Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

சி.பி.ஐ.யிடம் சிக்க வைத்த கறுப்புப் பணம்! கட்டம் கட்டப்பட்ட கலால் கமிஷனர்


மத்திய கலால்வரித்துறையின் சென்னை மண்டல முதன்மை கமிஷனர் ஜானகி அருண்குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவரது வீடுகள் மற்றும் அவருடன் பணியாற்றிய உயரதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் நகை, பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர்காந்தி சாலையில் மத்திய கலால்வரித்துறையின் மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு சென்னை மண்டல முதன்மை கமிஷனராக ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக ஜானகி அருண்குமார் பணியாற்றினார். பணம் வாங்கி கொண்டு ஊழியர்களை இடமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இடமாற்ற தலா ஒரு லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது. அதன்பேரில் ஜானகி வீடு, அலுவலகம் மற்றும் அவருடன் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஜ சோதனை நடத்தப்பட்டது. அதில் 34 ஆவணங்களும், லஞ்சம் வாங்கிய 2 லட்சம் ரூபாய் பணமும், 2.65 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது 4 வங்கி கணக்குகளில் 7.93 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தங்க நகைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜானகியைத் தவிர கலால் வரி அலுவலகத்தில் பணியாற்றிய கண்காணிப்பாளர் பால்சுதாகர், மனோகரன், தனசேகரன், செல்வராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், "முதன்மை கமிஷனர் ஜானகி அருண்குமார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. கடந்த 6 மாதங்களாக அவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தோம். அதன்பேரில் அவர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள், உள்பட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவரது சொந்த ஊர் கேரளா. அவரது கணவர் அருண்குமார், சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதல் ஆணையராக ஜானகி  அருண்குமார் பணிபுரிந்தார். பிறகு  பதிவு உயர்வு கிடைத்து ஆந்திர மாநில சுங்கத்துறை ஆணையராக பணியாற்றினார். ஆந்திரா உள்பட வடமாநிலங்களில் பணியாற்றியபோது ஒரு  நிறுவனத்துக்கு அதிகமாக வரி  விதித்துள்ளார். இதை எதிர்த்து அந்த நிறுவனம் சுங்கத்துறையில் முறையிட்டது. அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஜானகி அருண்குமார் முதலில் நிராகரித்தார். பிறகு அந்த நிறுவனத்துக்கு வரி குறைக்கப்பட்டதோடு, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கூடுதல் வரியையும் திருப்பித் தர ஜானகி அருண்குமாரே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக எழுந்த புகாரில் அவருக்கு பதவி உயர்வு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மண்டல கலால்வரித்துறைக்கு முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

 ஜானகி அருண்குமாருக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் பங்களா டைப் வீடு உள்ளது. மேலும் சென்னை அடையாறிலும் வீடு உள்ளது. மத்திய கலால் துறையில் உள்ள சிலர் மூலம் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவர், பணம் கொடுத்து இருப்பதும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் முடிவில் ஜானகி அருண்குமார் உள்பட லஞ்சம் பெற்றுக் கொண்டு இடமாறுதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

டிசம்பர் மாதத்தில் ஜானகி அருண்குமார் ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.