Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 12, 2016

தீயாய் புயல் நிவாரண பணியாற்றும் பன்னீர்செல்வம் அரசு! அமைச்சர்களுக்கு சுதந்திரம்


அதிகாரம் பரவலாக்கப்பட்டதாலோ என்னவோ சென்னையை தாக்கிய வர்தா புயல் பாதிப்பின்போது பன்னீர்செல்வம் அரசு தீயாக வேலை பார்த்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டது.

கடந்த வருடம் சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்டபோது ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மகா மெத்தனமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பன்னீர்செல்வம் தலைமையிலான தற்போதைய மாநில அரசு துரித வேகத்தில் செயல்படுவதாக மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 கடந்த வருடம் சென்னையை புரட்டி போட்ட பெரு வெள்ள சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மழை பாதிப்பு முடிந்த பிறகு தநது தொகுதியான ஆர்.கே.நகருக்கு மட்டும் போன ஜெயலலிதா, வேறு தொகுதிகளை பார்க்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதா வேண்டாமா என ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு வர தாமதமானதால் சென்னை வெள்ளத்தில் மிதந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 ஆனால் இப்போது நிலைமை வேறு. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பம்ரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள சேதம் குறித்து எந்த அமைச்சரும் பேசவில்லை. சென்னை மாநகர மேயரான சைதை துரைசாமியை ஒரு ஆங்கில சேனல் நிருபர் துரத்தி துரத்தி கேள்வி கேட்டும் வாயை மூடியபடி ஓடிய காட்சி வைரலானது.

 ஆனால், இம்முறை, பலத்த காற்று வீசியபோதும் கூட முதல்வர் நேரடியாக தலைமைச் செயலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவ்வப்போது முதல்வர் பாதுகாப்பு நெறிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டார். இரவு 7 மணிவரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்பதை கூட முதல்வர் அறிக்கையாக வெளியிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அவர் மட்டுமே பேட்டியோ அறிக்கையோ அளிக்க முடியும். அமைச்சர்கள் அதிகாரமில்லாமல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்றோ மின்சார சப்ளையை இரவுக்குள் சீர் செய்துவிடுவோம் என்று பத்திரிகையாளர்களிடம் தைரியமாக பேட்டிளித்தார் அத்துறை அமைச்சர் தங்கமணி.

துறை சார் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் கீழ் வரும் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டனர். அந்த புகைப்படங்கள் அதிமுக மூலமாக வெளியிடப்பட்டன. அமைச்சர்களும், முதல்வரும் நேரடியாக களத்தில் நின்றதால், அதிகாரிகள் வேறு வழியின்றி சாலைகளில் இறங்க வேண்டியதாயிற்று. எனவே பணிகள் தொய்வின்றி நடந்தன

. ரப்பர் படகுகள், தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினர் என சகல துறையினரும், சாலைகளில் ரெடியாக நின்றனர். மரங்கள் விழுந்ததுமே அப்புறப்படுத்தப்பட்டன. அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. ஆவின் பால் சப்ளை நாளைக்கு தடையின்றி சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகாரம் ஒரே பக்கம் குவியாமல் பரவலாக்கப்பட்டால் ஏற்படும் நன்மைகளை இன்று சென்னை மக்கள் கண்கூடாக பார்த்தனர் என்றால் அது மிகையல்ல. மக்களிடம் புதிய தலைமையிலான அரசு நல்ல பெயரை சம்பாதிக்க இந்த புயலை பயன்படுத்திக் கொண்டது என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதிமுகவினர் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் ஜெயலலிதாவை விட்டுத்தர தயாராக இல்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதால் இப்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.