Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 2, 2016

‘அன்னமே, ரஞ்சிதமே...!’ தோழர் நல்லக்கண்ணுவின் முற்றுப்பெற்ற கவிதை!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 10.20 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. குறைந்த ரத்த அழுத்தம், அல்சர் போன்ற நோய்களுக்காக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி ரஞ்சிதம் அம்மாள் இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கம்யூனிச குடும்பத்தில் இருந்து வந்தவர் !

ஸ்ரீ வைகுண்டம் அருகே ஏ.கே அண்ணாசாமி - சந்தோசியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர் ரஞ்சிதம் அம்மாள். மருதன் வாழ்வூரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்க மறுத்தபோது,தலித் மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் கடையை திறந்து,பொருட்களை வழங்கியவர் அவருடைய தந்தை அண்ணாசாமி.அவரிடம் கம்யூனிச கொள்கை பரவிக் கிடந்தது.அத்தகைய குடும்பத்தில் இருந்து வந்தவர் !ஆசிரியர் பணியை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தொடங்கினார் ரஞ்சிதம் அம்மாள்.



இந்த நிலையில் கட்சிப்பணி காரணமாக நல்லகண்ணு ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார்.அந்த கவிதையாக அவரை கரம் பிடித்தவர்தான் ரஞ்சிதம் அம்மாள்.அம்மையாரை அவர் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான்.இதனை தனக்கு நெருங்கி பழகியவர்களுடன் நான் எழுதிய கவிதை போன்று மனைவியும் அமைந்து விட்டார் என்று புகழ்வாராம் .



 கட்சிப்பணி,பொதுமக்களுக்கான போராட்டம் என தனது கணவர் களத்துக்கு சென்ற போதெல்லாம் அவருக்கு உறுதுணையாக நின்றவர் .கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலத்தில்,தலைமறைவு வாழ்க்கையை நல்லகண்ணு மேற்கொண்டபோதும், சற்றும் கலங்காமல் அவருக்கும், அவருடன் இருந்த தோழர்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்தார். அதுமட்டுமின்றி, தலைமறைவாக இருந்த தோழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்து, அவர்களுக்கு தைரியம் சொல்வதோடு, உதவிகளையும் செய்தார். நல்லகண்ணு போராட்டக் களத்தில் இருந்ததால், தனது இரண்டு மகள்களையும் வளர்க்கும் பொறுப்பான தாயாகவும், சிறந்த ஆசிரியையாகவும் செவ்வனே பணியாற்றியவர்.

நல்லகண்ணுவின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் !

எந்தவொரு நெருக்கடியான காலத்திலும் முகத்தில் புன்னகையை அவர் தவறவிட்டதே இல்லை. மிகவும் தைரியமான பெண்மணியாக இருந்தவர் ரஞ்சிதம் அம்மாள். குடும்ப நிர்வாகத்தை தனியாளாக இருந்து கவனித்துக் கொண்டவர். புத்தகங்கள் வாசிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டு, தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 'ஆனந்த விகடன்' இதழை தவறாமல் படிக்கும் பழக்கத்தை கொண்டவர்.கம்யூனிச கொள்கையையும், குடும்பத்தையும் ஒன்றாக எண்ணியவர்.போராட்ட காலத்தில், நல்லகண்ணுவுக்கு நாட்டு நடப்புகளையும், செய்திகளையும் தவறாமல் சொல்வார் . நல்லகண்ணு பற்றி வரும் தகவல்களை ஒன்று விடாமல் சேகரித்து, அவரிடம் சேர்த்து விடுவார்.அவரைப் பற்றிய துண்டுசெய்திகள் ஆனாலும், அவற்றை எல்லாம் சேகரித்து புத்தகமாக மாற்றி அவரிடம் கொடுப்பார். சில நேரங்களில் தனது கணவருக்கு அரசியல் ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். நல்லகண்ணுவின் முதுகெலும்பாக திகழ்ந்தவர் . மனைவியை இழந்து வாடும் ஐயா நல்லகண்ணுவுக்கு, ரஞ்சிதம்மாள் அனைவர் மீதும் கொண்டிருந்த மகத்தான அன்பும், அக்கறையுமே என்றென்றும் அருமருந்தாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.