Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 11, 2016

சேகர் ரெட்டியின் வீட்டில் இன்றும் குவியல், குவியலாக பணம், வீட்டின் ரகசிய சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது


சேகர் ரெட்டியின் வீட்டில் இன்றும் வருமான வரித்துறையின் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கன பணம் சிக்கியது. வீட்டியின் ரகசிய சுவர் அறைகளில் இருந்து பெருமளவு நகைகள் சிக்கி உள்ளது.

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி. இவர் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கான உரிமம் பெற்றுள்ளார். இவர் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுப்பதாகவும், ஏராளமான ரொக்கப்பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது. இதையொட்டி சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 8–ந் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல’ வருமான வரித்துறையினரின் சோதனையில், கோடிக்கணக்கான பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கான மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கி வருகின்றன.

  3–வது நாள் சோதனையான நேற்று மாலை நேர நிலவரப்படி மொத்தம் ரூ.166 கோடி ரொக்கப்பணமும், 179 கிலோ தங்கமும் சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகள், பணப்பரிமாற்றம், அசையும் மற்றும் அசையா சொத்து முதலீட்டு ஆவணங்களும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. தோண்ட, தோண்ட ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்குவதால், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 4–வது நாளாக தொடர்கிறது.

சென்னை, காட்பாடியில் கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை ஓரளவுக்கு நிறைவு பெற்ற நிலையில் 8-ந்தேதி காட்பாடியில் ‘சீல்’ வைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் பிரதான வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்தனர். சேகர்ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயை அதிகாரிகள் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வரவழைத்திருந்தனர். ஜெயஸ்ரீ முன்னிலையில் ஒவ்வொரு ‘சீல்’ உடைக்கப்பட்டு பணம், நகைகள் எடுக்கப்பட்டன. 8-ந்தேதி இரவு அந்த வீட்டில் சந்தேகத்துக்குரிய 198 இடங்களில் அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். அந்த சீல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு விடிய, விடிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நேற்றிரவு 7.20 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தம் 14 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடி வீட்டில் துருவி, துருவி சோதனையிட்டு நகை, பணம், ஆவணங்களை கைப்பற்றினார்கள். குவியல், குவியலாக பணம் கண்டு பிடிக்கப்பட்டது. 6 மூட்டைகள் நிறைய பணம் கட்டுக் கட்டுகளாக அடைக்கப்பட்டது. இதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தன. இதன் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தெரிகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் நேற்றிரவு சோதனையில் ரூபாய் நோட்டுகளை விட அதிக நகைள் கிடைத்தது. அதிகாரிகள் படுக்கை அறைகள், கழிவறைகளிலும் தீவிர சோதனை நடந்தது. இதன் மூலம் குவியல், குவியலாக நகைகள் கிடைத்தது. நகைகள் கிடைத்த விதம் வருமான வரித்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை அளித்தது. எனவே சேகர்ரெட்டி வீட்டுக்குள் சுரங்க அறைகள் எங்காவது உள்ளதா என விசாரித்து சோதனையிட்டனர். வீட்டு சுவரில் பல ரகசிய அறைகள் இருப்பது தெரிந்தது. லாக்கர்கள் போல அந்த சுவர் அறைகள் இருந்தன. அந்த லாக்கர்களில் ஏராளமான நகைகள் இருப்பது கண்டுபிடிக்கபபட்டு கைப்பற்றப்பட்டது.

அந்த நகைகள் அனைத்தையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கிட்டனர். பிறகு அவை 2 சூட்கேஸ்களில் அடுக்கப்பட்டன. இதற்கிடையே நிறைய சொத்து ஆவணங்களும் விடிய, விடிய நடந்த சோதனையில் சிக்கின. அந்த சொத்து ஆவணங்கள் மட்டும் 3 பெரிய டிராவல் பேக்குகளில் அடைக்கப்பட்டது. இன்று காலை 7.20 மணிக்கு அதிகாரிகள் நடத்திய வேட்டை முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் பணக்கட்டுகளை 6 மூட்டைகளிலும், நகைகளை 2 சூட்கேஸ்களிலும், ஆவணங்களை 3 டிராவல் ‘பேக்’குகளில் வைத்து வெளியில் எடுத்து வந்தனர். அவைகள் 2 கார்களில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.