November 10, 2016
மோடியின் முடிவால் மக்கள் அவதி: மனிதநேயமுள்ள ஹோட்டல் முதலாளி
”500 , 1000 தான் இருக்கா பரவாயில்ல வந்து சாப்புட்டு போங்க, முடிஞ்சா அப்புறம் கொடுங்க கொடுக்கலன்னாலும் பரவாயில்ல” நெல்லை ஹொட்டலின் அறிவிப்பிற்கு குவியும் பாராட்டுக்கள்
(நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சற்று முன் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்)
நெல்லை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மாட்டோம். ஆனா காசில்லாம சாப்பிடலாம். முடிஞ்சா அப்புறம் பணம் கொடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை," என அறிவித்து சேவையாற்றி வருகிறது நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் பணம் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அத்துடன், நேற்று ஒருநாள் வங்கிகள் மூடப்பட்டதுடன், ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள். கையில் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் கரன்சிகள் இருந்தபோதிலும், அவற்றை வர்த்தக நிறுவனங்களும் ஹோட்டல்களும் வாங்க மறுத்ததால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்தார்கள். வெளியூர்களைச் சேர்ந்த சிலர் சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவித்தார்கள்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான ஹோட்டல்களில் இதே நிலை நீடித்ததால் பலர் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தனர். சில ஹோட்டல்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன.
ஆனால் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகள் பெறப்படவில்லை. அதே நேரத்தில் பணம் இல்லாவிட்டாலும் சாப்பிட்டுச்செல்லலாம் என புதுவிதமாய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.
இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.
இது பற்றி ஹோட்டலின் உரிமையாளரான கோவி என்கிற கோவிந்தனிடம் பேசினோம். ‘‘திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன் ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் 500, 1000 ரூபாய்கள் இருந்தபோதிலும் அதனை செலவு செய்ய முடியவில்லை. அதனால் உணவு சப்பிட முடியாமல் சிரமப்படும் தகவல் எனக்கு தெரிய வந்தது.
அதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்தேன். நான் ஹோட்டல் வைத்து இருப்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதனால் இன்றும் நாளையும் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களிடம் ‘பில்’ எதுவும் கேட்க மாட்டோம். அவர்களிடம் பணம் இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் சாப்பிடுவதற்கான தொகையை எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை தராமல் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்து உள்ளோம்.
பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதே சமயம், இலவசமாக சப்பாடு கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் தான், அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளோம்’’ என்றார்.
கோவிந்தன் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இது போன்ற சமூக அக்கறைஉள்ளவர்களை ஊக்கப்படுத்தும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மோடியின் முடிவால் மக்கள் அவதி: மனிதநேயமுள்ள ஹோட்டல் முதலாளி
Reviewed by மறத்தமிழன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.