பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இருந்த தவறுகளை சுட்டி காட்டியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றோம் என்று அரசு மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த புகாரில் கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் அதிகம் தவறுகள் இருந்தது. சுமார் 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு என்று பெருமையாக சொல்லி கொண்டாலும், 100 பக்கங்களில் மட்டுமே வழக்கு தொடர்பான விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசிடம் வலியுறுத்தினேன். மேல்முறையீடு செய்தால், கண்டிப்பாக அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பதையும் எடுத்து கூறினேன். எனது வார்த்தை மீது நம்பிக்கை வைத்து மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகளை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் என்னென்ன தவறுகள் உள்ளது என்பதை கண்டுபிடித்து மேல்முறையீட்டு மனுவில் சேர்த்தோம்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முதல் தவறாக குற்றவாளிகளுக்கு சொந்தமான கட்டிடங்கள் மதிப்பு ரூ.27 கோடி என்று ஊழல் தடுப்பு துறையினர் உரிய கட்டிட நிபுணர்களை கொண்டு மதிப்பீடு செய்து குற்ற பத்திரிக்கையில் பதிவுசெய்திருந்தது. ஆனால் இன்ஜினியர்கள் தவறான மதிப்பீடு செய்துள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதத்தை ஏற்று கட்டிடங்களின் மதிப்பு ரூ.5 கோடி என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜெயலலிதா உள்பட நான்கு பேரின் சொத்து மதிப்பு ரூ.22 கோடியை குறைத்தது.
நிபுணர்களின் மதிப்பீட்டை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது தவறு. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ரூ.6 கோடி செலவு செய்ததாக ஊழல் தடுப்பு பிரிவினர் (டிவிஏசி) தரப்பில் கூறப்பட்டது. தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளதை உறுதி செய்தது. ஆனால் ஜெயலலிதா ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்தார். பிற தொகையை மணப்பெண்ணின் வீட்டினர் செய்ததாக தீர்ப்பில் கூறியது 2வது தவறாகும். இதை ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டிவிஏசி முழுமையாக விசாரணை நடத்தியதில் ரூ.66.65 கோடி வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்தாக கூறியதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.37.59 கோடி மட்டுமே உண்மையான சொத்து என்றும், அதில் வருமானம் ரூ.34.76 கோடி போக, மீதியுள்ள ரூ.2.82 கோடி மட்டுமே வருமானத்திற்கு அதிகம் சொத்து என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். உண்மையில் குற்றவாளிகள் இண்டியன் வங்கியில் ரூ.10.6 கோடி கடன் வாங்கியுள்ளதாக டிவிஏசி கு்ற்றபத்திரிக்கையில் கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் அளித்தது.
அதை தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ரூ.24.17 கோடி கடன் வாங்கியதாக கூறியுள்ளது. கடன் தொகையும் வருமானத்தில் சேரும் என்பதை நீதிபதி மறந்தது ஏன் என்று புரியவில்லை. இதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்து கூறி வாதம் செய்தோம். டிவிஏசி கூறும் ரூ.10.6 கோடியுடன் நீதிபதி கூறும் ரூ.24.17 கோடியை சேர்த்தால் குற்றவாளிகளின் வருமானம் ரூ.36 கோடி. உண்மை இப்படி இருக்கும்பட்சத்தில் குற்றவாளிகள் எப்படி நிரபராதியாக முடியும்.
மேலும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவின் வருமானம் ரூ.3.76 கோடி, சொத்து மதிப்பு ரூ.37.59 கோடி, இதில் அதிக வருமானம் ரூ.2.82 கோடி. உச்ச நீதிமன்றம் 10 சதவீத்திற்கும் குறைவாக சொத்து சேர்த்தால் மன்னிக்கலாம் என்று கூறியுள்ளதை அடிப்படையாக வைத்து 8.12 சதவீதம் மட்டுமே சொத்து சேர்த்துள்ளதாக கூறி விடுதலை செய்தது. ஆனால் குற்றவாளிகள் வங்கியில் வாங்கியுள்ள கடன் ரூ.13.50 கோடியை சேர்த்தால் குற்றவாளிகளின் சொத்து மதிப்பு ரூ.16.32 கோடியாகும்.
அவர்களின் மொத்த வருமானத்தை கணக்கிடும்போது ரூ.21 கோடியாகும். இது 76.7 சதவீத சொத்தாக உயருகிறது. இ்ந்த புள்ளி விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் போது எடுத்து கூறினோம். எங்கள் வாதம் நியாயம் என்பதை புரிந்துகொண்டு, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதன்மூலம் நீதி வென்றுள்ளது. நான் கர்நாடக அரசிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இனி பரோல் மட்டும்தான்
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இனி அவர்கள் பரோலில் மட்டுமே வெளி உலகத்தை பார்க்க முடியும். இந்த தீர்ப்பு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும், தண்டனை நிறுத்தப்படாது. இதனால் பரோல் தாக்கல் செய்தால் மட்டுமே அவர்கள் வெளி வர முடியும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.