Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2017

கொதிக்கும் வைகோ: அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும், பகவத்கீதை புத்தகமும் வைத்தது ஏன்?


மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் சிலை அருகே திருக்குறளை வைக்காமல் பகவத் கீதை புத்தகத்தை வைத்தது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.

மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபத்தை கடந்த 27ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தின் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்பதால், குழந்தைகளுடன் விளையாடுவதுபோன்று முதல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

2வது சிலை அறிவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை பார்வையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளது.

3வது சிலை குழந்தைகள் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், 4வது சிலை குழந்தைகள் ஒருவரையொருவர் கை தூக்கிவிட்டு உதவி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் பகவத்கீதை புத்தகமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அப்துல்கலாம் சிலை அருகே பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் மணிமண்டபத்தில், அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையும், பகவத் கீதையும் எதற்காக வைக்கப்பட வேண்டும்? என்று கேட்டார்.

இதனால் மத்திய அரசு என்ன சொல்ல வருகிறது? உலகில் எங்கு சென்றாலும் தமிழில் பேசி தமிழ் இலக்கியங்களை போற்றியவர் அப்துல் கலாம். அவர் சிலை அருகே திருக்குறளைத்தான் வைத்திருக்க வேண்டும்.

திருக்குறளை விட உயர்ந்த புத்தகம் உலகத்தில் இருக்கிறதா என்று கேட்ட வைகோ, தமிழகத்திற்குள் எப்படியாவது, ஏதாவது ஒருவகையில் காலடி எடுத்து வைக்கவேண்டும் என்ற பாஜகவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார். கழகங்கள் இல்லாத ஆட்சி என்று கூறி கழகம் செய்து வருவதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.