அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பிரிவாக பிரிந்து கிடக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது என நம்பிக்கையோடு இருந்தாலும், தினகரனின் 60 நாள் கெடுதான் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.
இப்போது சசிகலாவை நேரடியாக ஆதரிக்கும் அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனராம். திகார் சிறையில் இருந்து தினகரன் வந்த நாளில் இருந்து அமைச்சர்கள் பலரும் சொந்தமாகக் கருத்துக்களைக் கூறி வருவது எடப்பாடிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
எடப்பாடியுடன் வேறுவழியே இல்லாமல் ஓபிஎஸ் கை குலுக்கும் முடிவில் இருக்கிறார். ஆனால் தினகரனை வைத்துக் கொண்டு எடப்பாடி நாடகம் ஆடுகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் ஓபிஎஸ் அணி மதுசூதனன்.
இருப்பினும் எதைப் பற்றியும் கருத்து கூறாமல் மௌனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களையும் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறாராம் எடப்பாடியார்.
இதையும் மீறி சில அமைச்சர்கள் பேசுவது குறித்து கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்துப் பேசியுள்ளனர் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள்.
சசிகலா குடும்பத்தை அவர் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறார். பா.ஜ.க தீண்டத்தகாத கட்சியல்ல என மோடியையும் ஆதரிக்கிறார். அந்தக் குடும்பத்தை மீண்டும் நாம் சேர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, ராஜேந்திர பாலாஜியின் இலாகாவைப் பறித்துவிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக இருக்க வைப்போம். அப்போதுதான் மற்றவர்களுக்கு ஓர் அச்சம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.
இதற்குப் பதில் அளித்த மற்றொரு அமைச்சர், இருக்கும் எம்.எல்.ஏக்களில் பலர் பதவி ஆசை பிடித்துள்ளது. எனவேதான், தினகரனை தினம்தினம் சந்திக்கின்றனர். ராஜேந்திர பாலாஜியிடம் இருந்த பதவியைப் பறித்தால், அவர் உடனே தினகரன் வீட்டு முன்னால் போய் நிற்பார். கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் என தினகரன் ஆதரவு அமைச்சர்களே மௌனமாக இருக்கின்றனர். அவர்கள் நடக்கும் சம்பவங்களை உணர்ந்து செயல்படுகின்றனர். இவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.
தனியார் பால் நிறுவனங்கள் குறித்து தேவையில்லாமல் பேசி, அரசுக்குக் கெட்ட பெயரை உருவாக்கிவிட்டார். நமது ஆட்கள் மூலம் தகவலை சொல்லி அனுப்புவோம். அவர் கேட்காவிட்டால், இலாகாவைப் பறிப்பதைத் தவிர வேறு வழியில்லை' எனக் கூறியிருக்கிறார். உடனே, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவர், அமைச்சர் பதவியில் கை வைக்க வேண்டாம். சில நாட்கள் பொறுமையாக இருப்போம். அதுவரையில் பேசிக் கொண்டிருப்பவர்கள் பேசட்டும். நாம் அமைதியாக இருந்தாலே நம்மை டெல்லி புரிந்து கொள்ளும் என விவாதத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.