Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

கோவை ரெயில் நிலைய நெருக்கடிக்கு தீர்வு காண புதைந்து போன ரெயில்பாதை புழக்கத்துக்கு வருமா?


கோவை ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மக்களை விழிபிதுங்க செய்து கொண்டிருக்கும் நேரத்தில் ரெயில்நிலைய நெருக்கடியும் தற்போது அதிகரித்துவருகிறது.இதற்கு உடனடி தீர்வு காணாவிட்டால் ஒரு கட்டத்தில் நகர போக்குவரத்து ஸ்தம்பித்து போவது உறுதி.இதற்கு பழைய ரெயில் பாதைகளை புதுப்பித்து மூடிகிடக்கும் ரெயில்நிலையங்களை திறப்பது என்பது நல்லதிட்டம்.

ஆங்கிலேயர் காலத்தில் கோவை ரெயில் நிலையத்துக்கு முதன்முதலாக போடப்பட்ட பைபாஸ் ரெயில்பாதை தற்போது கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. அதாவது இருகூர்–நஞ்சுண்டாபுரம்–கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அப்போது இருகூர்–பீளமேடு–வடகோவை வழியாக கோவைக்கு ரெயில் பாதை கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த இருகூர்–நஞ்சுண்டாபுரம்–கோவை ரெயில் பாதை தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.

நெருக்கடி போக்கப்படுமா?
கோவை–இருகூர்–போத்தனூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வடமாநிலங்களிலிருந்து வரும் ரெயில்கள் இருகூர் வந்து அதன் பின்னர் கோவை மற்றும் போத்தனூருக்கு செல்வதற்கு இரண்டாக பிரிகிறது. இருகூரிலிருந்து சிங்காநல்லூர் வழியாக போத்தனூருக்கும், இருகூரிலிருந்து பீளமேடு, வடகோவை, கோவை வழியாக போத்தனூருக்கு செல்லும் ரெயில்கள் கேரளா நோக்கி பயணமாகின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இருகூர்–நஞ்சுண்டாபுரம்–கோவை ரெயில் பாதை அகற்றப்பட்டு ரெயில் தண்டவாளங்கள் இல்லாமல் மாட்டு வண்டி செல்லும் அளவிற்கு சிறிய சாலையாக காட்சி அளிக்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன 1½ கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரெயில்பாதையை புதுப்பித்து அதில் தண்டவாளம் அமைத்தால் கோவை ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை போக்கலாம் என்றும் ரெயில்வே துறைக்கு பொருளாதார ரீதியாக மிச்சமாகும் என்று இந்தியன் ரெயில்வே தகவல் அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

என்ஜினை மாற்ற வேண்டிய அவசியமில்லை
இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஜெயராஜ், டாக்டர் நசீர், கார்த்திக் சித்தார்த், கோகிலன், முத்து ஆகியோர் கூறியதாவது:–

ஆங்கிலேயர் காலத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற மிக நீண்ட தூர ரெயில் நஞ்சுண்டாபுரம் பைபாஸ் ரெயில் தண்டவாளத்தில் தான் ஓடியது. இது கோவை–போத்தனூர் இடையேயான ரெயில் பாதையிலிருந்து நஞ்சுண்டாபுரத்திலிருந்து பிரிந்து கோவைக்கு அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை இருகூர்–கோவை ரெயில் பாதைக்கு பைபாஸ் ரெயில் பாதையாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதையில் ரெயில்களை இயக்கினால் கோவையிலிருந்து ஈரோடு செல்லும் ரெயில்களின் பயண நேரம் 20 நிமிடங்கள் மிச்சமாவதோடு, 10 கிலோ மீட்டர் தூரம் குறையும்.

சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவை ரெயில் நிலையம் வந்தவுடன் அதன் என்ஜினை ரெயில் பெட்டியின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்கு மாற்ற வேண்டியுள்ளது. இதனால் அந்த ரெயில் கோவை வந்தாலும் மேட்டுப்பாளையம் புறப்படுவதற்கு சிறிது நேரமாகும். ஆனால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இந்த பாதை வழியாக இயக்கினால் கோவை ரெயில் நிலையத்தில் என்ஜினை மாற்ற வேண்டிய அவசியமிருக்காது. தற்போது போத்தனூர்– இருகூர் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் எதிர்கால தேவைக்கு இந்த பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரெயில்பாதையை நீட்டிக்கலாம்
தற்போது கோவை–போத்தனூர் இடையே மூன்று ரெயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு ரெயில்பாதைகள் போத்தனூர் வரை செல்கிறது. ஒரு ரெயில்பாதை வாலாங்குளம் அருகே பாதியிலேயே விடப்பட்டு இருக்கும். இது எதற்கு என்றால் கோவை ரெயில் நிலையத்துக்கு முதல் நடைமேடையில் வரும் ரெயிலை 2–வது நடைமேடைக்கு மாற்றும் ‘ஷண்டிங்’ பயன்பாட்டிற்காக இந்த ரெயில் பாதை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வாலாங்குளம் அருகே விடப்பட்ட அந்த மூன்றாவது ரெயில் பாதையை நீட்டித்து பயன்படுத்தப்படாமல் உள்ள நஞ்சுண்டாபுரம் பைபாஸ் ரெயில் பாதையுடன் இணைத்து விட்டால் கோவை ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை வெகுவாக குறைக்க முடியும்.

அதாவது கோவை ரெயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ், 6.15 மணிக்கு புறப்படும் சென்னை செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், 6.30 மணிக்கு மங்களூரிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவை ரெயில் நிலையத்தின் 3 நடைமேடைகளில் நிற்கும்.

காத்திருக்கும் ரெயில்கள்
அந்த நேரத்தில் கோவை நோக்கி வரும் சேரன் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவை ரெயில் நிலையத்துக்குள் வருவதற்கு இடம் கிடைக்காததால் அந்த 3 ரெயில்களும் இருகூர், பீளமேடு, வடகோவை ஆகிய ரெயில் நிலையங்களில் காலை 7 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் கோவை வரும் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்தாலும் அது கோவைக்கு வந்து சேர முடியாமல் பயணிகள் அவதிப்படும் நிலை அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற நெருக்கடிகள் காலையில் மட்டுமல்லாமல், மதியம். இரவு நேரங்களிலும் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை தவிர்க்க வேண்டுமென்றால் கட்டாந்தரையாக காட்சி அளிக்கும் இருகூர்–நஞ்சுண்டாபுரம்–கோவை பைபாஸ் ரெயில் பாதையில் தண்டவாளங்களை அமைத்தால் சில ரெயில்களை அதன் வழியாக கோவை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரலாம்.

இந்த ரெயில் பாதையை அமைக்க அதிக செலவு ஏற்படாது. ஏற்கனவே அங்கு ரெயில்வே நிலம் உள்ளது. எனவே சேலம் கோட்ட அளவிலேயே இந்த புதிய பாதையை ரெயில்வே நிர்வாகம் அமைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.