Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

இளம்பெண்களைக் குற்ற உணர்வில் தள்ளும் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரக் கொள்ளைக்கு சரியான பதிலடி!


நிறத்தை மையமாக வைத்து இந்தியாவில் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடிக்கும் லாபக் கொள்ளையால் நஷ்டம் நமது இயற்கை அழகூட்டிகளுக்கு மட்டுமல்ல. நமது இளம் பெண்களின் தன்னம்பிக்கை உணர்வுகளுக்கும் தான். இந்தியாவைப் பொறுத்த மட்டில் விளம்பரங்களில் அழகான பெண்கள் என்றால் அவர்கள் நிறங்களால் மட்டுமே அளக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் மூளைச் சலவைகளில் ஒன்று. இதை எதிர்த்து சமீபத்தில் ‘பிங்க்’ படப் புகழ் நடிகை டாப்ஸி பன்னு தான் இனிமேல் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடிப்பதாக இல்லை என முடிவெடுத்து அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் சூப்பர் க்வீன் பிரியங்கா சோப்ரா கூட அதே ரீதியில் தமது கருத்து ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு காலத்தில் நான் எனது நிறத்தைக் கொண்டு மிகத் தவறான தாழ்வுணர்வு கொண்டிருந்தேன். அதனால் எனது 20 களில் நான் சில ஃபேர்னஸ் கிரீம் பொருட்களைப் பயன்படுத்தி எனது நிறத்தை அவற்றால் மாற்ற முடியுமா? எனும் சோதனை முயற்சியில் கூட இறங்கி இருக்கிறேன். ஆனால் அவை அனைத்துமே குப்பைகள், அவற்றால் நமது நிறத்தை மாற்ற முடியாதது மட்டுமல்ல சரும ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கும் அவையே காரணம் என அறிந்த பின் அவற்றின் மீதான நம்பிக்கை உடைந்தது. நடிக்க வந்த புதிதில் நான் கூட சில ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடித்தேன். ஆனல் இன்று அவை அவசியமற்றவை என்று உணர்ந்ததால் இனி அப்படியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன். உண்மையில் எனது தோலின் நிறத்தை நான் அப்போதும், இப்போதும் ரசிக்கவே செய்கிறேன். என்றிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல நடிகர் அபய் தியோலும் கூட இந்த விளம்பரங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைக் கடுமையாக விமர்சித்து தமது கருத்துகளைப் பதிவிட்டதோடு. இம்மாதிரியான விளம்பரங்களில் நடித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளை இவற்றுக்கு எதிராகத் திருப்பி உண்மையை அறியச் செய்ய முயன்றிருக்கிறார். தமிழில் இப்படி தைரியமாக முடிவெடுக்கும் நடிகர், நடிகைகள் எவரேனும் இருந்தால் உத்தமம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.