பாஜகவின்முக்கிய இலக்கு அதிமுகவிடம் குவிந்து கிடக்கும் எம்.பிக்கள்தான். லோக்சபாவில் அதிமுகதான் 3வது பெரிய கட்சி. மொத்தம் 37 எம்.பிக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் உள்ளனர். அதில் 12 பேர் அதிமுக. 13வது நபர் அதிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா.
பாஜகவின் கணக்கு என்னவென்றால் இந்த 49 பேரும் (சசிகலா புஷ்பா தவிர்த்து - அவர் ஏற்கனவே பாஜக ஆதரவில்தான் உள்ளார்) பாஜக சொல்வதை மட்டுமே நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். ஓட்டுப் போடு என்றால் போட வேண்டும். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. கிட்டத்தட்ட நிபந்தனையற்ற சரண்டர் கதைதான்.
பாஜக லோக்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தாலும், ராஜ்யசபாவில் அது மைனாரிட்டிதான். சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற ஒவ்வொரு கட்சியிடமும் அது கெஞ்சிக் கொண்டுள்ளது. அதிமுகவின் 13 பேரும் அப்படியே அவர்களது வசம் வந்தால் கெஞ்சும் வேலை சற்று குறையும் பாஜகவுக்கு. இதை சாதிக்க சசிகலா நடராஜனையும், அதிமுக ஆட்சியையும் தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. அதைத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அது செய்ய ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள்.
பாஜகவுக்கு கட்டுப்படத் தவறினால், முரண்டு பிடித்தால், முக்கி முனகினால் என்ன நடக்கும் என்றால் அதிமுக தலைவர்களும், அமைச்சர்களும் பற்பல இடங்களில், நபர்களிடம் குவித்து வைத்திருக்கும் பணத்தைப் பிடுங்குவார்கள். அதுதான் வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளின் பின்னணி என்கிறார்கள். இது வெறும் டிரைலர் தான். ஒத்து வர முடியுமா முடியாதா. ஒத்து வந்தால் அப்படியே நீடிக்கலாம். முடியாவிட்டால் எல்லாவற்றையும் பறி கொடுக்க வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம். இதைத்தான் அது திட்டமிட்டு செய்து வருவதாக சொல்கிறார்கள்.
சசிகலாவும் சரி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சரி இருவருமே காசு, பணம், துட்டு, மணி மணி விஷயத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் உள்ளனர். இதனால் இருவரும் வேறு வழியில்லாமல் பாஜகவுக்கு பணிந்து போக வேண்டிய பெரும் நிர்ப்பந்தத்தில் உள்ளனர். நாலரை ஆண்டு காலத்தை கழிக்க வேண்டும் என்றால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.
இப்போதைய நிலையில் பாஜகவை எதிர்த்தோ அல்லது தவிர்த்தோ செயல்படும் நிலையில் சசிகலாவும் சரி, அதிமுக ஆட்சியும் சரி இல்லை. காரணம், குவிந்து கிடக்கும் ஊழல்களும், பணக் குவிப்பும். எனவே பாஜகவின் இந்த சுற்றி வளைப்புக்கு அவர்கள் பணிந்து போயே ஆக வேண்டும்.
பாஜகவின் கணக்குக்கு மக்களிடம் என்ன மாதிரியான பதில் கிடைக்கும் என்பதை அறிய நாமும் நாலரை வருடம் இவர்களின் அரசியலை வேடிக்கை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.. பார்க்கலாம்!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.