December 21, 2016
ஆமா இந்த 251 ரூபாய் மொபைல் என்னாச்சு? இந்தாண்டின் மிகப்பெரிய மோசடியா?
இது டிஜிட்டல் இந்தியா. இப்போது நாம் செய்திருப்பது ஒரு புரட்சி. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மலிவான விலையில் ஸ்மார்ட்போன் கிடைக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக லாபம் பார்க்காமல், பல இரவு பகல் உழைப்பைத் தந்து மிகக்குறைவான விலையில் மொபைல் உருவாக்கியிருக்கிறோம். டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்கும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பெருமையுடன் இந்த சேவையை வழங்குகிறோம்" சரியாக பத்து மாதங்களுக்கு முன்பு இப்படி பெருமை பொங்க ப்ரீடம் 251 மொபைல் அறிமுக விழாவில் சொன்னார் மோஹித் குமார் கோயல்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாமிலியில் மளிகை கடைக்காரருக்கு மகனாக பிறந்தவர் மோஹித் குமார். குடும்பத்துக்கு விவசாய பின்னணியும் உண்டு. அமிதி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பெற்றவராக தன்னை வலைதளங்களில் அடையாளம் காட்டிக்கொண்டார். இவர் தான் ரிங்கிங் மொபைல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் கீழ் மிகக்குறைவான விலையில் மொபைல் வழங்க வேண்டும் என இந்திய அரசு சொல்லியிருந்தபோது, எப்படிப்பார்த்தாலும் 3500 ரூபாய்க்கு கீழ் மொபைல் வழங்கவே முடியாது, வழங்கவும் அனுமதிக்கக் கூடாது என இந்திய மொபைல் நிறுவனங்களின் சங்கம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சர்கள் ஒப்புதல் சைகை காட்டியது மொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஐந்தே மாதங்கள் ஆகியிருந்த நிலையில், இந்திய மக்களுக்கு மலிவு விலையில் மொபைல் வழங்கப்போவதாக சொன்னார் மோஹித் குமார். இது மோடியின் சாதனை என நெட்டிசன்ஸ் வானளாவ புகழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பி.ஜே.பி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவனான முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடந்த விழாவில் மொபைல் போனை அறிமுகப்படுத்தினார் மோஹித் குமார்.
"இந்த மொபைலின் விலை கிட்டத்தட்ட 2500 ருபாய் ஆகும். பிரத்யேக மார்கெட்டிங் உத்திகள், மேக் இன் இந்திய திட்டத்தின் கீழ் வரிகள் குறைப்பு , இ காமர்ஸ் வழியாக மார்க்கெட்டிங் என பல்வேறு அம்சங்கள் காரணமாக இந்த மொபைலை வெறும் 251 ரூபாய்க்கு வழங்குகிறோம்" என பெருமை பொங்கச் சொன்னார் நிறுவனத்தின் இயக்குநர் மோஹித். மலிவு விலை மொபைல் ஐடியாவே மோஹித்தின் மனைவி தார்னா கோயலுடையது தானாம். தார்னா தான் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ என்பது குறிப்பிடத்தக்கது.
மோஹித் குமாரின் இந்த திட்டத்துக்கு, அப்போதே மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி ஓம்பிரகாஷின் வலுவான ஆதரவு இருந்தது சர்ச்சையாகப் பார்க்கப்பட்டது. ஏற்கெனவே இந்த நிறுவனம் அறிவித்திருந்த மலிவு விலை ஹெட்செட் வாடிக்கையாளர்களுக்குச் சரியாக போய்ச் சேரவில்லை, சீனாவில் எக்ஸ்பைர் ஆகும் நிலையில் உள்ள கடைசி கட்டத்தில் இருக்கும் உதிரி பாகங்களை வைத்தே மொபைல் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன என அடுத்தடுத்து சர்ச்சை நிலவியது.
8 ஜி.பி மெமரி ஸ்டோரேஜ், 1.3 GHZ குவாட் கோர் பிராசஸர், 540*960 பிக்ஸல் ரெசலுஷன், 3.2 எம்.பி கேமரா, ஃபிரண்ட் கேமரா வசதி, டூயல் சிம் வசதி என மொபைல் போனின் கவர்ச்சி அம்சங்களை பார்த்த இந்தியர்கள், ஆன்லைன் புக்கிங் ஆரம்பித்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு புக்கிங் செய்தார்கள். ஒரு நொடிக்கு ஆறு லட்சம் பேர் ஃப்ரீடம் 251 இணையதளத்தில் முட்டி மோதியதால், சில நிமிடங்களில் இணையதளம் முடங்கியது.
" மொபைலுக்கான 251 ரூபாயுடன் டெலிவரி சார்ஜாக சுமார் 40 ரூபாயும் சேர்த்து 291 ரூபாய் இணையத்தில் செலுத்தி விட்டால் போதும். அதாவது ஜூன் முப்பதாம் தேதி மொபைல் புக்கிங் செய்தவர்கள் அனைவரின் கையிலும் மொபைல் இருக்கும். கடைக்கோடி இந்தியனுக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும், இந்தியாவின் முன்னேற்றம் ஏழை எளியவர்களையும் அடைய வேண்டும் என மோடி சொல்லியிருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்தியாவின் அடுத்த சில மாதங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியில் அசுர வேக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதைச் சாத்தியப்படுத்துகிறோம்" என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சதா.
இதோ பத்து மாதங்கள் முடிவடைந்து விட்டன. சரி மொபைல் டெலிவரி ஆனதா? தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதா?
மொத்தமாக ஏழு கோடி பேர் மொபைல் ரிஜிஸ்டர் செய்தார்கள், அதில் முப்பதாயிரம் ஆர்டர் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது . அதில் ஐந்தாயிரம் மொபைல் மட்டும் ஜூன் இறுதியில் டெலிவரி செய்யப்படும். மீதி பேருக்கு பணம் திருப்பி அனுப்பபடும், அதன் பின்னர் கேஷ் ஆன் டெலிவரி முறையில் 65,000 மொபைல் மீண்டும் தரப்படும் என அறிவித்தார் மோஹித். ஆனால் அந்த ஐந்தாயிரம் பேருக்கு கூட மொபைல் வழங்கப்பட்டதா எனத் தெரியவில்லை, வெறும் நூற்றுக்கணக்கான மொபைல்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை மோஹித் மறுத்தார். ஜூன் மாதத்துக்குப் பிறகு மோஹித்தின் நடவடிக்கைகள் மாறின, மீடியா, சமூக வலைத்தளங்கள் என எங்கும் சரியாக பேச வில்லை.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த தொழிலதிபர் அசோக் சதா நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக சர்ச்சைகள் கிளம்பின, ஃப்ரீடம் 251 மொபைலின் அதிகாரபூர்வ இணையதளம் கடந்த பத்து மாதங்களாக முடங்கியே கிடக்கிறது. இதற்கிடையில் இரண்டு கோடி ரூபாய் செக் மோசடி செய்த வழக்கு மோஹித் மேல் தொடரப்பட்ட வழக்கில் இந்த மாதம் டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியிருக்கிறது. ரிங்கிங் மொபைல்ஸ் நிறுவனமே மூடப்பட்டு விட்டதாகவும், விரைவில் இன்னொரு பெயரில் மோஹித்தும் அவரது மனைவியும் வேறொரு கம்பெனி ஆரம்பிக்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மோஹித் கடும் மவுனம் சாதித்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு ஆளிடம் 25,000 ரூபாய் திருடுவதை விட, நூறு பேரிடம் 250 திருடுவது எளிது என இணையத்தில் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதே சமயம் 251 ரூபாய் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டிருப்பதால், மொபைல் வரவில்லை என்பதற்கும் பலர் கவலைப்படவில்லை. ஆனால் உண்மையில் எவ்வளவு பேர் பதிவு செய்தார்கள், எவ்வளவு ஆர்டர்கள் எடுக்கப்பட்டன, எவ்வளவு பேருக்கு மொபைல் வழங்கப்பட்டது, எவ்வளவு பேருக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டது, எத்தனை நாட்களுக்குள் பணம் திருப்பி செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் மேலாக இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல் ஃப்ரீடம் 251 மொபைல் ஊழல் தானா என்றும் கேள்வி எழுகின்றன. பாஜக அமைச்சர்கள், எம்பி, பிரதமர் என அத்தனை பேர் ஆசியுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெயிலியர் என்றால், அதற்கான பொறுப்பை ஏற்பது யார்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லப்போவது யார்?
- பு.விவேக் ஆனந்த்.
ஆமா இந்த 251 ரூபாய் மொபைல் என்னாச்சு? இந்தாண்டின் மிகப்பெரிய மோசடியா?
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.