Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

எம்.ஜி.ஆர் எழுப்பிய கோட்டையை ஆளப்போகும் மூன்றாவது பெண் சசிகலா!


 
தமிழகத்தில் முன்னணி கட்சியாக திகழும் கட்சி அதிமுக. இந்த கட்சியில் இரண்டு பெண்கள் இதுவரை ஆட்சி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.முதலாவதாக, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி.
புரதசித் தலைவர் என்று மக்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர்,முதல்வர் பதவியில் இருந்த போது உயிரிழந்தார்.இதனால் அவரது மனைவி தமிழகத்தின் முதல் பெண்  முதல்வரானார்.
அதன் பின்பு எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுத்தார்.ஒரு பெண்ணாக இருப்பினும் ,துணிச்சலாக எதிர்க்கட்சிகளுக்கு ஈடுகொடுத்தார்.அதிமுக வை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவ்விரண்டு பெண்மணிகளும் எம்.ஜி.ஆருக்கு தொடர்புடையவர்கள்.
ஆனால் தற்போது,ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மூன்றாவது பெண்மணியாக வி.கே.சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் ஆகியுள்ளார்.கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் அதிமுகவின் வரலாற்று வளர்ச்சி நிகழ்வுகளை கொஞ்சம் சுருக்கமாக காண்போம்.
1972ல் திமுக வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே 1977ஆம் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலை முதன் முதலாக எதிர்கொண்டார் எம்ஜிஆர்.
அத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்த முதல் வெற்றி திமுக கட்சிக்கு கிடைத்த முதல் பின்னடைவு.
அதன்பிறகு, 1977ல் நடந்த தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மையுடன் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 48 இடங்களில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்று எதிக்கட்சியானது. அதன்பிறகு எம்ஜிஆர் மறைவு வரை திமுகவுக்கு ஆளுங்கட்சியாகும் வாய்ப்பு கிட்டவேயில்லை.
இப்படி அதிமுகவை இரும்புக் கோட்டையாக வளர்த்தெடுத்து பாதுகாத்து வந்தார் எம்ஜிஆர். 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போதும் அதிமுக வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், 1987ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் எம்ஜிஆர் மறைந்தார்.
எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவியான வி.என்.ஜானகி முதலமைச்சராகப் பதவி ஏற்றார். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்று தகுதியைப் பெற்றார். ஆனால், முதலமைச்சராக அவர் வெகு நாட்கள் நீடிக்க முடியவில்லை.
அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்குதான் கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து சட்டசபையில் தன்னால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாததால், வி.என்.ஜானகியின் பதவியும் இழந்து ஆட்சியும் கவிழ்ந்தது.
எம்ஜிஆரின் வழியில் தானும் திமுகவுக்கு சிம்மசொப்பனமாக கட்சியை வழிநடத்தி வந்தார்.இரண்டாக பி[பிளவுபட்டு கிடந்த கட்சியை சாதுர்யமாக ஒன்று திரட்டி கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
ஆறு முறை தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் வீற்றிருந்து, இடையிடையே எத்தனையோ சோதனைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்ட போதும் அதனை துச்சமெனத் துடைத்தெறிந்து துணிச்சலுடன் எதிர்கொண்டு, அரசியலில் வீறு நடை போட்டார் ஜெயலலிதா. ஆனால், காலம் விதித்த கணக்கால், உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அதிமுகவினரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
எம்ஜிஆருக்குப் பிறகு திறமையோடும், ராணுவக் கட்டுக்கோப்போடும் கட்சியை வழிநடத்தி வந்த ஜெயலலிதாவின் மறைவு, அதிமுகவினரை சோகத்தில் அசைத்துப் போட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற வரிசையில் கட்சியைக் கட்டுப்பாடோடு சிதறாமல் ஒருங்கிணைத்து தலைமை ஏற்று, அடுத்து வழி நடத்தப் போவது யார் என்ற பெருங்கேள்விக்கு வி.கே.சசிகலா இன்று விடையாகி இருக்கிறார்.ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா,அவரைப்போலவே கட்சியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் சசிகளவிற்கு அதிமுக பொதுக்குழு பொதுச் செயலாளர் பதவியை அளித்துள்ளது.
ஆக, அதிமுகவின் வரலாற்றில், மூன்றாவது பெண் தலைவராக சசிகலாவின் பெயர் அதிமுகவின் வரலாற்று பக்கத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதாவைப் போன்றே தனிப்பெரும் ஆளுமையோடு ஒரு தலைமையின் கட்டுப்பாட்டோடு வெற்றிப் பாதையிலேயே வழி நடத்திச் செல்வாரா வி.கே.சசிகலா என்பதற்கு எதிர் வரும் காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.