Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 14, 2017

''காதலால் நான் வாழ்க்கையைத் தொலைத்துவிடவில்லை!''- கௌசல்யா


கௌசல்யா என்ற பெயரையும் அந்த உடுமலைக் கொடூர சம்பவத்தையும் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தச் சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் (மார்ச் 13) ஒரு வருடம் முடிவடைந்துவிட்டது. ஆதிக்க சாதித் திமிரையும் அது நடத்திய ஆணவப் படுகொலையையும் அம்பலப்படுத்திய சம்பவம். இந்தக் கொடூரமான கொலையின் மூலம் கணவரைப் பறி கொடுத்த கௌசல்யா இப்போது மத்திய அரசு ஊழியர். அதுமட்டுமல்லாமல் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் பேச்சாளராக கௌசல்யா
கணவர் சங்கர் கொல்லப்பட்ட பிறகு, மனதளவில் தளர்ந்துபோயிருந்த கௌசல்யாவுக்கு சில சமூக ஆர்வலர்கள் ஊக்கம் அளித்தனர். 'கவுன்சிலிங்' கொடுத்து அவரை மனதளவில் தயார்ப்படுத்தினர். குழந்தைகளுக்கு டியூசன் எடுத்தார்.
குழந்தைகளுடன் பழகியது கணவரை இழந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக மீள வைத்தது. இந்திய பாதுகாப்புத்துறையில் 3 ரிவென்யூ இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதற்கு 600 பேர் விண்ணப்பித்திருந்தனர். 40 பேர் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 3 பேர் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். அதில், கௌசல்யாவும் ஒருவர். நவம்பர் 7-ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால், நவம்பர் 9-ம் தேதி சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யா உடுமலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் அவர்தான் முக்கிய சாட்சி. அதனால் நவம்பர் 10-ம் தேதி பணியில் சேர உள்ளார்.

சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையற்காரராகப் பணி. சங்கர் கொலை செய்யப்பட்ட பின், நிவாரணத் தொகையாகத் தமிழக அரசு ரூ. 5.5 லட்சம் வழங்கியது. பல்வேறு அமைப்புகள் மூலம் ரூ. 3.5 லட்சம் நிதி சேர்ந்தது. இப்போது ஒரு பொறுப்புள்ள மருமகளாக குடும்பத்தை வழி நடத்துகிறார் கௌசல்யா. ''என் கணவரின் கனவு இந்தக் குடிசை வீட்டை நல்ல வீடாக மாற்றிக்கட்டுவது, அடுத்து என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது'' எனச் சொல்கிறார் கௌசல்யா. இங்கே கௌசல்யா தன் குழந்தைகள் எனக் குறிப்பிடுவது சங்கரின் தம்பிகளை. சங்கரின் முதல் தம்பி விக்னேஷ்வரன் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். மற்றொரு தம்பி 12-ம் வகுப்பு படிக்கிறார்.
கௌசல்யா பன்முகத் திறமை படைத்த பெண். பாரதியார் பல்கலைக் கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.எஸ்சி கம்ப்யூட்டர் படித்து வருகிறார். எம்.எஸ்.டபிள்யூ படிக்கும் முடிவில் இருக்கிறார். பறையுடன் சேர்த்து கராத்தேவும் கற்கிறார். ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது தமிழகத்தின் வரலாற்றிலிருந்து 'ஆணவக் கொலை' என்ற வார்த்தையை அகற்றும் பணியில் தீவிரமாகியுள்ளார். அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார். சங்கரின் முதலாம் ஆண்டுநினைவு தினத்தையொட்டி, சென்னையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்த ஜோடிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌசல்யா பங்கேற்றார். அப்போது தனக்கும் சங்கருக்கும் இடையே மலர்ந்த காதலைப் பகிர்ந்துகொண்டார்.


''பொள்ளாச்சியில் நானும் சங்கரும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். பழநியில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம். ஒரே கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்வோம். நான் முதல் வருடம். சங்கர் மூன்றாம் ஆண்டு மாணவர். கல்லூரியில் சேர்ந்த மூன்றாவது நாள் என்னிடம் சங்கர் தானாகவே வந்து பேசினார். 'நான் வேறு யார் மீதாவது அன்பு வைத்திருக்கிறேனா... ' என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அவரது பேச்சு இருந்தது. 'நான் இல்லை' என்றேன். அடுத்த நாளே என்னிடம் வந்து காதலைச் சொன்னார். எனது பெற்றோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் வேண்டாம்' எனக் கூறினேன். எனது கருத்துக்கு அவர் மதிப்பளித்தார். அதற்குப் பிறகு என்னிடம் அது குறித்துப் பேசவில்லை. இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். பேருந்துப் பயணத்தின்போது ஒரே நாளில் ஒன்றரை மணி நேரம்கூட பேசிக்கொண்டிருப்போம். போனிலும் பேசிக்கொள்வோம். என்னை அறியாமலேயே எனக்குள்ளும் காதல் பூத்திருந்தது. நானும் அவரைக் காதலிக்கத் தொடங்கினேன்.''
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. பேருந்து கண்டக்டர் சங்கரையும் என்னையும் சேர்த்து பார்த்துவிட்டார். உடனடியாக என் தந்தையிடம் போய்க் கூறியுள்ளார். இந்த விஷயம் எனக்குத் தெரிந்தவுடன் ஒரு கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம். சங்கரின் சிறிய வீட்டிலேயே வாழ்ந்தோம். நான் படிப்பை விட்டுவிட்டேன். சங்கர் மட்டும் படித்தார். கேம்பஸ் இன்டர்வியூவிலேயே சங்கருக்கு வேலையும் கிடைத்திருந்தது. அந்த சமயத்தில்தான் அவர் கொல்லப்பட்டார்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?. சங்கர் என்னிடம் சாட் பண்ண ஆரம்பித்த முதல் நாளில் இருந்து திருமணம் வரை... என்னுடன் பேசியது அத்தனையும் செல்போனில் ஸ்டோர் செய்துள்ளேன். ஸ்கிரீன் சேவரிலும் நாங்கள் இருவரும்தான் இருக்கிறோம். எனக்கு அவருடன் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டால், எங்களுக்குள் நடந்த அந்த சாட்டிங்குகளை எடுத்து படித்துக்கொள்வேன். அந்த சாட்டிங்குகளை இப்போது பார்க்கும்போது, நான் அவரை இவ்வளவு கொடுமை செய்திருக்கிறேனா... என நினைத்து சிரிக்கிறேன். இப்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. இந்த நாட்டில் பெண்களுக்கு உதாரணமாகவே வாழ்ந்து காட்ட விரும்புகிறேன். நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். காதல் காரணமாக நான் வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று மட்டும் சொல்லாதீர்கள்!'' என்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.