Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

பா.ஜ.கவுக்கு எதிராக அணி திரட்டும் கார்டன்! டெல்லியை கலக்குமா ஜனவரி?


மத்திய அரசுக்கு அ.தி.மு.க.வின் எதிர்ப்பை தெரிவிக்க பா.ஜ.க.வின் எதிரணியிலிருக்கும் அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர கார்டன் வட்டாரங்கள் முடிவு செய்திருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கார்டனில் சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்துள்ளது.

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் கெடுபிடி தமிழகத்தில் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வருமான வரித்துறை சோதனையால் அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கின்றனர். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தலையிலேயே வருமான வரித்துறை 'கை' வைத்து விட்டது. அடுத்து யார் என்ற பதற்றம், அ.தி.மு.க வட்டாரத்தில் அதிகமாக காண முடிகிறது. இதனால் மத்திய அரசுக்கு நாம் கொடுக்கும் பதிலடி மூலமே இத்தகைய நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியும் என்று கார்டனுக்கு செல்லும் நபர்கள் அங்குள்ளவர்களிடம் சொல்லி வந்தனர். அதுவும் நல்ல யோசனைதான் என்று கார்டனும் கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறது.

இதையடுத்து கார்டனில் செல்வாக்காக இருக்கும் நபரின் கணவர் மூலம் டெல்லிக்கு தூது விடப்பட்டுள்ளது. அதற்கு எந்தவித ரெஸ்பான்சும் இல்லையாம். இதனால், மத்திய அரசுக்கு தமிழகத்தின் பலத்தைக் காட்டவும் எதிர்ப்பை சூசகமாக தெரிவிக்கவும் கார்டனில் ரகசிய கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. அதில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை சொல்லி உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், "பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கவும், அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து ராம மோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் அவரது அறை ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தேகமாக பார்த்தனர். அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு, 'தங்களுக்கும் இந்த சோதனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்று விளக்கமளித்தது. இதையடுத்து கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு பொதுக்குழு கூட்டம் தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஓ.பன்னீர் செல்வமும் ஓகே சொல்லி விட்டாராம். கட்சியின் அதிகார மையம் சசிகலாவின் கைக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் அதிரடி ஆட்டம் தொடங்கப் போகிறது என்றவர், மத்திய அரசை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதையும் விளக்கமாக விவரித்தார்.

"டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடத்த கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித்  தலைவர் மாயாவதி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். பெயருக்கு பா.ஜ.க பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுப்போம். இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள தலைவர்களிடம் தமிழக அரசியல் சூழ்நிலையை குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசின் கெடுபிடிகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளோம். பா.ஜ.க.வின் எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து அ.தி.மு.க.வும் மத்திய அரசை எதிர்க்க தயாராகி விட்டது. அதற்காகத்தான் டெல்லியில் ஜெயலலிதா, இரங்கல் கூட்டமே நடத்துகிறோம். இந்த கூட்டம், ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.