Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

தமிழக அரசிற்கு ஜார்ஜ் பரபரப்பு கடிதம்! கோடிக் கணக்கில் மாமூல் வசூலித்த உயர் அதிகாரிகள் யார் யார்?


போதை பொருள் பறிமுதல் , கோடிக் கணக்கில் மாமூல் வசூலித்த உயர் அதிகாரிகள் மீது விசாரனை கமிஷன் - தமிழக அரசிற்கு ஜார்ஜ் பரபரப்பு கடிதம்!

சென்னையில் போதை பொருள் பறிமுதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில் கோடிக்கணக்கில் மாமூல் வசூலித்த உயர் அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடோன்கள் உள்ளன. அந்த குடோன்களில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுக்கு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் புகாரில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்த 5 ஆண்டு காலமாக நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த நேரடி விற்பனைக்கு சென்னை மாநகரத்தில் பணிபுரியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு மாதம், மாதம் மாமூலாக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ரகசிய டைரியை அதிரடி சோதனையில் வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதில், மொட்டையாக சென்னை ேபாலீசில் பணியாற்றும் ஒரு ஏடிஜிபிக்கு ரூ.20 லட்சம் மாதம், மாதம் மாமூல் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதே போன்று ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப பணம் வழங்கப்படுவதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த கடிதத்தில் சென்னை மாநகரத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இருப்பதாக கூறப்பட்டு இருந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தார். அதன் பேரில், அப்போதைய டிஜிபி அசோக் குமார், தற்போது உயர் பதவியில் இருக்கும் உயர் அதிகாரி மீது பரபரப்பான புகார் கடிதத்தையும் முதல்வருக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட அதிகாரிகளை டிஜிபி அசோக் குமார் காட்டி கொடுத்ததால், அவர் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், தற்போது சென்னை மாநகர ேபாலீஸ் கமிஷனராக இருக்கும் ஜார்ஜ் சென்னையில் போதை பொருட்களை தடுக்க அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு வடபழனி போலீஸ் நிலைய பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துதான் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே சென்னையில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளுக்கு பெரும் அளவில் பணம் கொடுத்து இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து நேர்மையான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து மாமூல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கமிஷனர் ஜார்ஜ் கூறியபடி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பும்
ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.