Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 25, 2016

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது: ‘புதிய ரூ.500 நோட்டுகள் முழுமையாக புழக்கத்துக்கு வர 6 மாத காலம் ஆகும்’; இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தகவல்


சென்னை,

புதிய ரூ.500 நோட்டுகள் முழுமையாக புழக்கத்துக்கு வர 6 மாத காலம் ஆகும் என்றும், இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது என்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.



கொடூர தாக்குதல்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் சாதாரண மக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பு சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாகவே உள்ளது.

பணத்தை மாற்றுவதற்காக வந்தவர்களில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை போலவே வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி உழைக்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறுமோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 மாத காலம் ஆகும்

புதிய ரூ.500 நோட்டுகள் வந்துவிட்டது என்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சேலத்தில் தனியார் வங்கி ஒன்றை தவிர மற்ற இடங்களில் இன்னும் புதிய ரூ.500 நோட்டுகள் வரவில்லை. மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய 4 இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

இந்த 4 இடங்களில் ஒரே நேரத்தில் 3 ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் அச்சடிக்கப்பட்டால் கூட முழுவதுமாக மக்களுடைய புழக்கத்துக்கு வர குறைந்தது 5 அல்லது 6 மாத காலம் ஆகும். இதை வைத்து பார்க்கும்போது நமக்கு தேவையான புதிய ரூ.500 நோட்டுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில்தான் கிடைக்கும் என்பது தான் உண்மை.

மூடி மறைக்கிறது

இந்த உண்மை மக்களிடம் சொல்லப்படவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது. அவர்கள் தேவையான நோட்டுகள் கையிருப்பில் உள்ளது என்று மாயையான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வங்கி ஊழியர்களையும், பொதுமக்களையும் நேர்எதிரே நிறுத்தும் மோசமான முயற்சியை செய்ய பார்க்கிறார்கள்.

258 பிக் பஜார்களில் ரூ.2,000 ஆயிரம் வரை நோட்டுகள் சப்ளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கொடுத்துவிட்டார்களா?. இதே அறிவிப்பை எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., ரெயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்யலாமே? இது எந்த உள்நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணத்தின் உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாமல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எந்த வித பலனையும் தராது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கள்ள பணத்தை ஒழித்துவிடும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.

தேசிய புலனாய்வு நிறுவனத்தின் சார்பில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, மொத்த பணத்தில் கருப்பு பணம் என்பது ரூ.400 கோடி தான். அதாவது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளின் மொத்த மதிப்பான ரூ.14 லட்சத்து 18 ஆயிரம் கோடி மதிப்பில் இது வெறும் 0.028 சதவீதம் மட்டும் தான்.

இதுவரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் பணி மட்டும் தான் நடைபெற்று வருகிறது. இதனால் 3-வது காலாண்டில் வங்கிகள் அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும். இதை ஒரு காரணமாக வைத்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்யும்.

கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர இந்த அரசாங்கத்துக்கு எந்த அரசியல் உறுதியும் இல்லை. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று இந்த அரசாங்கத்தின் முடிவு கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிப்பதற்காகத்தான் என்று நம்புவது கடினமாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.