Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

தமிழக அரசியல்வாதிகளில் யாருக்கு 'ஆஸ்கர்' கொடுக்கலாம்?


காலங்காலமாகத் தமிழ்நாடு அரசியல், நடிகர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட போது, சட்டசபையில் ஓ. பன்னீர்செல்வம், வளர்மதி உள்ளிட்டோர் சோகமாக நடந்து வரும் காட்சி, அழுது கொண்டே பதவியேற்றது அப்போது சிறந்த நடிப்பாக பார்க்கப்பட்டது. இந்த ஆஸ்கர் நேரத்தில், தமிழக அரசியல் நடிகர்களில் யார் ஆஸ்கர் விருதுக்கு சரியா வருவாங்கனு சும்மா ஒரு ஜாலி கற்பனை.
கசிகலா இயக்கத்தில் வெளியான 'திண்ணை எப்போ காலியாகும்' படம் அற்புதம். இயக்குநரின் முதல் படம். ஆனால், புதுமுக இயக்குநர் மாதிரியே தெரியவில்லை. கதையில் பல இடங்களில் ஓட்டைகள் இருந்தாலும் அது தெரியாத வகையில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கதை தொடங்குகிறது. தோழியைக் காப்பாற்ற கசிகலா எடுத்த முயற்சிகள் கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்படுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. தோழி இறந்த பிறகு, பஜாஜி ஹாலில் கசிகலாவின் நடிப்பு அற்புதம். பஜாஜி ஹாலில் குடும்பத்தினர் ஒன்று சேரும் காட்சி நெகிழ்ச்சி.
கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்கும் தருணங்களில் அவர் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து 'இப்படி ஒரு நடிப்பா?' என்று ரசிகர்கள் பிரமிக்கிறார்கள். படத்தில் அமைதியாக வந்து போகும் கண்ணீர்செல்வம்தான் 'வில்லன்' என்பது இயக்குநருக்கே தெரியாதாம். கண்ணீர்செல்வத்தால் ஏமாற்றப்பட்ட கசிகலா தோழியின் சமாதியில் சத்தியம் செய்வது நெருப்புக் காட்சி. நீதிமன்றத் தீர்ப்புதான் கதையின் போக்கையே மாற்றி விடுகிறது. பாவத்தூர் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. காமெடி நடிகர் தருணாஸ் ரசிகர்களுக்கு வில்லனாகவே தெரிகிறார்.




கோயஸ் கார்டன், கப்பல்லோ ஆஸ்பத்திரி, கரீனா பீச், பாவத்தூர், காயிட்ஸ் ரோடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் ஆடை அலங்கார வடிவமைப்பில் பின்னிப் பெடெலெடுத்திருக்கிறார் இயக்குநர். ஆடை வடிவமைப்பையும் கசிகலாதான் ஏற்றிருக்கிறார். தோழி இறந்தபிறகு அவரைப் போலவே அவதாரம் எடுக்கும் காட்சிகளில் ஆடை, அலங்கார வடிவமைப்பு அருமை.
காலீன் நடித்துள்ள 'சண்டை சபை' படத்தை சண்டைக் காட்சிகளுக்காகவே பார்க்கலாம். கிழிந்த சட்டையுடன் காரில் இருந்து காலீன் இறங்கும் என்ட்ரி காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. 'சண்டைல கிழியாத சட்டை எந்த சட்டை' என்று காலீன் பேசும் வசனங்கள் சரவெடி ரகம். '30 வருஷமா போராடிட்டு இருக்கேன். சி.எம் நாற்காலி பக்கம் கூட போக முடியவில்லை. நேத்து வந்தவங்க எப்படி அந்த சீட்டுக்கு ஆசைப்படலாம்னு' காலீன் கேட்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.'சண்டைக் காட்சிகளில் காலீனிடம் பழைய வேகம் இல்லை.சகோதரப் பிறப்புகளின் வேகமும் குறைந்து விட்டது' என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
'பெயர் வச்சா இப்படி வைக்கணும்' படத்தில் அறிமுக நடிகை ஷீபாதான் கதாநாயகி. ஆனால் அவருக்கு காமெடிதான் நன்றாக வருகிறது. காலை 11 மணிக்கு எழுந்து கணவரிடம் 'இன்றைக்கு என்ன நடந்தது?' என்று கேட்கும் காட்சிகள் அருமை. டிரைவருக்குச் செயலாளர் பதவி கொடுக்கும் காட்சிகளில் சொதப்பி விடுகிறார். ஒரு ரவுண்டு எல்லாம் வருவார்னு எதிர்பார்க்க வேண்டாம்.




'கருவேல மரமங்கள்' படத்தில் நடித்துள்ள கைகோ சிறந்த காமெடி நடிகர். நாட்டில் பிரளயம் நடக்கும் போது அமைதியாக கருவேலமரங்கள் வெட்டும் காட்சிகள், குஜயகாந்த் விறகு வெட்டும் காட்சியை நினைவுபடுத்துகிறது. 'அரசியல் பற்றி வாய் திறக்கமாட்டேன் கருவேல மரங்கள்தான் இப்போது என்னுடைய எதிரி' என்ற வசனம் பஞ்ச். கடராஜன் பக்தியை வெளிப்படுத்தும் போது நட்புக்கே இலக்கணமாகத் தெரிகிறார். 'என்னை கேலி செய்கிறார்கள்' என எரிமலையாக வெடிக்கும் போதும் தியேட்டரில் சிரிப்பலைதான் எழுகிறது. 'கருவேல மரங்கள்' காமெடி வேர்கள்.
பி.பி.வி. கினகரனுக்கு 'ரீஎன்ட்ரி' படம் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. சித்தி ஜெயிலுக்குப் புறப்படும் போது, உருக்கத்தை வெளிப்படுத்தத் தெரியவில்லை. நடிப்பில் அது மைனஸ்பாயிண்ட். 'நாம இந்த கட்சிக்கு எதுவும் செய்யலையே... சொல்லப் போனா கட்சிக்கும் நமக்கும் சம்பந்தமே கிடையாதே... பின்ன எப்படி கட்சி நம்மகிட்ட வந்தது' என்று அவர் யோசிக்கும் காட்சிகள் ஆஸ்கர் விருது அளவுக்கு யோசித்திருக்கிறார்கள். ஆனால் காட்சிகளை முன்னரே யூகித்து விட முடிவதால், 'ரீ என்ட்ரி' ரசிக்கவில்லை. படத்தில் வில்லனே இல்லையென்றாலும் படம் நான்கு ஆண்டுகள் ஓடும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.