திப்பு சுல்தான் இரு காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கவைக்கப்படுகிறார். முதலாவது, அவர் வெவ்வேறு சமுதாயங்களைக் கையாண்ட விதம். இரண்டாவதாக, கட்டமைக்கப்பட்ட வரலாறு மற்றும் அதைக் குறித்த பல்வேறு விதமான பார்வைகள்.
சில வரலாற்றாய்வாளர்கள், திப்பு சுல்தான், கேரள நாயர் சமூகத்தினரையும், தக்ஷின கன்னடாவின் கத்தோலிக்கர்களையும், கொடகுப் பகுதி கூர்கிகளையும் இஸ்லாமியர்களாக மாற்றியதாகவும், மதப் பிடிவாதம் கொண்டிருந்தவராக பரப்புரை செய்கின்றனர். மேலும், நிர்வாகத்திற்குள் பாரசீக மொழியை பயன்படுத்தியதால், அவரை கன்னட மொழிக்கு எதிரானவராகவும் உருவகப்படுத்துகிறார்கள். மார்க்ஸிய வரலாற்று அறிஞர்கள், ”திப்பு சுல்தான் விடுதலைப் போரின் முதல் முன்னோடி” மற்றும் புதிய பல பயனுள்ள பணிகளின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்கின்றனர்.
திப்புவை, சகிப்பின்மையின் அடையாளமாக, மதப் பிடிவாதம் கொண்டவராக நிச்சயமாக சுருக்க முடியாது. ஏனெனில் அவர் பல பாரம்பரியங்களை, கலாச்சாரங்களைப் பிரதிபலித்துள்ளார். மதங்களின் இடையிலான பாரம்பரியங்கள், மதநல்லிணக்க பாரம்பரியங்கள், காலணியாதிக்க எதிர்ப்பு மற்றும் சர்வதேசியவாதம் ஆகியவற்றை ஒன்றிணைத்துக் கடைபிடித்தவர் திப்பு. சூஃபி வழியில் அதிகம் நாட்டம் கொண்ட திப்புவின் இத்தகைய சிந்தனைகளை பல வரலாற்று ஆசிரியர்கள் வெளிக்கொணரவில்லை. சூஃபியிசத்தின் சிஸ்டி/பண்டே நவாஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் திப்பு சுல்தான்.
மத, அரசியல் ரீதியான காரணங்களுக்காக இல்லாமல், மக்களின் மன நலத்திற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் முதன்முதலாக “மதுவிலக்கை” அவரது ஆளுகைக்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் அமல்படுத்தினார் திப்பு. முழு மதுவிலக்கு என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என அறிவித்தவர் திப்பு. ராக்கெட், ஏவுகணைத் தொழில்நுட்பத்தை முதன்முதலாக போரில் அறிமுகப்படுத்தியவர் திப்பு. மைசூர் நகரத்தில் பட்டு உற்பத்தியை அறிமுகப்படுத்தியவர். மடங்கள் உட்பட மேட்டுக்குடிகளிடம் இருந்து அளவுக்கு மீறிய சொத்துக்களை பறிமுதல் செய்து, மக்களிடம் பகிர்ந்தளித்தவர் திப்பு சுல்தான். சமூகம் பாளையக்காரர் முறையில் மூழ்கியிருந்தபோது, முதலாளித்துவக் கூறுகளுக்கு வித்திட்டவர். தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணை இருக்கும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட திட்டமிட்டிருந்தார். பல்லுயிர் வாழும் லால் பாக் என்னும் தோட்டத்தையும் தனது காலத்தில் கட்டமைத்து முடித்தார் திப்பு சுல்தான்.
அவரது மதநல்லிணக்கம் 156 கோவில்களுக்கு நிலங்கள், ஆபரணங்கள் என அவர் அளித்துள்ள சொத்துக்களில் நன்கு புலப்படும். அவரது ராணுவத்தில் அதிகம் சூத்திரர்களே இருந்தனர். மராத்தா ராணுவத்தால் சிருங்கேரி மடம் படையெடுக்கப்பட்டபோது, சிருங்கேரி மடத்தின் புனித மூல சிலையை மறுபடி நிறுவுவதற்கும், மடத்தின் வழிபாட்டு முறைகளை மீண்டும் தொடர்வதற்கும் தாளாரமாக நிதி அளித்தார். நஞ்சாங்குட்டில், ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலுக்கு திப்பு அளித்த நன்கொடை, காஞ்சியில் கோவில் கட்டமைப்புப் பணியை முடிக்க அவர் அளித்த 10,000 பொற்காசுகள் நன்கொடை மற்றும் கலாலேவில் லஷ்மிகாந்தா கோவிலுக்கு அளித்த பரிசுகள் ஆகியவற்றைக் குறித்து அனைவரும் அறியமுடியும். மெல்கோட் கோவிலில் இரண்டு பிரிவு மதத்தலைவர்களுக்குள் நிகழ்ந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் திப்பு. ஸ்ரீரங்கப்பட்டிணம் தான் அவர் ஆட்சி புரியும் வரை அவரது தலைநகரமாக இருந்தது. மைசூரின் முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை கட்டியவர். பிரபல வரலாற்று அறிஞர் பி.ஏ சேல்டோர் திப்புவை ”இந்து தர்மத்தின் பாதுகாவலர் என விளிக்கிறார்”.
மக்களை வற்புறுத்தி மதமாற்றினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள், அரசியல் நெருக்கடிகளால் எழுப்பப்படுபவை. காலணியாதிக்கவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களால் திப்புவின் சிந்தாந்தம் திரித்து கூறப்பட்டது. வரலாற்று அறிஞர்கள் சிலர் தத்தமது அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, திப்புவின் மத ரீதியான செயல்பாடுகளைத் திரிக்கிறார்கள்.
அமெரிக்க, ஃபிரெஞ்சு புரட்சி, ஜேகோபினிசத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மன்னர் திப்பு ஒரு புதிர். 16 வருடங்கள் மட்டுமே ஆட்சி புரிந்த மன்னர் திப்பு, இன்றளவும் இந்துத்வவாதிகளுக்கும், மதத் தீவிரம் கொண்டவர்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கிறார். திப்பு தொடர்ச்சியாக அரசியல் விரிவுரை, அரசியல் விரிவறிக்கைகள் மற்றும் தேசக் கட்டுமானத்திற்கான கற்பனை ஆகியவற்றில் தொடர்ச்சியாக இடம்பிடித்து வருகிறார். முரண் நகை இங்குதான் உள்ளது - வெறும் வரலாற்றுப் பதிவேடுகளில் ஒருவரால் திப்புவைப் புதைத்து விடமுடியாது.
- முசாஃபர் ஆஸ்ஸாதி
முசாஃபர் ஆஸ்ஸாதி - பொலிட்டிக்கல் சயின்ஸ் துறைத் தலைவர், மைசூர் பல்கலைக்கழகம்.
தமிழில்: குணவதி, நன்றி: The Hindu



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.