July 25, 2017
கோவில் இருந்ததாக கூறி தில்லியில் புதிய மசூதி கட்டிடம் இடிப்பு..! பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் !
”டெல்லி சௌகான்பட்டியில் மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்தது” – வாட்ஸாப் மூலம் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரம் உருவாக்கிய வன்முறை
அபிஷேக் டே
2017 ஜூன் 24
செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவரை சிலர் இடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று மில்லி கெஜட் என்ற டிஜிட்டல் பத்திரிக்கையின் முகநூலில் 2017 ஜூன் 7 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகுதான் விஷயம் வெளியே தெரிய வந்தது.
அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டதும், அதற்குப் பின்னர் பத்திரிக்கையாளர் மீது அங்கே நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை தேசிய அளவிலான கவனத்தை ஈர்ப்பதாக இல்லை என்றாலும், இந்தியத் தலைநகரில் புகைந்து கொண்டிருக்கும் வகுப்புவாத பதட்டங்களை முன்னெடுத்து வைப்பவையாகவே இருக்கின்றன.
டெல்லி சௌகான்பட்டியில் உள்ள அம்பே வளாகத்தில், அந்தப் பகுதியில் வசிக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களில், 25 குடும்பத்தினர் தாங்கள் தொழுவதற்காகப் பயன்படுத்தும் வகையில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான 900 சதுரஅடி நிலத்தில் நான்கு சுவர்களை மட்டுமே கொண்ட, கூரையில்லாத செங்கல் கட்டிடம் ஒன்றைக் கட்டினர். இந்தக் கட்டிடத்தை இடிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கோரி அந்தப் பகுதியில் இருக்கும் ஹிந்து குடியிருப்புவாசிகள் சிலர் வாட்ஸாப், முகநூல் மூலமாக தகவல்களைப் பரப்பி வந்ததன் விளைவாக, ஜூன் ஒன்றாம் தேதி அங்கே பிரச்சனை ஆரம்பித்ததாக மசூதி கட்டப்பட்ட இடத்தின் உரிமையாளரும், கட்டிட ஒப்பந்ததாரராக இருப்பவருமான அக்பர் அலி கூறுகிறார்.
அதே பகுதியில் வசித்து வரும் பிரதீப்சிங் என்பவர் வாட்ஸாப் மூலமாக அனுப்பிய செய்தியில், “வருத்தமான செய்தி. டெல்லியின் சபாபூர் கிராமத்திற்கு அருகில் சௌகான்பட்டி என்றொரு பகுதி இருக்கிறது. அங்கே வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் ஹிந்துக்களே. எட்டு முதல் பத்து முஸ்லீம் குடும்பங்களே அங்கே இருக்கின்றன. அங்கே உள்ள தெரு ஒன்றில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான 900 சதுர அடி நிலம் ஒன்று இருக்கிறது. ஆனால் அவர் அந்த இடத்தில் வசிக்கவில்லை. அங்கே ஒரு மசூதியைக் கட்டுவதற்காக ஐந்து அடி உயர சுவரை அவர் கட்ட ஆரம்பித்து இருக்கிறார். மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே முஸ்லீம்கள் அங்கே இருப்பதால், அந்த மசூதி சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்படுவதாக இருக்கிறது. பிற பகுதிகளில் இருந்து முஸ்லீம்களை அவர் நமாஸ் செய்வதற்காக இங்கே அழைத்து வருகிறார். இதனால் உள்ளூர் மக்கள் கோபம் அடைந்திருப்பதால், நிலைமை இன்னும் சிறிது நாட்களில் மோசமடையலாம். காலனிக்கு வெளியிலிருக்கும் முஸ்லீம்கள் சௌகான்பட்டியில் உள்ள இந்த அம்பே காலனியில் இருக்கும் முஸ்லீம்களைத் தூண்டி விட முயற்சித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று இருந்தது.
ஆனால் பிரதீப்சிங்கோ அவ்வாறான தகவலைத் தான் அனுப்பவில்லை என்று மறுக்கிறார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, தான் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் தனது சொந்த ஊரான ஜகதீஷ்பூரில் இருந்ததாக கூறும் அவர், ஜூன் 12 அன்றே தான் இங்கே திரும்பி வந்ததாகவும், காவல்துறையினர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயலுவதாக அளித்த அறிவிப்பு பற்றி அப்போதுதான் தனக்குத் தெரிய வந்ததாகவும் சொன்னார்.
மேலும் தான் அந்த மாதிரியான தகவல் எதையும் உருவாக்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ இல்லை என்றும், அதை யார் செய்தார்கள் என்பதைக் கண்டு பிடிப்பதற்கு தான் முயலவில்லை என்றும் தெரிவித்த சிங் ”அந்தப் பகுதியில் நான் பிரபலமாக இருப்பதால், எனது பெயரை அடிக்கடி மக்கள் பயன்படுத்துவார்கள். ஹிந்துஸ்தான் நிர்மான் தள் என்ற கட்சிக்காக நான் உழைத்து வருகிறேன். அதன் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டேன்” என்றும் கூறினார்.
தனி நீதிபதி முன்பாக ஆஜர் ஆகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அதே போன்ற அறிவிப்பை அக்பர் அலிக்கும் அளித்து அவரையும் வரச் சொல்லியிருந்தார்கள். அந்த மசூதி இருந்த இடம் அக்பர் அலிக்குச் சொந்தமான இடம் இல்லை என்று கூறிய சிங், ‘இறந்து போன ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான இடம் அது. அந்த இடத்தை இறந்து போனவரது குடும்பத்தினர் இதுவரையிலும் திரும்ப வந்து கேட்கவில்லை’ என்று குற்றம் சுமத்தினார்.
அந்த இடத்தில் கோவில் ஒன்று முன்னர் இருந்ததாகவும் அவர் கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளாக மட்டுமே அம்பே வளாகப் பகுதியில் வசிக்கும் சிங், அந்தப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் தனது அண்டை வீட்டாரிடம் இருந்தே இந்த உண்மைகளை எல்லாம் தான் அறிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
முகநூல் வழியாக ஹிந்துக்களின் ஒற்றுமைக்கான அழைப்பும் விடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் உள்ளூர்வாசியான சந்தன்சிங் தர்மயுத்தம் அதாவது புனிதப் போர் ஒன்றினை நடத்துவதற்காக தன்னோடு அனைவரும் சேருமாறு அருகே குடியிருப்பவர்களை அழைத்தார்.
ஜூன் 1ஆம் தேதி தனது முகநூல் பதிவில், எத்தனை ஹிந்து வீரர்கள் இந்த புனிதப் போருக்குத் தயாராக இருக்கிறீர்கள்? தயவுசெய்து ‘லைக்’ மட்டும் போடாமல், உங்களுடைய கருத்துக்களை ’கமெண்ட்’ பகுதியில் பதிவிடுங்கள்’ என்று அவர் கேட்டுக் கொண்டார். தனது பதிவிற்கு கீழ் இருந்த கமெண்ட் பகுதியில், அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மசூதியைப் பற்றியே தான் பேசுவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தப் புனிதப் போரில் என்னோடு கலந்து கொள்ள விரும்புவர்கள் உடனடியாக டெல்லியை விட்டு வெளியே வர வேண்டும்’ என்று அவர் எழுதியிருந்தார். தங்கும் ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அதற்குப் பலரும் பதிலளித்திருந்தனர். அந்த மசூதியை இடித்தவர்களில் ஒருவராக காவல்துறையினரால் சந்தன்சிங் அடையாளம் காணப்பட்டிருந்தார். மேலும் இரண்டு பேரோடு சேர்த்து கைது செய்யப்பட்டிருந்த அவர் பிணையில் வெளியே வந்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்ட போது தனது வழக்கறிஞர் யாரிடமும் இது குறித்து பேசக் கூடாது என்று சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.
மசூதி இடிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னராக அக்பர் அலியும், மற்றொரு குடியிருப்புவசியுமான ஷேர் அலி என்பவரும் சேர்ந்து, குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு குழுவினர் மசூதியை வைத்து வகுப்புவாத பிரச்சனையை விசிறி விடுவதாக சோனியா விகார் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறை அதிகாரிக்கு புகார் கடிதம் ஒன்றினை அளித்தனர்.
அந்தக் கடிதம் காவல்துறையால் வாங்கப்பட்டு ஜூன் 3 என்று அன்றைய நாள்முத்திரை குத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அதற்குப் பிறகு காவல்துறை கொஞ்சம்கூட அசையவில்லை.
ஜூன் 7 அன்று காலை 11 மணியளவில் மசூதியை கும்பல் ஒன்று இடித்துத் தள்ளியது. ”நாங்கள் எல்லோரும் ஆயுதம் தாங்கிய கும்பல் எந்நேரமும் வந்து எங்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்திலேயே இருந்தோம். காலனியில் இருக்கும் முஸ்லீம்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தங்களது குடும்பத்தினரை விட்டு பிரிந்து செல்வதற்கான தைரியம் அற்றவர்களாக வீட்டுக்குளேயே இருந்தோம்” என்று அங்கிருந்த சுல்தான் ஷேக் என்பவர் தெரிவித்தார்.
மசூதி இடிக்கப்பட்ட வீடியோவில் இருந்தவர்களின் முகங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அதை நேரில் பார்த்தவர்கள் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்கிடம் இருப்பதாக சந்தன்சிங், மால்கான், சஞ்சீவ் ஆகிய மூன்று பேர் மீது அத்து மீறி நுழைவது, ஐம்பது ரூபாய் அளவிற்கான சேதத்தை விளைவித்தது என்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மதம், பிராந்தியம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுமக்களிடம் பாதுகாப்பின்மையை உருவாக்கி, அவர்களிடம் அச்சத்தை உருவாக்கும் செயல்களைப் புரிந்தார்கள் என்பதாக அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள பிரிவுகளின் கீழ் ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று கேட்ட போது, ’வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் யாரும் எந்தக் குற்றமும் செய்ததாக இதுவரையிலும் தெரிய வரவில்லை. தேவையென்றால், வேறு சில பிரிவுகளிலும் வழக்கு பதியப்படும்’ என்று துணை காவல்துறை ஆணையர் A.K.சிங்லா தெரிவித்தார். அம்பே வளாகத்திற்குள் வகுப்புவாத வன்முறை எழுவதற்கான சூழல் இருப்பதாக அளிக்கப்பட்ட கடிதம் பற்றி கேட்ட போது, தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று மட்டுமே அவர் கூறினார்.
பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மசூதி இருந்த நிலம் குறித்து எழுப்பப்பட்டிருந்த புகார்கள், எதிர்ப் புகார்கள் பற்றி விசாரித்த கரவால் நகர துணைக்கோட்ட நீதிபதி, அந்த இடத்தை சீல் வைக்குமாறு சோனியா நகர் காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார். அக்பர் அலி மதரசாவைக் கட்ட ஆரம்பித்ததால், அந்தக் குடியிருப்பு பகுதியில் விரோதம் வளர்வதாகவும், அதனால் அந்தப்பகுதியில் இருப்பவர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் முகுல் கோரங்கா என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்பர் சட்ட விரோதமாக அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதாகவும், மின்சாரத்தைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அந்த செங்கல் கட்டிடத்தைக் கட்டுவதற்கான அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்றும் காவல்துறையினர் நீதிபதியிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் பிப்ரவரி 8 அன்று ஷேர் அலி மற்றும் அம்பே குடியிருப்பில் இருக்கும் முஸ்லீம்கள் பலரும் சேர்ந்து சோனியா விகார் காவல் நிலைய அதிகாரியிடம் அக்பர் அலியின் நிலத்தில் மசூதி ஒன்றினைக் கட்டுவதற்கான அனுமதி கோரி எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில் அந்தப் பகுதியில் வேறு எந்த மசூதியும் இல்லை என்பதால், குடியிருப்புவாசிகள் வெகு தொலைவிற்குச் சென்று தொழுகை நடத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அவர்களால் கட்டப்படவிருக்கும் மசூதிக்கு ஜக்காரியா மசூதி என்ற பெயரையும் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, சோனியா விகார் காவல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் அந்த நிலத்தைப் பார்வையிட வந்ததாக அக்பர் அலி கூறினார்.
அனுமதிக் கடிதம் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை ஒத்துக் கொளும் அக்பர் அலி, ‘அது என்னுடைய நிலம்தான், நான்தான் அவர்களுக்கு மசூதி கட்டிக் கொள்வதற்கு அனுமதி தந்தேன். காவல்துறையினர் அனுமதிக் கடிதம் தருவார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்குத் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்றே நான் எண்ணியிருந்தேன். மேலும் அந்த நிகழ்வு நடைபெறும் வரையிலும் காவல்துறையினர் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை’ என்றும் அவர் கூறினார்.
அம்பே வளாகத்திற்குள் பதட்டம் நிலவுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமைதியை நிலைநாட்டுவதற்காக அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மசூதி இருந்த இடத்திற்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, குடியிருப்புவாசிகளைத் தவிர வேறு யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.
நன்றி : https://scroll.in/article/841461/tragedy-foretold-how-whatsapp-and-facebook-were-used-to-incite-a-mob-to-demolish-mosque-in-delhi
கோவில் இருந்ததாக கூறி தில்லியில் புதிய மசூதி கட்டிடம் இடிப்பு..! பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் !
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.