தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.
சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம்.
ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது ?
ஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)
சிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா ? பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா ? அதை வெளிக்காட்டி இருக்கிறீர்களா ?
ஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம்.
ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.
சிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன ? என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?
ஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன்.
அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சிமி: இது எப்படி சாத்தியமாகிற்று ?
ஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.
சிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா ?
ஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை.
அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.
சிமி: நிஜமாகவா ? ஆச்சர்யமாக இருக்கிறது.
ஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன்.
ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.
சிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?
ஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான், மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.
சிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா ? உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா?
ஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.
சிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா? ??
ஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும்.
அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.
ஆனால், அம்மா சென்னைக்குக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன்.
காலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம்
காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன்.
பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.
சிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா ?
ஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன்.
யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அம்மாவுடன் வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார்.
நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.
சிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா ? அது உண்மையா ?
ஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள்.
அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.
அதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருந்தேன்.
நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.
ஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை.
என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.
சிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா ? உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது ?
ஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன்.
எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.
அதேபோல், அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
சிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?
ஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.
சிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.
ஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும்.
அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.
எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் ?
என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை.
நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.
கையறு நிலையிலான அன்றைய சூழலலில், வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.
சிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ?
ஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.
புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.
சிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் ? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் ?
ஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா ?
அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.
பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம்.
பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள்.
ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.
எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும்.
என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.
தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.
இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.
சிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.
ஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.