April 30, 2017
விஷமான ஜெயலலிதாவின் விஷன் -2023: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது: உறக்கம் கலைவதற்கு முன்
முடங்கிக் கிடக்கும் முன்னணித் திட்டங்கள்:
எப்போது கலையும் தமிழக அரசின் உறக்கம்!
தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்து 2011 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் ஜெயலலிதா
விஷன் -2023 என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.
5 ஆண்டுகளாகியும் இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய 10 முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கிக்கிடப்பதை டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான ரூ.40,000 கோடி மதிப்புள்ள மதுரை-தூத்துக்குடி தொழில் தாழ்வாரம், ரூ.10,000 கோடி மதிப்பிலான சென்னை நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம்,
ரூ.1500 கோடி மதிப்பில் சென்னையில் திடக்கழிவு கையாளும் நிலையம் அமைக்கும் திட்டம்,
திருப்பெரும்புதூரில் ஒருங்கிணைந்த நிதி நகரம் அமைப்பதற்கான ரூ.1500 கோடித் திட்டம், கடலூரில் ரூ.2000 கோடி மதிப்பிலான துறைமுக மேம்பாட்டுத் திட்டம், திருப்பெரும்புதூரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம், ரூ.3000 கோடி மதிப்பில் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்,
தரிசு நிலங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலையை மேம்படுத்தும் திட்டம் என மொத்தம் 8 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் இத்திட்டங்களை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி, 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சென்னை மாநகருக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகும் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவும், அதன்பின் ஆறு ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் அதிமுகவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்துவரும் அதிமுகவும், திமுகவும் மாநிலத்தின் முன்னேற்றத்தில் காட்டும் அக்கறை இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.
2011-ஆம் ஆண்டில் அதிமுக அரசு பதவியேற்ற பிறகு இன்று வரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தை அவசர அவசரமாக மாற்றி பன்னோக்கு அதி உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றிய அதிமுக அரசு, அதை பராமரிப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
மருத்துவமனையின் குளிரூட்டி எந்திரங்கள் பழுதடைந்ததால் கடந்த இரு வாரங்களாக அங்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு நிர்வாகம் கடந்த இரு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்ததாகவும், ஏராளமான கோப்புகள் குவிந்து கிடந்ததாகவும், அவை அனைத்தையும் தாம் தான் கையெழுத்திட்டு சரி செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் மாநில வளர்ச்சிக்காக எந்த பணியும் நடைபெறவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் எதுவும் தேவையில்லை.
ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மது விற்பனை அதிகரிப்பு, வாய்ப்புள்ள இடங்களில் ஊழல் செய்வது ஆகியவை மட்டுமே கடந்த 6 ஆண்டுகளில் அதிமுக அரசின் சாதனையாகவும், அடையாளமாகவும் விளங்கி வருகின்றன.
விஷன்-2023 திட்டத்திற்காக 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். ஆனால், இன்றுவரை ரூ.5000 கோடி கூட இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இத்திட்டத்தின் 10 முன்னணித் திட்டங்களுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவிட வேண்டும். ஆனால், இவற்றில் 8 திட்டங்களுக்கு இன்னும் ஆயத்தப் பணிகளே தொடங்கப்படவில்லை.
இதேநிலை தொடர்ந்தால் இந்தியாவின் கடைசி மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெறப்போவது உறுதி.
எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் விஷன் – 2023 திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிக்குத் தேவையானத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விஷமான ஜெயலலிதாவின் விஷன் -2023: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது: உறக்கம் கலைவதற்கு முன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.