Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

டிசம்பர் 31-ல் பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா! - பொதுக்குழுவில் கலந்து கொள்ளாத பின்னணி


'வி.கே.சசிகலாவின் தலைமையை ஏற்போம்' என அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ' தலைமைக் கழகத்தில் 31-ம் தேதி பொதுச் செயலாளராக பதவியேற்பார் சசிகலா. அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி, ' அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தலைமையேற்க வேண்டும்' என கட்சியின் சீனியர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். ஒருகட்டத்தில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டவர்கள், ' முதலமைச்சராகவும் சசிகலா பதவியேற்க வேண்டும்' என வலியுறுத்தி வந்தனர். அடுத்தடுத்து நடந்த வருமான வரிச் சோதனைகளுக்குப் பிறகு, அமைச்சர்கள் அப்படியொரு கருத்தை முன்வைத்துப் பேசவில்லை. இந்நிலையில், பொதுக்குழுவை  சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான பணிகளில் மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் தீவிரமாக களமிறங்கினர். நேற்று மதியம், ' பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பம் கொடுங்கள்' என சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்தார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ச்சியடைந்த சசிகலா புஷ்பா, ' என் கணவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரைத் தாக்கியவர்களை விட மாட்டேன்' எனக் கொந்தளித்தார். ' இப்படியெல்லாம் நடக்கும்' என எதிர்பார்த்துத்தான் தலைமைக் கழகத்தில் பாதுகாப்புப் பணிக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்திருந்தனர். இன்று காலை வானகரத்தில் நடந்த அ.தி.மு.கவின் பொதுக்குழுவில் சசிகலா பங்கேற்கவில்லை. ஜெயலலிதா அமரும் நாற்காலியில் அவரது படத்தை வைத்திருந்தனர். கூட்டத்தில், அழுகையைத் துடைத்துக் கொண்டே பேசினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். வழக்கம்போல, ' கழகத்துக்கு ஏற்பட்ட சூழலை தீயசக்திகள் பயன்படுத்திவிடக் கூடாது. சின்னம்மா தலைமையை ஏற்போம்' எனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

" பொதுக்குழுவில் பங்கேற்பது என்ற முடிவில்தான் சசிகலா இருந்தார். இதற்காக, டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் அதற்கான பயிற்சியை அவருக்கு வழங்கினார்கள். ஏழு நிமிட பேச்சில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்தும் கட்சியை வழிநடத்துவது குறித்தும் விரிவான குறிப்புகள் தயாரிக்கப்பட்டன. இதையடுத்து, கார்டனுக்குள்ளேயே மைக் அமைத்து, பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் சசிகலா. உச்சரிப்புகளில் சில மாற்றங்களையும் செய்து காண்பித்துள்ளனர். எதுவும் சரியாக வரவில்லை. இதையடுத்து, ' தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளராக பதவியேற்கும்போது, விரிவாகப் பேசிக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், ' கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர்' என ஜெயலலிதா பெயரைத்தான் தொண்டர்கள் கூறிவந்தனர். அவரது மரணத்துக்குப் பிறகு, ' நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் தொண்டர்கள் முழுமனதாக சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை' என்பதை உளவுத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியது. கீழ்மட்ட அளவில் தனக்கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். அதையொட்டியே, வானகரம் செல்லும் வழியில் கட்டப்பட்ட பேனர்களிலும் ஜெயலலிதா படத்தையே முன்னிறுத்த வைத்தார்.



கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தேர்வு செய்வது போன்ற தோற்றத்தை கீழ்மட்ட அளவில் உருவாக்குவதற்காகவே, பொதுக்குழுவில் அவர் பங்கேற்கவில்லை. கூடவே, உயர் நீதிமன்றத்தில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு தடை விதித்து, வழக்கு தொடரப்பட்டுள்ளது. ' கட்சியின் உறுப்பினராக உள்ளவர்கள் உள்கட்சி விதிகளுக்கு மாறாக, வழக்குத் தொடர்ந்தால் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்ற விதியை சுட்டிக் காட்டி அ.தி.மு.க தரப்பில் தெரிவித்தனர். கூடவே, ' ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலே, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர் பதவியில் சசிகலா தொடர்கிறார்' எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கின் முடிவில், ' சட்டப்படி அறிவிக்கை வெளியிட்டு தேர்தலை நடத்தினீர்களா' என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படியொரு சூழல் வரும் என்பதை உணர்ந்துதான், 'பொதுக்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர். சட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன' என்பதைக்  காட்டுவதும் பொதுக்குழுவின் நோக்கம்" என்றார் விரிவாக.

" சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கு தேர்தல் ஆணையம் எந்த எதிர்ப்பையும் காட்டப் போவதில்லை. கட்சியின் மெஜாரிட்டி உறுப்பினர்கள் அவர் பக்கம் இருப்பதையே பொதுக்குழு காட்டுகிறது. தற்போது 'அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிட்டார்' என அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ' வேறு யாரும் போட்டியில் இல்லை' என்பதையும் தொண்டர்களுக்கு உணர்த்தியுள்ளனர். வரும் 31-ம் தேதி தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்பார். அங்கு விரிவாக அவர் பேச இருக்கிறார். வேறு சில நிர்வாகிகளோ, 2-ம் தேதி அவர் பதவியேற்கலாம் எனப் பேசி வருகின்றனர். பதவியேற்பையும் மிக எளிதாகவே நடத்துவதற்கு நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில்.

' ஜெயலலிதாவுக்குப் பிறகு எந்த எதிர்ப்பும் இல்லாமல் சசிகலா தேர்வு செய்யப்பட்டார் என்தைக் காட்டுவதற்காக, மன்னார்குடி உறவுகள் மெனக்கெட்டு வருகின்றனர். கட்சிப் பதவி கைக்கு வந்த ஒரே மாதத்தில் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்வார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.