Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு என வைகோ கூறியது ஏன்?- திருமாவளவன்


தேசிய தலித் முன்னணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருவமாளவன் சென்னை விமான நிலையம் சென்ற போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேசிய தலித் முன்னணி கூட்டம் திடீரென கூடுவதன் நோக்கம் என்ன?

ப:- இந்த முன்னணி 2006-ல் தொடங்கப்பட்டது. டெல்லியிலும் மும்பையிலும் ஏற்கனவே 2 மாநாடுகள் நடைப்பெற்றன. 3-வதுமாநாடு நவம்பர் 12-ந் தேதி அன்று சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத நிலையில் அது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எந்த தேதியில் நடத்துவது குறித்து முடிவு எடுக்க இன்றைய ஆலோசனை கூட்டம் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடக்கிறது.

கே:- தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் தே.மு.தி.கவிற்கு மக்கள் நலக்கூட்டணி ஆதரவு அளிக்குமா?

ப:- இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை. யாருக்கு ஆதரவளிப்பது என்றும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. புறக்கணிப்பு என்ற அடிப்படையில் தான் எமது கூட்டணி தொண்டர்களுக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்.

கே:- தே.மு.தி.க ஆதரவு கேட்டால் ஆதரவு கொடுப்பீர்களா?

ப:- இதுவரையில் அப்படி ஆதரவு கோரி தே.மு.தி.க தரப்பில் இருந்து அணுகவில்லை. அப்படி அணுகினால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கலந்து பேசி முடிவு செய்வோம்.

கே:- விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு என்று வைகோ கூறியிருக்கிறாரே?

ப:- தொடக்கத்தில் மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருந்தோம். பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டது. அதனால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம். இது பொதுமக்கள் இடை யே விமர்சனத்திற்கு உள்ளானது. முதலில் எடுத்து நிலைப்பாட்டை பின்னர் மாற்றிக்கொண்டது தவறு என்கிற பொருளில் அவர் கூறியிருக்கலாம்.

கே:- வைகோவை பிரேமலதா கடுமையாக சாடி இருக்கிறாரே?

ப:- பிரேமலதா விஜயகாந்தின் கருத்துக்கு வைகோ பதில் சொல்வார். இதில் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை.

கே:- மக்கள் நலக்கூட்டணியில் தற்போது ஒருமித்த கருத்து இல்லையே?

ப:- மாற்றுகருத்துக்கள் எழுவதால் மக்கள் நலக்கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கருதக்கூடாது. மாற்று கருத்துக்களை வெளிப்படையாக அனுமதிக்கிற ஜனநாயகம் மக்கள் நலக்கூட்டணியில் உள்ளது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

கே:- தஞ்சையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்பட்டு உள்ளதே?

ப:- குருவை, சம்பா ஆகிய இரண்டு போகங்கள் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. உடனடியாக அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமனம் செய்து டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்.

கே:- புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.கவை பிரசாரம் செய்ய விடாமல் புதுவை போலீஸ் தடுப்பதாக கூறப்படுகிறதே?

ப:- நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அ.தி.மு.கவினர் அந்த தொகுதியில் முகாமிட்டு இருப்பது தெரியவருகிறது.

தேர்தல் ஆணையம் வழக்கம் போல் வேடிக்கை பார்க்காமல் தொகுதி சாராத நபர்களை தொகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதிகளில் கூட தொகுதி சாராதவர்கள் முகாமிட்டு இருக்கின்றனர். அவர்களையும் வெளியேற்ற வேண்டும்.

கே:- பொதுசிவில் சட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப:- வருகிற 15-ந்தேதி அன்று பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சென்னையில் எனது தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகளின் துணை நிலைய அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. மாநாட்டில் மக்கள்நலக் கூட்டணி தலைவர்களும் மத சார்ப்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.