Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2017

மாமல்லபுரம் விடுதியில் தூக்க மாத்திரைகள் தின்ற காதல் ஜோடி; காதலன் சாவு


மாமல்லபுரம் விடுதியில் தூக்க மாத்திரைகள் தின்ற காதல் ஜோடி; காதலன் சாவு – காதலிக்கு சிகிச்சை

மாமல்லபுரம் விடுதியில் காதல் ஜோடி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்றதில் சென்னையை சேர்ந்த காதலன் பரிதாபமாக இறந்தார். காதலி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் மலர்ந்தது
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன்(வயது 30). இவர், தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அப்போது இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த திவ்யா(25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 5 வருடங்களாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யா வீட்டில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருமண பொருத்தம் இல்லை
இதையடுத்து திவ்யாவின் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து இருவரின் ஜாதகத்தையும் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து பொருத்தம் பார்த்தனர். அப்போது இருவருக்கும் திருமண பொருத்தம் இல்லை என்று ஜோதிடர் கூறியதாக தெரிகிறது.

இதனால் திவ்யாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் திவ்யாவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் தனது காதலன் சிவகுருநாதனையே திருமணம் செய்ய விரும்பினார்.

தற்கொலைக்கு முடிவு
தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கும் தகவலை தனது காதலனிடம் திவ்யா கூறினார். இதனால் காதலர்கள் இருவரும், சாவிலாவது ஒன்றாக இணைவோம் என்று கூறி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் காலை மாமல்லபுரம் வந்த காதல் ஜோடி, அங்கு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

அங்கு இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். நேற்று காலை 11 மணி வரை அவர்களின் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறை கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை.

காதலன் சாவு
இதுபற்றி விடுதி ஊழியர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்–இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிவகுருநாதன் படுக்கையில் இறந்து கிடந்தார்.

மயங்கிய நிலையில் இருந்த திவ்யாவை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடிதம் சிக்கியது
சிவகுருநாதன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையை போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், ‘‘எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழ்க்கையில் தான் எங்களால் இணைய முடியவில்லை. சாவிலாவது இணையலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்தோம்’’ என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.