Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

எங்களுக்கு ஃபிடல் தாத்தா கடிதம் எழுதி இருக்காரே! - நெகிழும் தமிழகச் சிறுமிகள்


புரட்சிக்காரர், போராளி, கம்யூனிச நாயகன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நின்றவர், அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த வீரன், இவைதான் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி நமக்கு பரிச்சயமாகத் தெரிந்தவை. ராணுவ உடையில் மிடுக்கென இருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பார்த்தால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல. நமக்கும் பயம் கலந்த மரியாதையே இருக்கும். காஸ்ட்ரோவின் கம்பீரமான ராணுவ உடைக்குள் அன்பும், அக்கறையும், இந்தியர்கள் மீது பாசமும் கொண்ட இதயமும் இருந்தது. இதனை தன் செயலின் மூலமே உலக மக்களுக்கு வெளிக்காட்டியவர் காஸ்ட்ரோ. கடல் கடந்து எங்கோ இருக்கும் இரண்டு தமிழகச் சிறுமிகளுக்கு காஸ்ட்ரோ அனுப்பியிருக்கும் கடிதங்களே, அவரின் அன்புக்கும், பாசத்துக்கும் உதாரணங்களாக இருக்கின்றன.

காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் என தங்களது மகளுக்கும், மகனுக்கும் இந்திய தலைவர்களின் பெயரை மக்கள் சூட்டிவரும் நிலையில், தமிழகத்தில் இருவர் தனித்து சிந்தித்தனர். கியூபா விடுதலை வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ மீதான ஈர்ப்பில், தமிழகத்தைச் சேர்ந்த வில்வம் மற்றும் பழபிரபு ஆகியோர் தங்களின் மகள்களுக்கு 'கியூபா' என்ற புரட்சிப் பெயரைச் சூட்டியுள்ளனர். இச்சிறுமிகளை வாழ்த்திதான் 15,000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கடிதம் அனுப்பியிருக்கிறார் காஸ்ட்ரோ.

'' எனது முதல் மகளுக்கு சார்லஸ் டார்வின் நினைவாக 'டார்வினா' என பெயர் வைத்தோம். எனக்கு இளமைக்காலம் முதலே சேகுவேரா மீதும், காஸ்ட்ரோ மீதும் அளவு கடந்த ஈர்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல், கியூபா புரட்சிநாளான ஜூலை 26-ம் தேதி எனது மகள் பிறந்தாள். வருடா வருடம்  ஜூலை 26-ம் தேதி புரட்சிநாளாக கியூபா மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் நினைவாக, எனது இரண்டாவது மகளுக்கு 'கியூபா' என பெயர் வைத்தோம். எங்களது குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வை 'கியூபா அறிமுக நாள்' என பத்திரிகை அடித்து அழைத்தோம். அந்த பத்திரிகையை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் அனுப்பி வைத்தோம். பிறகு அதைப்பற்றி நாங்கள் மறந்து விட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து ஃபிடல் காஸ்ட்ரோவின் கையெழுத்துடன் கூடிய வாழ்த்து அட்டை எங்களுக்கு வந்தது. வாழ்த்து அட்டை ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால் எங்களுக்குப் புரியவில்லை, இருந்தாலும் எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என தனது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார், ஊத்தங்கரையை சேர்ந்த பழபிரபு.

திருச்சியைச் சேர்ந்த வில்வம்,'' கியூபா புரட்சி நூல்களை படித்த எனக்கு இயல்பாகவே ஃபிடல் காஸ்ட்ரோ மீது மரியாதை வந்தது. அதனால், எனது மகளுக்கு 'கியூபா' என பெயர் வைத்தேன். இதனை காஸ்ட்ரோவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியான முகவரி தெரியாததால், 'பிடல் காஸ்ட்ரோ, அதிபர், கியூபா' என்று முகவரியை எழுதி கடிதத்தை அனுப்பிவைத்தேன். காஸ்ட்ரோவின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால், ஒரு பொருள் அவரின் கைகளுக்கு செல்வதற்கு முன்பு 100 சோதனைகளை தாண்டி செல்லும் என படித்திருக்கிறேன். ஆக, நமக்கு எல்லாம் எங்கு பதில் வரப்போகிறது என நினைத்துக்கொண்டேன். ஆனால், ஒரு மாதத்திலே எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. எங்களது மகள் 'கியூபா'-வை வாழ்த்தி அனுப்பியிருந்த வாழ்த்து அட்டையில் பிடல் காஸ்ட்ரோ கையெழுத்திட்டிருந்தார். அந்த கடிதத்தை நாங்கள் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறோம்'' என்றார்.

அன்பு நிறைந்த புரட்சிக்காரர் இன்று இல்லையே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.