சென்ற பாராளுமன்றத் தேர்தலில் மோடியை ஆதரித்த இரண்டு தமிழ் எழுத்தாளர்களில் அடியேனும் ஒருவன். மற்றொருவர் ஜோ டி குரூஸ். நான் ஆதரித்த காரணம், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத்தில் சராசரி மனிதனின் வாழ்க்கை சுலபமாக இருந்தது. உதாரணமாக, மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. தண்ணீர்ப் பிரச்னை இல்லை. ஆனால் மோடி பிரதமரான பிறகு, மன்மோகன் சிங்குக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதற்கும் ஒரு தேசத்தை நிர்வகிப்பதற்கும் எக்கச்சக்கமான வித்தியாசங்கள். இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டாம்; கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்றார்கள் மோடி ஆதரவாளர்கள். ஆனால் ஏதாவது மாற்றம் நடக்கும் என்பதற்கான வெளிச்சத்தின் சிறு கீற்றுகூட தென்படவில்லை. ‘ஊழலை ஒழிப்போம்’ என்பதுதான் மோடியின் தேர்தல் கோஷமாக இருந்தது. தீவிரவாதத்தைப் போலவே ஊழலும் தேசத்துரோகம் என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியது. அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் போன்றவர்களின் பிரபலத்துக்குக் காரணம் ஊழல் எதிர்ப்புதான். மோடியின் மகத்தான வெற்றிக்கும் அதுதான் காரணம்.
ஆனால் மோடியின் ஆட்சியில் எந்த ஊழல் அரசியல்வாதியும் தண்டிக்கப்படவில்லை. உண்மையில், காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடியின் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. தெரிந்த ஒரே வித்தியாசம், அஞ்சல் அலுவலகங்களில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கங்கா ஜலம் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டதுதான். இதைச் சொல்லியா பதவிக்கு வந்தார் மோடி? இந்த நிலையில், திடீரென்று 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று வந்த அறிவிப்பு. இந்திரா காந்தியின் எமர்ஜென்சியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்திய திட்டம் இது. எமர்ஜென்சியில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் நக்ஸலைட்டுகளும்தான் சிறைக்குப் போனார்கள். ஆனால் மோடியின் இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த தேசமே சிறையில் தள்ளப்பட்டதுபோல் தெரிகிறது. மக்கள் தொகையில் பாதிப்பேர் மணிக்கணக்கில் ஏடிஎம் வாசல்களில் கியூவில் நிற்கிறார்கள். அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை எடுத்து செலவுசெய்ய இத்தனை சித்ரவதை.
மோடியின் அறிவிப்பால் நடந்த மிகப்பெரிய துயரம் என்னவென்றால், அரசு நிர்வாகம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதுதான். ஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ தவறு செய்தால் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒட்டுமொத்த அரசாங்கமே ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக நடந்துகொண்டால் அந்த அரசு எந்திரத்தின்மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா? நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு சேமிக்கலாம் என்று ஒரு மனிதனுக்கு இனிமேல் நம்பிக்கை வருமா? நாளை இன்னொரு மோடி வந்து இன்னொரு திட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன ஆகும் என்றுதானே சராசரி மனிதர்கள் நினைப்பார்கள்?
பிஜேபி, காங்கிரஸ் என்ற கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கம் என்ற ஒரு அமைப்பின்மீதே மக்களை நம்பிக்கை இழக்கச் செய்தது மோடியின் மிகப்பெரிய அரசியல் பிழை. இனிமேல் என்ன செய்தும் இதை ஈடு செய்ய முடியாது. சில சமயங்களில் நாம் பார்த்திருப்போம். சில பொதுநலத் திட்டங்களுக்காக நம்முடைய வீடுகளை, நிலங்களை கொஞ்சமான ஈட்டுத் தொகை கொடுத்துவிட்டு அரசாங்கம் கையகப்படுத்திக்கொள்ளும். பொதுநலம் என்ற குறிக்கோள் நம் முன்னே நிற்பதால் நம்முடைய இழப்பை நாம் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் ஒட்டுமொத்த தேசத்தின் அத்தனைபேரின் பணத்தையும் ஒரு அரசாங்கம் செல்லாக் காசு என்று அறிவித்துவிட்டால் அதை என்னவென்று சொல்வது?
கறுப்புப் பண முதலைகளை ஒழிக்க இதுவா வழி? அவர்களை ஒழிப்பதற்காக கோடிக்கணக்கான சாமான்ய மனிதர்கள் துயரம் அடைய வேண்டுமா? மோடிக்கு ஓட்டுப் போட்டதற்கான தண்டனையா இது? மோடி சுயநலம் இல்லாதவர்; சொத்து சேர்க்காதவர்; தன்னலம் அற்றவர். எல்லாம் சரி. மோடியின் தன்னலம் அற்ற வாழ்க்கையால் ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அதைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்கிறீர்களா? இதைத்தானே 1947லிருந்து நாங்கள் கேட்டுக்கொண்டு வருகிறோம்?
(விஜய் மல்லையா)
தொலைக்காட்சியில் தோன்றி தன் இரு கரங்களையும் கூப்பி, கண்ணீர் விட்டுக் கேட்கிறார் மோடி, ‘என்னோடு ஒத்துழையுங்கள்’ என்று. மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக் கொளுத்தும்போது அதற்காக எப்படி ஐயா ஒத்துழைப்பது? பெரும் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அந்தப் பணம் எல்லாம் இப்போது வெற்றுக் காகிதங்களாக மாறிவிட்டன என்று ஒரு பேச்சுக்காகவே நம்புவோம். அதனால் ஒரு சாமானியனின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரப் போகிறது?
ஒரு மக்கள் நல அரசாங்கத்தின் முக்கியமான கடமை என்னவென்றால், எல்லா மனிதர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பையும் சமமான மருத்துவ வசதியையும் அளிக்க வேண்டும். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் இமாலய வித்தியாசத்தை வைத்துக்கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிப்பதால் என்ன பயன்? மேலும், ஒரு சுரங்க முதலாளியிடம் உள்ள பத்தாயிரம் கோடி ரூபாய் என்பது யாருடைய பணம்? அவரும் அவருடைய குடும்பத்தினரும் உழைத்துச் சம்பாதித்ததா? அந்தப் பணம் அத்தனையும் ஒவ்வொரு சுரங்கத் தொழிலாளியின் ரத்தம். அந்த ரத்தத்தைத்தான் செல்லாக்காசாக்கி விட்டார் மோடி. யாருக்கு அந்தக் கோடிகள் போய்ச் சேரவேண்டுமோ, யார் அந்தக் கோடிகளின் உரிமையாளர்களோ அவர்களுக்கு அந்தப் பணம் போய்ச் சேரவில்லை. ’உன்னுடைய கண்கள் போக வேண்டும்; அதற்காக என்னுடைய கண்கள் போனாலும் பரவாயில்லை’ என்பதைப் போன்ற மனோபாவம்தானே இது?
துனிசியாவின் அருகே ஐ.எஸ். போராளிகளை அழிப்பதற்காக ஊரையே குண்டுபோட்டு அழித்திருக்கிறது அமெரிக்க ராணுவம். போராளிகளோடு நூற்றுக்கணக்கான மக்களும் காலி. மோடியின் திட்டம் கிட்டத்தட்ட அது போன்றதுதான். இது போதாது என்று, பணம் கிடைக்காமல் மக்கள் திண்டாடித் தெருவில் நின்றுகொண்டிருக்கும் வேளையில் - எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் - மல்லையாவின் 1000 கோடி கடனையும் ரத்து செய்திருக்கிறது அரசு. இந்த 1000 கோடியும் யாருடைய பணம்? மக்களின் பணம்தானே? இவ்வளவுக்கும் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பி லண்டனுக்கு ஓடிவிட்டார். அவரை இந்திய அரசால் பிடிக்க முடியவில்லை. தவறு; பிடிக்க மனம் இல்லை. இதிலிருந்து மக்களுக்குக் கிடைத்திருக்கும் செய்தி, நீங்கள் 1000 ரூபாய் ஏமாற்றினால் ஜெயில். 1000 கோடி ஏமாற்றினால் பத்மபூஷன் பட்டம். (சமீபத்தில் பத்மபூஷன் வாங்கிய ஒரு பிரமுகர் பணமோசடி குற்றச்சாட்டில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்!)
(வங்கியில் ராகுல் ஊழியர் ஃசெல்பி)
இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் சில அரசியல்வாதிகள் செய்யும் காமெடியைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ராகுல் காந்தி செலவுக்குக் காசு இல்லாமல் மக்களோடு மக்களாக வங்கியின்முன்னே கியூவில் நின்றார். நம்மூரில் திருமாவளவனும் நின்றார். ராகுல் இப்படியெல்லாம் தன்னை சிரமப்படுத்திக் கொள்ளவே வேண்டியதில்லை. அடுத்த தேர்தல் வரை நிம்மதியாக அவர் தில்லி கால்ஃப் கிளப்பில் கால்ஃப் விளையாடிக் கொண்டிருக்கலாம். மோடியின் திட்டங்களே அவரை வீட்டுக்கு அனுப்பிவிடும் - இன்னும் 20 ஆண்டுகளுக்கு தேர்தலே இல்லை என்று அவர் அறிவிக்காமல் இருந்தால்!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.