Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் எதிர்ப்பு


வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
தேர்தல் செலவுகளை தற்போது அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செய்து வருகின்றனர். இதனால் தேர்தலுக்காக நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது. இதுதவிர, அதிக பணத்தை தேர்தலில் செலவு செய்துவிட்டு அதை குறைத்து மதிப்பிட்டு காட்டுவதும் அரசியல் கட்சிகளின் வழக்கமாக உள்ளது.

அதே நேரம், ‘அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே செய்து விட்டால் இந்த குற்றச்சாட்டுகள் எழாது. இதன் மூலம் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும். இதனால் ஊழல் இன்றி தேர்தலை நடத்த முடியும்’ என்று மத்திய அரசு நம்புகிறது.

தேர்தல் கமி‌ஷன் எதிர்ப்பு
இது தொடர்பாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சட்டம் மற்றும் பணியாளர்கள் மீதான பாராளுமன்ற நிலைக்குழு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள், சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தியது.

அப்போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பது பற்றி கருத்து தெரிவிக்கும்படி தேர்தல் கமி‌ஷனை பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டது.

ஆனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கலாம் என்ற யோசனைக்கு தேர்தல் கமி‌ஷன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு தேர்தல் கமி‌ஷன் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆதரிக்காது
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷன் ஆதரிக்காது. ஏனென்றால், தேர்தல் செலவுக்கு பணத்தை அரசே ஒதுக்கீடு செய்துவிட்டால் வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவுகளையும், அவர்களுக்காக மற்றவர்கள் செலவு செய்வதையும் தேர்தல் கமி‌ஷனால் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும்.

அதே நேரம், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நிதி, அவர்கள் அதை செலவு செய்யும் விதம் ஆகியவற்றில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடைமுறையில் கடுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதையே தேர்தல் கமி‌ஷன் விரும்புகிறது. ஏனெனில் இந்த இரண்டும்தான் தேர்தலின்போது தீர்வு காணப்படவேண்டிய முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

‘ஆன்லைன்’ ஓட்டு இல்லை
சமீபகாலமாக ‘ஆன்லைன்’ மூலம் வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் கமி‌ஷனிடம் வைக்கப்பட்டு வருகிறது. இதையும் தேர்தல் கமி‌ஷன் நிராகரித்தது.

‘தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அறிமுகம் செய்ததே ஆக்கப்பூர்வமான தேர்தல் சீர்திருத்த நடைமுறை ஆகும். எனவே, ஆன்லைன் மூலம் வாக்களிக்க அனுமதி கோருவதை பரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றும் தேர்தல் கமி‌ஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.