைச்சவனுக்குத் தெரியாது... ஒவ்வொரு உசிரையும், ஒரு காரணத்துக்காகத் தானே படைச்சிருக்கான்!

''காரணமில்லாம காரியமில்ல; காரியமில்லாம காரணமில்லன்னு சொல்வாங்க. நமக்கு விதிச்சு வச்சுருக்கிற காலம் மட்டும் வாழ வேணாமா... பொசுக்குன்னு உசிர விட பாக்குறாளேம்மா...'' என்றவள், சட்டென உடைந்து அழுதாள்.

'ஓ... இதுதான் அக்கா சொன்னதா...' சஞ்சனாவுக்குள் ஏதோ, ஒன்று, 'மளுக்' கென்று உடைந்தது. திடீரென்று யாரோ திரியைத் தூண்டி விட்டாற் போல மனதில் வெளிச்சம் பரவியது.

''இதோ வந்திடறேன் பாட்டி... ஒரு நிமிஷம்!''

அவள் குரல், அவளுக்கே புதுமையாய் கேட்டது. நம்பிக்கைப் பூவொன்று, ஆயிரம் இதழ்களை விரித்தாற் போல, நடையில் சின்னதாக துள்ளல் பிறந்தது
'என் வாழ்வுக்கும் அர்த்தம் உண்டு... என் அங்கஹீனம் ஏகடியமோ, எகத்தாளமோ அல்ல, அது ஒரு உன்னதம். என்னாலும் கம்பீரமாக மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

'கிழவி சொன்னது போல கையளவு மாமிசம் போனால் தான் என்ன... மனசு ஆரோக்கியமாய், வலிமையாய் இருந்தால் போதும்.

'இழப்பு இல்லை என்று எண்ணினால், எல்லாமே துச்சம். தொடுவதற்குத் தான் வானம் வரை, எல்லை இருக்கிறது. எல்லாமே, தொட்டு விடும் தூரம் தான்...' என நினைத்தவளுக்கு தன்னையறியாமல், அவள் இதழ்கள் ஒரு பாடலை, 'ஹம்' செய்தது.

ஆட்டோ வேகமெடுக்க, பார்க்கிற எல்லா காட்சிகளும், புத்தம் புதிதாய் தெரிந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.