பெரம்பலூர் எம்.எம்.நகரில் செட்டிக்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவரது 2 மாடி குடியிருப்பில் பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த மந்திரவாதி கார்த்திக்கேயன் (வயது32) என்பவர் கடந்த 4 வருடங்களாக மாதம் ரூ.20 ஆயிரம் வாடகையில் குடியிருந்து வந்தார்.அந்த வீட்டில் இருந்து கடந்த 10-ந்தேதி துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் பெரம்பலூர் எஸ்.பி. சோனல்சந்திரா, ஏ.டி.எஸ்.பி. ஞானசிவக்குமார், டி.எஸ்.பி. கார்த்திக் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 17-ந்தேதி ஆலத்தூர் தாலுகா, மருதடி மலையடி வாரத்தில் குடில் அமைத்து மனித எலும்புகள், மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்து 5 பேருடன் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த கார்த்திக்கேயன், அவரது மனைவி நசீமா என்கிற தீபிகா (28) மற்றும் 2 வேலையாட்கள் என 4 பேர் இருப்பது தெரியவந்தது.
மேலும் அங்குள்ள பூஜை அறையில் சவப்பெட்டியில் அழுகிய பிணம், 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், 1 கூடை நிறைய மண்டை ஓட்டின் உடைந்த பகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கார்த்திக் கேயன், நசீமா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சென்னையில் இருந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை மயானத்தில் இருந்து வாங்கி வந்ததாக கூறினர். இதையடுத்து சென்னைக்கு விரைந்த தனிப்படை போலீசார், கார்த்திக்கேயனின் நண்பர்கள், வெட்டியான்கள் உள்பட 4 பேரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.
இது குறித்து பெரம்பலூர் டி.எஸ்.பி. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த கார்த்திக்கேயனின் தாத்தாவும், மாந்திரீக தொழில் செய்து வந்தவர். எனவே 6-ம் வகுப்பு வரை படித்த கார்த்திக்கேயன் கடந்த 8 வருடங்களாக மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மருதடியில் பிடிபட்ட பிறகு பெரம்பலூர் எம்.எம்.நகரில் மீண்டும் அதே தொழிலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
மாந்திரீக முறைப்படி தற்கொலை செய்த இளம் பெண் உடலை வைத்து மகாகாளி உக்கிர பூஜை நடத்தினால் கூடுதல் சக்தி கிடைக்குமென நம்பி கார்த்திக்கேயன் தன்னோடு மாந்திரீகம் பயின்ற சென்னை ஈச்சம்பாக்கம், கவுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விட்டல் மகன் வினோத் குமாரிடம் உடல் ஒன்றை பெற்றுத்தர கேட்டுள்ளார்.
வினோத்குமார் தங்களோடு மாந்திரீகம் பயின்ற அடையார், கிரீன்வேஸ் ரோடு, சீனிவாசன் மகன் சதீஷ் (28) என்பவரிடம் கூறி, மயிலாப்பூர் மயானத்தில் பணிபுரியும் வெட்டியான்களான அதே பகுதியை சேர்ந்த தன்ராஜ் (31), கார்த்திக் (27) ஆகியோரிடம் உடலை எடுத்து தர கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி தேனாம்பேட்டை ஜெயராமன் மகள் அபிராமி(20) என்ற கல்லூரி மாணவி தூக்குப்போட்டு இறந்த தகவல் கார்த்திக்கேயனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே உடல் வேண்டுமென கூறியதால் 19-ந்தேதி பிரேத பரிசோதனைக்கு பிறகு மயிலாப்பூர் மயானத்தில் புதைக்கப்பட்ட அபிராமி உடலை தன்ராஜ், கார்த்திக் ஆகியோர் 25-ந்தேதி தோண்டியெடுத்து, வினோத் குமாரிடம் ஒப்படைத்தனர்.

அதனை சதீஷ் காரில் கொண்டு வந்து பெரம்பலூரில் கார்த்திக்கேயன் வீட்டில் ஒப்படைத்து விட்டு ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கிச்சென்று வெட்டியான்களுக்கு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து 11-ந்தேதி கார்த்திக்கேயன், நசீமா ஆகியோரும், நேற்று 12-ந்தேதி வினோத்குமார், சதீஷ், கார்த்திக், தன்ராஜ் ஆகியோரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 (மோசடி செய்தல்), பிரிவு 417 (நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல்), பிரிவு 297 (சுடுகாட்டில் உள்ள உடலை தோண்டி அவமதித்தல்), பிரிவு 508 (ஆவிகளின் பெயரில், கடவுளின் பெயரில் மிரட்டுதல்), பிரிவு 270 (இறந்த, அழுகிய உடல்களை வைத்து நோய் பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழும், 1972 வைல்டுலைன் புரோடெக்சன் சட்டப்படி சட்ட விரோதமாக கடல் குதிரையை வைத்திருத்தல் பிரிவுகள் என 6 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கார்த்திக்கேயன் பயன்படுத்திய கார், அவர்கள் வெளியிட்டு வந்த புத்தகங்கள், பூஜைக்கு பயன்படுத்திய ஆபாச நிலையில் உள்ள 20 கிலோ எடை கொண்ட விநாயகர் வெண்கல சிலை, உக்கிரமான காளியின் சிலை, மண்டை ஓட்டு எலும்புகளால் தயாரிக்கப்பட்ட வசியப்படுத்தும் மை டப்பாக்கள், பில்லி சூனிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் காம இச்சையை அதிகப்படுத்தும் கடல் குதிரைகளை ஆஸ்துமா நோய்க்காக கார்த்திக்கேயன் தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து 40 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.